Friday, 9 March 2018
வாழ்த்துகள், செல்வங்களே!
எஸ்.டி.பி.எம். தேர்வில் நல்ல பல புள்ளிகள் பெற்று இந்திய சமுதாயத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள் பல மாணவ, மாணவியர். கடைசியாகக் கிடைத்த செய்தியின் படி ஒரு மாணவர் 5A எடுத்திருக்கிறார். எல்லாமே நல்ல செய்திகள் தாம்.
இது போன்ற சிறப்பான தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களை நமது பல்கலைக்கழகங்கள் எப்படிப் பார்க்கின்றன? இவர்களை ஒரு பொருட்டாகக் கூடப் பார்ப்பதில்லை என்பது தான் உண்மை! ஏன்? இவர்கள் அனைவருமே மருத்துவ படிப்புக்குத் தான் விண்ணப்பம் செய்வார்கள் என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்! ஆனால் அவர்கள் சிறப்பாகத் தேர்ச்சி பெறுகின்ற மாணவர்களுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை என்பது தான் நமது முந்தைய அனுபவம். இரண்டாந்தர, மூன்றாந்தர மாணவர்களுக்கே மருத்துவம் பயில வாய்ப்புக்கள் அதிகம் கொடுக்கப்படுகின்றன என்பதை நாம் எல்லாக் காலங்களிலும் சொல்லிக் கொண்டும், புலம்பிக்கொண்டும் இருப்பது ஒன்றும் புதிது அல்ல!
ஆனால் இது கடந்த காலங்களில் நடந்தவை. நடந்தவை நடந்தவைகளாகவே இருக்கட்டும். பழயதைக் கிளறுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. இந்தப் புதிய ஆண்டில் அனைத்தும் மாறும் என நம்பிக்கையோடு எதிர்கொள்வோம். சிறப்பாகத் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு இந்த ஆண்டில் நல்லதொரு வழிகாட்டுதல் கிடைக்கும் என எதிர்பார்ப்போம்.
வசதிப் பெற்ற மாணவர்கள் வெளி நாடுகளுக்குக் கல்வி கற்கப் போவது ஒன்றும் பிரச்சனையல்ல. இதில் பெரும்பாலும் ஏழை மாணவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் சொத்துக்களை விற்று பிள்ளைகளைப் படிக்க வைக்கின்றனர். ஆனால் இதில் கவனம் தேவை. சொத்துக்களை விற்றுப் படிக்க அனுப்பும் போது அவன் உங்கள் வீட்டுப் பிள்ளை. டாக்டராகி அவன் திரும்பும் போது உங்கள் வீட்டுப்பிள்ளையாகப் பெரும்பாலும் அவன் இருக்கமாட்டான்!
எப்படி இருந்தாலும் சாதனைப் படைத்த மாணவர்களுக்கு நமது பாராட்டுக்கள்! நீங்கள் கற்ற கல்வி வீண் போகாது என்பதை நம்புங்கள். இன்று உங்கள் ஆசை நிறைவேறவில்லை என்றாலும் நாளை நிறைவேறலாம். நிறைவேறுமா, நிறைவேறாதா என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது!
சமுதாயத்தைப் பெருமைப்பட வைத்த செல்வங்களுக்கு, நமது வாழ்த்துகள்!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment