Saturday, 31 March 2018
சாதி வேண்டாம்! மதம் வேண்டாம்! போ!
இது இந்தியாவிலுள்ள கேரள மாணவர்களிடையே ஏற்பட்டிருக்கும் ஒரு புதிய மாற்றமா, விழிப்புணர்ச்சியா எப்படி சொல்லுவதென்று தெரியவில்லை!
"சாதியும் வேண்டாம்! மதமும் வேண்டாம்! போ!" என்று ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்! இந்த புதிய 2017-2018 கல்வி ஆண்டின் புதிய சேர்க்கையில் சுமார் 1.24 இலட்சம் மாணவர்கள் ( நமது உள்ளூர் மொழியில் 124,000 ஆயிரம்) தங்களது விண்ணப்ப பாரங்களில் தங்களுக்குச் சாதியும் இல்லை, மதமும் இல்லை என்று கூறியிருக்கிறார்கள்!
இது சரியா, தவறா என்றெல்லாம் கேள்விகள் கேட்டு விவாதம் செய்வதில் அர்த்தமில்லை. ஏதோ ஒன்று சரியான பாதையில் செல்லுவதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.
கேரளாவில் படித்தவர்கள் அதிகம். 95 விழுக்காடு மக்கள் படித்தவர்கள். படித்தவர்கள் வீட்டுப் பிள்ளைகள் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
வருங்காலத் தலைமுறை சாதிக்குச் சவுக்குமணி அடிக்க வேண்டும் என்று நினப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இத்தனை ஆண்டுகள் கட்டிக் கொண்டு அழுதோம். அது எங்கேயாவது நிறுத்தப்பட வேண்டும். கல்வி அமைச்சின் அறிவிப்பின் படி இந்த வேண்டாம் "சாதி,மதம்" என்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டு வருவதாகக் கூறுகின்றது. நல்ல செய்தி.
தமிழ் நாட்டில் இது சாத்தியமா என்றால் இது சாத்தியமே. தேவை ஒரு தொடக்கம். தமிழ் நாட்டில் சாதி என்பது அரசியல். சாதியை வளர்த்தவர்களே அரசியல்வாதிகள் தான். அதனால் அவர்களால் சாதியை ஒழிக்க எந்த முயற்சியும் எடுக்கமாட்டார்கள். இனி அது மாணவர்கள் கையில் தான் இருக்கிறது.
கேரள மாணவர்களின் சாதி ஒழிப்பு வரவேற்கக் கூடிய ஒன்று. மதங்களை ஒழித்து விட முடியுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம். இதில் முக்கியமானது சாதி ஒழிப்பு என்பதாகவே நான் பார்க்கிறேன்.
கேரள மாணவர்கள் மட்டும் அல்ல, தமிழ் நாட்டு மாணவர்கள் மட்டும் அல்ல இந்தியாவிலுள்ள அத்தனை மாநிலங்களுள்ள மாணவர்களுக்கும் இந்த "வேண்டாம் சாதி, மதம்" சென்றடைய வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment