மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தொழிற்துறை பயிற்சி மையங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை மன நிறைவு அளிக்கவில்லை என்பதாகக் கூறியிருந்தார்.
வரவேற்கிறோம்! முன்னைய ஆட்சியில் இதனையெல்லாம் கண்டு கொள்ள ஆளில்லை! அப்போது கொஞ்சம் மன நிறைவு அளிக்கும் வகையில் நமது தலைவர்கள் முயற்சி எடுத்திருந்தால் இந்தப் பிரச்சனைக்கு நல்லதொரு முடிவைக் கண்டிருக்கலாம்.
இப்போது நமது அமைச்சர் ஒருவர் இது பற்றிப் பேசும் போது நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. ஆனால் இது முற்றிலும் நமது பெற்றோர்களின் தவறு அல்ல.
சமீபத்தில் ஒரு பயிற்சி மையத்தில் நமது ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் பேசும் போது மையத்தில் அறுநூறு மாணவர்கள் படிக்க வேண்டிய இடத்தில் சுமார் 300க்கு மேற்பட்ட மாணவர்களே படிக்கின்றார்கள் என்பதாகக் குறைபட்டுக் கொண்டார்.
இங்கு ஒன்றை நாம் ஞாபகப்படுத்த வேண்டும். பெற்றோர்களுக்கு நமது ஊடகங்களில் கொடுக்கப்படுகின்ற விளம்பரங்களே அதிகம் போய் சேருகின்றன. சான்றுக்கு வானொலிகளும், நாளிதழ்களும். அனைத்தும் இலவசம், இலவசம் என்பதாகவே நமது பெற்றோர்களுக்குச் செய்திகள் போய்ச் சேர்கின்றன. கடைசியில் பையன் சொல்லுகின்றானே (அவர்களுக்கு வேறு வாய்ப்புக்கள் இருப்பதும் தெரியவில்லை) என்கிற காரணத்தால் தனியார் மையங்களில் தனது பள்ளிக் கூட்டாளிகளுடன் போய் அரைகுறை பயிற்சியைப் பெறுகிறான்!
இன்னொரு கோணத்தில் பார்த்தால் அரசாங்க மையங்கள் இந்திய மாணவர்களை அவ்வளவாக வரவேற்பதில்லை. அதிலும் இந்த மையங்களின் தலைமை ஆசிரியர்கள் மலாய்க்காரர்களாக இருப்பதால் முடிந்தவரை அவர்கள் இந்திய மாணவர்களைத் தவிர்க்கவே விரும்புகின்றனர். ஏன்? இந்திய மாணவர்கள் தரமற்றக் கல்வியைப் பயிலத்தான் நிறைய தனியார் நிறுவனங்களுக்கு உரிமங்களைக் கொடுத்து அவர்களைக் கட்டாயமாகப் படிக்கின்ற ஒரு சூழலை உருவாக்கியவர்கள் யார்? கல்வி அமைச்சில் உள்ள அதிகாரிகள் தானே! அங்குத் தடை செய்தால் தான் இங்கு மாணவர்கள் கூடுவார்கள், ஆக, அவர்களுக்கும் "கமிஷன்" இவர்களுக்கும் கொள்ளை இலாபம்!
தொழிற்பயிற்சி மையங்களில் இந்திய மாணவர்கள் அதிகம் சேர வேண்டும். நமக்கு அதில் கருத்து வேறுபாடில்லை.ஒவ்வொரு மையத்திலும் பத்து விழுக்காடு இந்திய மாணவர்கள் கல்வி பயில வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட வேண்டும்.
மனிதவள அமைச்சர் இனி இதில் கவனம் செலுத்துவார் என்று நம்புவோம். அவருடைய கவனம் பல திசைகளில் சிதறடிக்கப்படுகின்றது என்பது நமக்குப் புரிகிறது. ஆனாலும் இதுவும் முக்கியம் என்பதே நமது வேண்டுகோள்!
No comments:
Post a Comment