Thursday 26 July 2018

சட்டம் வருகிறது..ஜாக்கிரதை...!

நாடாளுமன்றத்தில் நல்லதொரு செய்தியைக் கூறியிருக்கிறார், பிரதமர் துறை அமைச்சர் முஜாஹிட் யூசோப் ராவா.

எந்த சமயத்தைப் பற்றியும், எந்த இனத்தைப் பற்றியும் சிறுமைப்படுத்துவதை நிறுத்தப்படும் நோக்கில் வெகு விரைவில் சட்டங்கள் கொண்டு வரப்படும் என்பதாக அமைச்சர் கூறியிருக்கிறார். அதுவும் சமயம் என்று வரும் போது "நீ பெருசு, நான் பெருசு" என்கிற நிலைமை இருக்கக் கூடாது என்பது முக்கியம்.

எல்லா சமயங்களுமே நல்லதைத் தான் பேசுகின்றன. "நீ திருடு" என்று எந்த சமயமும் சொல்லுவதில்லை. அதேபோல "மற்றவரைச் சுரண்டி தான் நீ வாழ வேண்டும்"  என்று எந்த சமயமும் சொல்லவில்லை.  "நான் பெரியவன் நீ சிறியவன், நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன், நான் தலைவன் நீ அடிமை" என்றெல்லாம் சமயங்கள் சொல்லுவதில்லை. அப்படி சொல்லுவது சமயங்களாக இருக்க முடியாது. 

ஆனால் எது எதுவெல்லாம் சமயங்களில் சொல்லப்பட வில்லையோ அவைகள் அனைத்தையும் கடைப்பிடிப்பவன் தான் மனிதன்!  எல்லாத் தவறுகளையும் மனிதன் செய்துவிட்டு, செய்த அத்தனைத் தவறுகளுக்கும்  மற்றவர்கள்  மீதோ அல்லது  மற்ற சமயத்தினர் மீதோ  பழிசுமத்துவது மிக இயல்பாகப் போய்விட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் காலில் அணியும் செருப்புகளில் இந்து சமய கடவுளின் படங்கள் வெளியாயின. அதற்கு இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அது ஒரு முறை தான் நடந்தது என்றால் மன்னித்து விடலாம். ஆனால் அது பல முறை நடந்தது. அரசாங்கம் இந்துக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை. "இஸ்லாம் மட்டும் தான் எங்கள் வேலை" என்று கழன்று கொண்டது. 

அதே போல சமீபத்திய ஸாகிர் நாயக்கின் சொற்பொழிவுகள் அனைத்தும் மற்ற மதத்தினரை அவமதிக்கப்படுவதாக அமைந்தன.  அதிலும் அரசாங்கம் ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்குத் தான் இது போன்ற சட்டங்கள் வருவதை நாம் வர வேற்கிறோம். ஒவ்வொருவரும் தங்கள் மதத்தை கொண்டாடட்டும், போற்றட்டும், புகழட்டும், புளகாங்கிதம் அடையட்டும்.! பிற மதங்களைப் பற்றி பிதற்ற வேண்டாம், பொல்லாங்கு பேச வேண்டாம்!

வர வேற்கிறோம்!

No comments:

Post a Comment