Thursday 5 July 2018

ஐயா..! மேகத்தைக் காணோம்...!


நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மிகப் பிரபலமான நகைச்சுவையை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.

"ஐயா! என் கெணத்தைக் காணோம்!"

இப்போது இந்த செய்தியைப் படித்த போது அந்தக் கிணறு தான் ஞாபகத்திற்கு வந்தது! இப்படியும் நடக்குமா என்று அதிசயத்துப் போனேன்! ஆனாலும் இப்படியும் நடக்கிறது என்கிறார் ஈரான் நாட்டு இராணுவத் தலைவர்  பிரிகேடியர் ஜெனரல் கோலாம் ரிஸா ஜலாலி ! நம்பவும் முடியவில்லை!. நம்பாமலும் இருக்க முடியவில்லை! நவீன தொழில்நுட்பம் என்பது எதனையும் செய்யும் என்று ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் தான் நாம் இருக்கிறோம்!

அவரின் குற்றச்சாட்டு என்ன? ஈரான் நாட்டில் சமீப காலமாக மழை பெய்வது குறைந்து போனதற்கு இஸ்ரேல்,  ஈரான்  நாட்டை சூழும் மேகக்கூட்டங்களை இஸ்ரேல்  "திருடுவதாக" அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்! அவர் சொல்லுவதற்கு ஆதாரம் தனது பக்கத்து நாட்டில் எல்லாம் மழை பெய்யும் போது ஏன் ஈரான் நாட்டில் மட்டும் மழை பெய்யவில்லை என்பது தான் அவர் கேள்வி.

ஆனாலும் ஈரானின் வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் ஆஹாட் வாசிஃ இந்தக் கூற்றைப் புறந்தள்ளுகிறார்! இப்படியெல்லாம் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்கிறார் அவர். ஈரான் நாட்டில் நீண்ட நாட்களாகவே மழை இல்லை; வறண்டு கிடக்கிறது. இப்படி மேகத்தைத் திருடுவது, பனியைத் திருடுவது என்று பேசுவது நமது கையாலாகத்தனத்தைக் காட்டுகிறதே தவிர பிரச்சனைக்குத் தீர்வை நோக்கிச் செல்லப் போவதில்லை என்கிறார் வானிலை ஆய்வு மையத்தின் தலைவர்.

ஆமாம்,  ஈரானில் இப்படிப் பேசப்படுவது ஒன்றும் புதிதல்ல! மேகத்தைத் திருடுவது, பனியைத் திருடுவது, மழையைத் திருடுவது  என்பதெல்லாம் இஸ்ரேல் நாட்டைக் குற்றம் சாட்டும் போக்கே தவிர தங்களது நாட்டின் பிரச்சனையைக் களையும் நோக்கமில்லை! அதற்கான முன்னெடுப்பும் இல்லை! 

பிரச்சனையைத் தீர்க்கும் வரை இப்படியே புலம்பிக் கொண்டிருக்க வேண்டியது தான்! கடைசியில்  பாதிக்கப்படுபவர்கள் மக்கள்.   மக்களா? அவர்கள் யார்!

No comments:

Post a Comment