Friday 6 July 2018

வாக்களிக்கும் வயதை குறைக்க...!

 வாக்களிக்கும் வயதை குறைக்க வேண்டுமென அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாடிக். இப்போது நடைமுறையில் இருக்கும் 21 வயதை 18-ஆக குறைக்கும்படி அவர் ஆலோசனைக் கூறியிருக்கிறார்.

ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்தாகவே இதனை நான் கருதுகிறேன். அவர்களுக்குப் போதுமான அரசியல் விழிப்புணர்ச்சி இருக்காது என்கிற கருத்துக்களைப் புறந்தள்ளிவிட்டு அவர்களுக்கு அதற்கான விழிப்புணர்ச்சியை ஏற்படத்தப்பட  வேண்டும் என நான் கருதுகிறேன்.  இப்போதைய இளைஞர்களுக்கு  நல்ல விழிப்புணர்ச்சி உண்டு என்பதில் சந்தேகமில்லை.

18 வயது என்பது நல்ல துடிப்பான வயது. நாம் இத்தனை ஆண்டுகள் ஊழலுக்குப் பெயர் போன அரசாங்கத்தோடு அறுபது ஆண்டுகளை நகர்த்தி வந்திருக்கிறோம். நமது வயது அப்படி!  "பரவாயில்லை! பரவாயில்லை! காலம் வரும், நேரம் வரும்! இன்னோரு வாய்ப்புக் கொடுப்போம்! இவர்கள் திருந்துவார்கள்!"    

 ஆனால் அவர்கள் திருந்தவே இல்லை! அதனால் தான் நீண்ட காலம் பதவியிலிருந்த ஒரு அரசாங்கத்தைத் தூக்கி எறிய வேண்டிய  கட்டாயம் ஏற்பட்டது! அதிலும் இளைஞர் பட்டாளம் தான் மூர்க்கத்தனமாக அரசாங்கத்தை எதிர்த்தவர்கள்!

இதுவே 18 வயது இளசுகளாக இருந்தால் எப்போதோ இந்த அரசாங்கத்தை தூக்கி எறிந்திருப்பார்கள்!  ஆமாம் அவர்கள் தானே அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள்? கல்வியாகட்டும், வேலை வாய்ப்புக்களாகட்டும் ஏதோ ஒரு வகையில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இவர்கள் தான். முக்கியமாக கல்வி என்று வரும் போது அவர்களுக்குப் பலவிதமான பாதிப்புக்கள். கல்லூரிகளில் படிக்கத் தடை,  அவர்கள் விரும்பிய பாடங்களை எடுக்கத் தடை, மருத்துவம் முடியாது, தொழில் நுட்பம் முடியாது, அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் முடியாது.  எல்லாம் தனியார், தனியார் தனியார்! அப்படி என்றால் ...? ஏழை, நடுத்தரக் குடும்பங்கள்? இருப்பதை விற்று பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டிய நிலை. 

இதனையே எடுத்துக் கொண்டால் போதும். வக்களிப்பது 18 வயது என்றால் இப்படி ஒரு இழி நிலை நமக்கு ஏற்பட்டிருக்குமா? அதனால் இந்த 18 வயது என்பதை, அதுவும் நமது விளையாட்டுத்  துறை அமைச்சர் சைட் சாடிக்கின் கருத்தை நாம் ஆதரிப்போம்; வர வேற்போம்!

No comments:

Post a Comment