நீங்கள் இதனைப் படிக்கும் போது உங்கள் ஊரிலும் இது போன்று நடந்திருக்கலாம், அல்லது நடக்கலாம்! இன்றைய நிலையில் எதுவும் நடக்கலாம்!
இப்போது நான் குடியிருக்கும் இடத்தில் சுமார் இருபத்தாறு ஆண்டுகளாக குடியிருக்கிறேன். பதினான்காவது பொதுத் தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பு இங்கு இருந்த ஒரே வங்கியான BSN வங்கியை மூடிவிட்டார்கள்! காரணம் வாடகை அதிகரிப்பை வங்கியால் கட்ட முடியவில்லையாம்! அதனால் மக்களுக்குப் பெரிய பாதிப்பு வரும் என்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்பட வில்லை! அங்கு தான் நிற்கிறது நமது முன்னாள் பாரிசான் அரசாங்கம்!
எங்கள் குடியிருப்பில் ஓர் அஞ்சலகமும் நீண்ட நாட்களுக்காகப் பயன்பாட்டில் இருக்கிறது. அதுவும் ஓர் இருபது வருடங்களுக்கு மேலாக. இன்னும் அதன் சேவை தொடர்கிறது. அதுவே எங்களின் பல பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கிறது.
அந்த அஞ்சலகத்தில் - பொதுவாகச் சொல்லப் போனால் - அங்கு வேலை செய்பவர்கள் அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரை, மலாய்க்காரர்கள் மட்டுமே. காரணம் அது மலாய்க்காரர்கள் அதிகமாக வசிக்கும் இடம் என்று - நாங்கள் சொல்லவில்லை - அவர்களே சொல்லிக் கொள்ளுகிறார்கள்! ஏதோ அஞ்சலகத்தையே குத்தகை எடுத்துவிட்டது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார்கள்!
ஆனால் இன்று நான் அஞ்சலகத்திற்கு ஒரு வேலையாகப் போன போது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை! இது தான் முதன் முறை. ஒரு தமிழ் நண்பர் அங்கு வேலையில் இருந்ததைப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது! இப்படியும் நடக்கும் என்று நான் எண்ணிப் பார்த்ததில்லை!
அதெப்படி? அதெப்படி? தீடீரென அப்போது தான் ஞாபகத்திற்கு வந்தது. ஆமாம்! ஆமாம்! இப்போது தான் பாரிசான் அரசாங்கம் இல்லையே! இப்போது பக்காத்தான் அரசாங்கம் அல்லவா! அடாடா! ஓர் அரசாங்க மாற்றத்தில் இப்படியெல்லாம் நடக்குமா! நடந்திருக்கிறதே! இனி நடக்கும் என்பது தான் நமது எதிர்ப்பார்ப்பு.
இது என் கண் முன்னே நடந்த ஒரு மாற்றம். இது நாடெங்கும் நடைபெறுகிறது - நடைபெற வேண்டும் - என்பதே நமது கணிப்பு. ஆட்சி மாற்றம் மக்களுக்கு நல்லது கொண்டு வர வேண்டும். நல்லது செய்ய வேண்டும். இனி எல்லாத் துறைகளிலும் நமது பங்கும் இருக்க வேண்டும். எந்த ஒர் இனமும் எல்லாத் துறைகளிலும் ஆக்கிரமிப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பக்காத்தான் ஆட்சியில் இன்னும் பல அதிசயங்கள் நடைபெறும் என எதிர்ப்பார்க்கிறோம்!
நடக்கட்டும்! நல்லது நடக்கட்டும்!
No comments:
Post a Comment