கேள்வி
விஜய் அரசியலுக்கு வருவார் என்று சொல்லப்படுகிறதே!
பதில்
ஆமாம்! பழ கருப்பையா அப்படி சொல்லியிருக்கிறார்! இப்படி பேசுவதெல்லாம் இப்போது ஒரு பெருமையாக நினைக்கிறார்கள்!
ஏற்கனவே ரஜினி 'வருகிறார்! வருகிறார்!' என்று மணி ஓசை கேட்கிறதே தவிர 'வருவாரா! வரமாட்டாரா!' என்கிற சந்தேக ஓசையும் தொடர்ந்து கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது!
ரஜினியைத் தொடர்ந்து விஷால் 'வருகிறேன்! வருகிறேன்!' என்று சொன்னார்! இப்போது ஒரு சத்தத்தையும் காணோம்!
கமல்ஹாசன் வருகிறேன் என்று சொன்னார். சொன்னபடியே செய்தும் காட்டி விட்டார். கூட்டத்தைப் போட்டார். கட்சிக்கு ஒரு பெயரைச் சூட்டினார். அவர் ஒரு கட்சிக்குத் தலைவராகி விட்டார்! கட்சியின் பெயரைச் சொல்லி கருத்துக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார். மற்றவர்களை விட இவர் பரவாயில்லை. வழ வழ வென்று இழுத்துக் கொண்டிராமல் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்!
விஜய் நிலைமை இன்னும் மோசம். மிகப் பெரிய குழப்பத்தில் அவர் இருக்கிறார்! முடியுமா முடியாதா, வேண்டுமா வேண்டாமா, போவோமா போகவேண்டாமா இப்படி எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாமல் திண்டாடுகிறார்! இவர் வர மாட்டார் என்றே தோன்றுகிறது! இவர் சினிமாவில் அரசியல் பேசுவதோடு சரி. வர மாட்டார்!
என்னைக் கேட்டால் சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்லுவேன். இத்தனை ஆண்டுகள் நடிகர்கள் தானே தமிழ் நாட்டை ஆண்டார்கள்? தமிழ் நாட்டுக்கு என்ன முன்னேற்றத்தைக் கொண்டு வந்தார்கள்?
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் சினிமா நடிகர்கள். கருணாநிதி நாடக நடிகர். அனைவருமே நடிகர்கள் தாம். இவர்கள் தான் தமிழ் நாட்டை அதிக ஆண்டுகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்கள். இவர்களால் தமிழ் நாட்டுக்கு விளைந்த நன்மைகள் என்ன? இவர்கள் மூவருமே தமிழர்கள் அல்ல! தமிழர்களைச் சாராயம் குடிக்க வைத்து தள்ளாட வைத்தவர்கள். தமிழ் மொழியை அழித்தவர்கள். ஆங்கிலத்தை தனியார் கையில் கொடுத்து கமிஷன் வாங்கியவர்கள். . தமிழ் நாட்டைச் சுரண்டி தமிழர்களை ஏழையாய் ஆக்கியவர்கள். இவர்களால் எந்த ஒரு நல்ல காரியமும் தமிழ் நாட்டில் நடக்கவில்லை!
இந்த மூன்று முதலமைச்சர்களும் செய்ய முடியாத, செய்ய இயலாதவற்றை இனி புதிதாக வரவிருக்கும் இந்த சினிமா முதலைமைச்சர்களால் என்ன செய்ய முடியும்?
இனி தமிழ் நாட்டுக்கு எந்த சினிமா நடிகனும் முதலமைச்சராக வரக்கூடாது! முதலமைச்சரை சினிமா தியேட்டரில் தேட வேண்டாம் என்று தான் நானும் சொல்லுகிறேன்.
தமிழ் நாட்டுக்கு நல்லதொரு முதலமைச்ச்ரை - அதுவும் ஒரு தமிழனை - தேர்ந்து எடுங்கள் என்பது தான் எனது வேண்டுகோள்!
No comments:
Post a Comment