Wednesday 4 July 2018

ஏன் மூன்று அமைச்சர்கள்....?

நாடு சுதந்திரம்  பெற்ற பின்னர் வந்த  அமைச்சரவையில் இரு இந்திய அமைச்சர்கள் இருந்தார்கள். அதன் பின்னர் ஒன்றாக அது குறைந்தது. 

இப்போது பக்காத்தான் அமைச்சரவையில் இந்தியர்களின் அங்கத்துவம்  மூன்றாக அதிகரித்திருக்கிறது. நாடு சுதந்திரம் பெற்ற போது நாம் கேட்காமலேயே  இரண்டு கிடைத்தது. இடையில் கிடைத்த இரண்டையும் வேண்டாமென்று நாமே ஒதுக்கிவிட்டு ஒன்றாக இருப்பதில் மகிழ்ச்சி கொண்டோம்! இப்போது பக்காத்தான் அரசாங்கத்தில் நாம் எதிர்பாராமலேயே மூன்றாக கிடைத்ததும் மீண்டும் மகிழ்ச்சி அடைகிறோம்!

ஏன் நமக்கு இரண்டோ அல்லது மூன்று அமைச்சர்களோ தேவை என்று நாம் யோசித்ததுண்டா? அமைச்சர்கள் என்றால் அவர்கள் அனைத்து மலேசியர்களுக்கும் அமைச்சர்கள் தான்.  அவர்கள் இந்தியர்களுக்கு மட்டும் அல்ல. ஆனால் இரண்டு அமைச்சர்கள் என்னும் போது குறைந்தபட்சம் இரண்டு அமைச்சர்களும் கலந்து ஆலோசித்து இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக சில நன்மைகளைக் கொண்டு வர முடியும்.  ஒரு மூளையை விட இரண்டு மூளைகள் சேர்ந்தால்  இன்னும் சிறப்பாக இயங்கு முடியும் அல்லவா. அது தான் காரணம்.

ஒரு அமைச்சர் நம்மைப் பிரதிநிதித்த போது அவரால் நம்மைப் பற்றி சிந்திக்க முடியவில்லை.  அவரால் மத்திய அரசாங்கத்தை மட்டும் தான் பிரதிநிதிக்க முடிந்தது. இந்தியர்களைப் பற்றி சிந்திக்க நேரமில்லை. அதன் விளைவுகள் என்ன?  அவர் செய்ய வேண்டிய வேலைகளைக் குண்டர் கும்பல்கள் செய்ய ஆரம்பித்து விட்டன! அப்போது இந்திய சமுதாயத்திற்கு ஏற்பட்ட அந்த அடி இது நாள் வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது!

இப்போது தான் ஒளி தெரிய ஆரம்பித்திருக்கிறது. பச்சை விளக்கு எரிய ஆரம்பித்திருக்கிறது  மூன்று அமைச்சர்கள்!  குண்டர் கும்பல்கள் ஒளிய ஆரம்பித்திருக்கின்றன எனச் சொல்லலாம். இனி அவர்கள் முற்றிலுமாக  ஒழிக்கப் படுவார்கள் என நம்பலாம். 

இப்போது குண்டர் ஒழிப்பு வேலைகளை அமைச்சர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள். அவர்களின் தேவைகளை அரசாங்கம் கொடுக்க வேண்டும். வேலை வாய்ப்புக்களை  ஏற்படுத்த வேண்டும். சீர்திருத்தப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும். போதைப்பித்தர்களுக்கு மறு வாழ்வு அளிக்க வேண்டும்.  இன்னும் காலித்தனம், குண்டர் கும்பல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் என்று பலர் இருக்கின்றனர்.

இவர்களையெல்லாம் சரியான பாதையில் கொண்டு செல்ல இந்த மூன்று அமைச்சர்களால் முடியும் என நம்பலாம். நமது சமுதாயத்திற்கு அவப்பெயரைக் கொண்டு வரும் இவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமையும் என நம்புகிறோம்! 

No comments:

Post a Comment