Thursday 12 July 2018

எங்கள் மாநிலத்தில் பணம் உண்டு...!

பயப்பட வேண்டாம்! மலேசியாவை நஜிப் கடன்கார நாடாக ஆக்கியிருக்கலாம். ஆனால் எங்கள் நெகிரி செம்பிலான் மாநிலத்துக்கு அவர் என்ன கெடுதல்கள் செய்திருக்கிறார் என்று தெரியவில்லை! எங்கள் மாநிலம் எப்போதும் போல, பாரிசான் ஆட்சியில் எப்படி இருந்ததோ, அதே போல ஏறக்குறைய பாரிசானின் நீட்சியைப் போல இயங்குகிறது என்று தாராளமாகச் சொல்லலாம்!

எதனை வைத்து இதனைச் சொல்லுகிறேன்? ஆமாம், ஹரிராயா பெருநாள் காலத்தில் பாரிசான் ஆட்சியில் என்ன நடந்ததோ,  எந்த வித்தியாசமும் இல்லாமல் அது தொடர்ந்தது, தொடர்கிறது என்று தாராளாமாகச் சொல்லலாம்!

மத்திய அரசாங்கம் சிக்கனத்தைக் கடைப்பிடித்த வேளையில் எங்கள் மாநிலம் வழக்கம் போல மிகவும் தாராளமாக நடந்து கொண்டது எனச் சொல்லலாம். ஆமாம், வீதியெங்கும் நோன்பு நாள் வாழ்த்துப் பதாகைகள், மாநில முதல்வரின் வாழ்த்துகள் என்று ஒரு பக்கம்.

அதனைக் கூட மறந்து விடலாம்.  ஆனால் இவர்கள் நோன்புப் பெருநாள் என்று சொல்லி விருந்துகள் ஏற்பாடுகள் செய்கிறார்களே அது கொஞ்சம் "ஒவர்" என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் நான் இருக்கின்ற தொகுதி என்பது நூறு விழுக்காடு அம்னோவினரின் கையில்! எப்படி? நாடாளுமன்றம், சட்டமன்றம் அனைத்தும் அம்னோவின் கையில்! சரி, போகட்டும்!  விருந்து எப்படி ஏற்பாடு செய்திருந்தனர்?  அம்னோ காலத்தில் எப்படி செய்வார்களோ அதே பாணி, அதே வீணடிப்பு!  அது அம்னோவின் விருந்து உபசரிப்பு  என்று தான் சொல்ல வேண்டுமே தவிர, பக்காத்தான் உபசரிப்பாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை! ஒரு மாற்றமும் இல்லை!  உண்மையைச் சொன்னால் நெகிரி மாநிலம் அம்னோ பாணியைத்தான் கடைப்பிடிக்கும் என்பது தான் நமது கணிப்பு!

சரி, நமது இந்திய பிரதிநிதிகளின் நிலைமை என்ன? பாரிசான் ஆட்சியில் நாம் அவர்களைக் குறை சொல்ல வழியில்லை. காரணம் அவர்களுக்கு எந்த நிதியும் கொடுக்கப்படுவதில்லை. எந்த அதிகாரமும் இல்லை. அதனால் நாமும் வாயை மூடிக் கொண்டு சும்மா இருந்து விட்டோம். இனி மேல் அப்படி இருக்க முடியாது. அதிகாரம் இவர்கள் கையில். இவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கப் போகிறது என்று ஒவ்வொருவரும் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு துணை சபாநாயகர், இரண்டு ஆட்சிக்குழு உறுப்பினர் என்பதெல்லாம் நமக்குப் பெருமை அல்ல. இவர்களின் செயல்பாடுகள் என்பது தான் முக்கியம். தனியார் நிலத்தில் இருக்கும் ஒரு கோயில் உடைபடும் போது "ஏன்? உடைப்பதைத் தடுக்கிறீர்கள்?" என்று கேட்டாராம் துணை சபாநாயகர்! அது பத்திரிக்கைச் செய்தி. அதற்கு மாற்று வழி என்ன என்று யோசித்து ஒரு முடிவை எடுக்க வேண்டுமே தவிர உடைப்பதற்கு வழி காட்டக் கூடாது!

எப்படியோ,  நெகிரி மாநிலத்தில் பணத்தட்டுப்பாடு இல்லை என்பதற்காக இந்திய இயக்கங்களுக்குப் பணம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். அது பாரிசான் காட்டிய வழி! அதனால் மக்களுக்குப் பயன் இல்லை என்பதை ஏற்கனவே தெரிந்து கொண்டோம்! 

தமிழ்ப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த பணத்தைச் செலவு செய்யுங்கள். தரமான கட்டடங்கள், உபகரணங்கள், மேசை நாற்காலிகள் என்று இன்னும் பல பள்ளிகள் உங்களின் உதவியை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றன. 

நமது மாநிலத்தின் பணம் சரியான இடத்திற்குப் போய்ச் சேர வேண்டும். அதுவே நமது வேண்டுகோள்!

No comments:

Post a Comment