Friday 20 July 2018

நாம் அனைவரும் மலேசியரே!

பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி சொன்னது சரி தான். 

தீபகற்ப மலேசியாவாக இருந்தாலும் சரி,  கிழக்கு  மலேசியாவாக  இருந்தாலும்  சரி நாம்  ஒவ்வொரும் மலேசியரே! அதில் எந்த மாற்றமும் இல்லை. 

 ஆனாலும்  அது  ஏனோ  தீபகற்ப மலேசியாவைச்  சேர்ந்த  நமக்கு "நாம் அனைவரும் மலேசியர்"  என்று  சொல்லும்  போது  தீபகற்ப  மலேசியாவில்  உள்ளவர்களைத் தான் குறிப்பிடுகிறோம்! கிழக்கு மலேசியாவில்  உள்ளவர்களைப்  புறக்கணிக்கின்றோம்! அல்லது  வேறு  மாதிரியாக சொன்னால்  கிழக்கு  மலேசியா  ஒன்று  இருப்பதாகவே  நமது  நினைவிற்கு  வருவதில்லை!

அதில்  ஏதேனும்  அரசியல்  காரணங்கள்  இருக்குமோ?  குறிப்பாக ஒரு சில நமது  எதிர்கட்சி அரசியல்வாதிகள் சபா, சரவாக் மாநிலத்தில்  நுழைய மூடியாத சூழல் பாரிசான் ஆட்சியில் இருந்தது என்பது உண்மை. ஒரு சில  வழக்கறிஞர்கள் கூட  அனுமதிக்கப்படவில்லை.  அனுமதிக்கப்பட முடியாத  வேறு  பிரிவினர்  இருக்கின்றார்களா  என்பது தெரியவில்லை. 

ஒரே நாடு ஆனால் "அவருக்கு அனுமதி இல்லை, இவருக்கு அனுமதி  இல்லை"  என்னும்  பிரச்சனை  எப்படி  வந்தது? ஆனால்  தீபகற்ப  மலேசியாவுக்குள்  அவர்கள் இங்கு  வர  எந்தப்  பிரச்சனையும்  இல்லையே!  அங்கே   போவது  என்றால்  மட்டும்  தானே  பிரச்சனை!

காரணம்  ஒன்றே  ஒன்று  தான்.  இவைகள்  எல்லாம் ஆளும் அரசியல்வாதிகளால்   உருவாக்கப்  படும்  பிரச்சனைகள்!  "நாம்  அனைவரும்  மலேசியர்"  என்று  சொல்லுபவர்களும் அவர்கள்  தான்  சொல்லாதவர்களும்  அவர்கள்  தான்!

இப்போது  பிரதமர் துறை  அமைச்சர் வேதமூர்த்தி சொல்லியிருக்கிறார். சொன்னதோடு  நில்லாமல்  "ஒரே நாடு"  என்கிற  எண்ணத்தை  அவர்  உருவாக்க வேண்டும்.   மாநிலங்களுக்குத்  தனியாக  விடுமுறை என்பதெல்லாம் துடைத்தொழிக்க வேண்டும்.  மலேசியாவெங்கும்  ஒரே  விடுமுறை  தினங்களாக  இருக்க வேண்டும். தேசிய விடுமுறை என்பது  எல்லா மாநிலங்களுக்கும்  ஒன்றாக  இருக்கும் என  நான்  நம்புகிறேன்.  

சபா, சரவாக்  மாநிலங்களில் பல்வேறு  மொழிகள்  பேசுகின்ற  மக்கள் இருக்கின்றார்கள். பல்வேறு  இனங்கள். எல்லாமே  அங்குள்ள  பூர்வீகக்குடி மக்கள். பல்வேறு  சமயங்கள். இன்னும்  சரியானப்  பாதைகள்  இல்லாத பல  கிராமங்கள். பள்ளிக்கூடங்கள்  இல்லாத  கிராமங்கள். மருத்துவ வசதிகள்  இல்லாத  கிராமங்கள். இப்படி  மிகவும்  பின் தங்கிய மாநிலங்கள்  தான்  சபாவும், சரவாக்கும்.

என்ன செய்வது?  தவறான  அரசியல்  தான்  அந்த  நிலைக்குக்  காரணம். அது பாரிசான்  ஆட்சியில்.  இனி  புதிய  அரசங்கம் இவைகளை  எல்லாம்  சரி கட்டும்  என  நம்புவோம்.

நாம் அனைவரும்  மலேசியரே! 

No comments:

Post a Comment