Wednesday, 28 March 2018
பரிட்சையில் தோல்வியா...?
எஸ்.பி.எம். பரிட்சை முடிவுகள் வெளியாகிவிட்டன. பல வெற்றிகள் அதே சமயத்தில் அதற்கு ஈடாகப் பல தோல்விகள்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! வெற்றி பெற்ற மாணவர்கள் இந்நேரம் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியிருப்பார்கள்.
வெற்றி பெறாத மாணவர்கள் "இனி என்ன செய்யலாம்" என்று நினைப்பவர்கள் உண்டு. "அவ்வளவு தான்! இனி செய்ய ஒன்றுமில்லை!" என்பவர்கள் உண்டு. "அதான்! தோத்துட்டான் இல்லை! இனி வேலைக்குப் போய் சம்பாதிக்கட்டும்!" என்று பெற்றோர் சொல்லாவிட்டாலும் ஏதோ கமிஷன் கிடைக்கும் என்று பக்கத்து வீட்டு பரமசிவம் சொல்லுவதைக் கேட்பவர்களும் உண்டு.
வழிகாட்டுதல் இல்லை! ஆயிரம் இயக்கங்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு மட்டும் தான் கவனத்தில் கொள்கின்றனர்.
நமது சமுதாயம் - குறிப்பாகச் சொன்னால் தமிழர் சமுதாயம் - மதுவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் கல்விக்குக் கொடுப்பதில்லை! ஒரு சிலர் கல்வியின் முக்கியத்துவம் அறிந்திருக்கின்றனர். ஆனால் அவர்களை ஏமாற்ற ஏகப்பட்ட போலிக் கல்லுரிகள் வரிசையில் நிற்கின்றன!
தோற்றுப்போனாலும் அவர்களைக் கரையேற்ற அரசாங்கம் நிறையவே தொழிற் கல்லூரிகளை ஏற்படுத்தியிருக்கின்றது. நீங்கள் உங்கள் கைப்பணத்தைப் போட்டு செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. தேவை எல்லாம் கொஞ்சம் முயற்சி எடுக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்தாவது பெற்றோர்கள் முயற்சிகள் எடுக்க வேண்டும். எல்லாம் வீட்டுப் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்னும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.' வெளியே போனால் கெட்டுப் போவான்' என்று உங்கள் பிள்ளைகள் பற்றியான தவறான எண்ணம் வேண்டாம். தைரியமாக, வெளி மாநிலமாக இருந்தாலும், அவர்களை அனுப்பி வையுங்கள். படிக்கட்டும்.
படிப்பதற்கு வெறும் கல்லூரிகளை மட்டும் அரசாங்கம் நடத்தவில்லை அதற்கு மேலும் அவர்களுக்கு மாதா மாதம் செலுவுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை அரசாங்கம் கொடுக்கின்றது. காரணம் தோல்வியடையும் மாணவர்களில் பெரும்பாலும் பொருளாதார ரீதியில் பின் தள்ளப்பட்டவர்களாகவே இருக்கின்றனர்.
வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. இப்படித் தோல்வியடைந்த மாணவர்களுக்காக அரசாங்கம் நிறையவே செய்கின்றது.. பெற்றோரிடையே விழிப்புணர்ச்சி இல்லை. மாணவர்களிடையே தமிழ்ச் சினிமாவைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. ஒன்றும் தெரியாவிட்டாலும் உங்கள் பள்ளி ஆசிரியர்களைக் கேளுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவர்கள்.
கல்வி கற்ற சமுதாயம் என்பது மிக மிக முக்கியம்! பரிட்சையில் தோல்வி என்றாலும் வெற்றி பெற மற்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! வெற்றி பெற வாழ்த்துகள்!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment