Monday, 9 July 2018
வேலையில்லா அரசியல்வாதிகள்...!
அரசியல்வாதிகளுக்கு வேலை இல்லை என்றால் என்ன செய்வார்கள்?
இப்போது அம்னோவில் உள்ள சிலர் என்ன செய்கிறார்களோ அதைத்தான் செய்வார்கள்! எல்லாம் முடிந்து விட்டது; நஜிப் பதவியில் இருக்கும் வரை அவரிடம் பொறுக்கித் தின்றார்கள்! இனி மேல் வரவுகள் பாதிக்கப்படும். செய்ய ஒன்றுமில்லை! இனி ஏதாவது ஒரு ஆர்ப்பாட்டாத்தை முன்னெடுக்க வேண்டும். இனி ஆர்ப்பாட்டம் தான் வரவைக் கொண்டு வரும்!
அம்னோவிடம் இன்னும் நிறைய பணம் இருப்பதாகத்தான் இவர்கள் நினைக்கிறார்கள். அதில் எதுவும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.நஜிப்பின் ஆதரவாளர்கள் ஒன்றா, இரண்டா? ஆதரவாளர்கள் என்றால் "உண்மையான" என்று சொல்ல முடியாது. அவரிடமிருந்து பணம் பெற்றவர்கள் எல்லாம் ஆதரவாளர்கள் தானே! அவர் கொடுத்த பணம் கொஞ்சமா, நஞ்சமா என்ன!
நஜிப் கொடுத்த பணம். அத்தோடு இன்னும் வரும் பணம். இதனையெல்லாம் கணக்குப் போட்டுத் தான் அவரின் ஆதரவாளர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்! என்ன தான் அம்னோவின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டாலும் அது அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி! இன்னும் எவ்வளவு அங்கிருந்து பிடுங்க முடியுமோ அதனைப் பிடுங்கி அந்தப் பணத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் வரையில் அவர்களின் "நியாயமான" ஆர்ப்பாட்டங்கள் தொடரும்!
சமீபத்தில் கையில் எடுத்திருக்கும் ஆர்ப்பாட்டம் சட்டத்துறைத் தலைவர், டோமி தோமஸ் அவர்களுக்கு தேசிய மொழி தெரியாது என்பது தான். இது என்ன உலக மகாப் பிரச்சனையா? சாதாரண, சராசரியான மலாய் அவரால் பேச முடியும் என்பதை அவர்களால் ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை? அந்த அளவிற்கு அவர்களுக்கு அறிவு மங்கிப்போய் விட்டதா! அவர் சொல்ல வருவதெல்லாம் அரசியல், சட்டப்பூர்வமான, முறையான தேசிய மொழியில் பேசுகின்ற மலாய் மொழி ஆற்றல் அவரிடம் இல்லை என்பது தான்.
சரி இனி இந்த வேலை வெட்டி இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? நஜிப் நீதிமன்றத்திற்கு வரும் போதும் போகும் போதும் கூட்டம் கூடி "நஜிப் குற்றமற்றவர், விடுதலை செய்!" என்று கூச்சல் போட்டு காவல்துறையை வம்புக்கு இழுப்பார்கள்! அங்கு தாங்கள் பெரிய "ஹீரோ" வாக காட்டிக் கொள்ளுவார்கள்! இப்படித்தான் முன்பு ஜமாலுடின் ஆர்பாட்டங்கள் செய்து இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்!
பொதுவாகவே வேலையில்லாத அரசியல்வாதிகள் எந்தக் காலத்திலும் வேலை செய்யும் எண்ணம் இல்லாதவர்கள்.கொஞ்சம்"பசை" உள்ள அரசியல்வாதிகளிடம் ஒட்டிக் கொண்டு காலத்தைப் போக்கும் தன்மை கொண்டவர்கள். அதனால் இவர்கள் வேலை எல்லாம் அறிக்கை விடுதல் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டி விடுதல் இது தான் இவர்களின் முக்கிய பணி! பாவம், இப்படியாவது இவர்கள் பிழைத்துப் போகட்டும்! ஆனால் அளவு மீறினால் இருக்கவே இருக்கிறது இரும்புக் கம்பி, கம்பி எண்ணுவதற்கு!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment