Tuesday 20 November 2018

நேர்வழி தான் தேவை...!

ம..இ.கா. தலைவர் விக்னேஸ்வரன் மீது ஒரு குற்றச்சாட்டு. விமான நிலயத்தில் வி.ஐ.பி. அறையைப் பயன்படுத்திய போது அவர் காலில் சிலிப்பர்  அணிந்து  கொண்டு போனார் என்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் ஒரு குற்றச்சாட்டை கொண்டு வந்தார். 

அப்போது இன்னொரு ம.இ.கா. தலைவர்,   "விக்னேஸ்வரனை கேட்கிறீர்களே இதே கேள்வியை டையிம் சம்சுடீனை பார்த்துக்  கேட்பீர்களா"  என்று எதிர் கேள்வியை எழுப்பினார்!

அது தான் ம.இ.கா.! நான் தவறு செய்வேன். என்னை யாரும்  கேள்வி கேட்கக்  கூடாது! அப்படி கேட்டால் நீங்கள் மட்டும் யோக்கியமா என்று எதிர் கேள்வி கேட்பேன்! அதிலும் அடாவடித்தனமான கேள்வி!

இதில் யார் சரி யார் தவறு என்பதல்ல கேள்வி. தவறு செய்தால் அதனை ஒப்புக்கொள்ள வேண்டும். இதற்கு முன்னர் நாங்கள் இப்படித்தான் செய்தோம். யாரும் எங்களைக் கேள்வி கேட்கவில்லை. இப்போது மட்டும்  என்ன கேள்வி என்று கேட்பது சரியான பதிலாகாது!

நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு நடந்து கொள்ள வேண்டும் என்றால் பொது மக்கள் பயன்படுத்தும் அறையைப் பயன்படுத்துங்களேன். என்ன குறைந்து போய்விட்டது?  நீங்கள் குறைந்து போகவில்லை,  நாட்டிம் முக்கியமான மனிதர் என்று நீங்கள் நினைத்தால் ஏன் நாட்டின் சட்டதிட்டங்களைப் பின்பற்றக் கூடாது?  

ஒரு கட்சியின் தலைவர் தொண்டர்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும்.  மேல்சபை சபாநாயகருக்கென்று ஒரு மரியாதைஉண்டு. அதனால் தான் அதற்கு ஏற்றவாறு உடைகளை அணிய வேண்டியுள்ளது. அப்படி அணியாவிட்டால் பதவிக்கு மரியாதை இல்லை.  ஏன் வெளியில் அவர் சபாநாயகர் இல்லை தான். அதற்காக பைத்தியக்காரனைப் போல நடந்து கொள்ள முடியாது! காரணம் அவர் சபாநாயகர் என்கிற அந்த கௌரவம் அவர் பதவியில் இருக்கும் வரை இருந்து கொண்டு தான் இருக்கும். அதற்கேற்றாற் போல, அந்தப் பதவிக்கு ஒரு மரியாதை கொடுக்க வேண்டியுள்ளதால், எந்நேரமும் தனது உடைகளில், நடையுடை பாவனைகளில் கவனம் செலுத்தித்தான் ஆக வேண்டும்.

இன்னும் கொஞ்சம் நாளைக்குத் தானே இந்தப் பதவி என்று அலட்சியம் காட்ட முடியாது. பதவியில் இருக்கும் வரை அதன் கௌரவம் காப்பாற்றப்பட வேண்டும்.
 
தலைவர்கள் என்பவர்கள் மற்றவர்களால் பின்பற்றப்பட வேண்டியவர்கள்.  தயவு செய்து அவர்களைத்   தவறான பாதைக்கு அழைத்து செல்லாதீர்கள். நீங்கள் காட்டுகின்ற வழியைத்தான் அவர்கள் பின்பற்றுவார்கள். உங்கள் வழி நேர்வழி என்றால் தொண்டர்களின் வழியும் நேராக, நேர்மையாக இருக்கும். இல்லையெனில் பாதை திசை மாறிப் போகும்.

தலைவர்களே! நேர்மை என்னும் நேர்வழியைத் தேர்ந்தெடுங்கள்! அது தான் அனைவருக்கும் நல்லது!

No comments:

Post a Comment