சீபீல்ட் ஆலயப் பிரச்சனை ஒரு நெருக்கடியான கட்டத்தை எட்டியிருக்கிறது.
அடிதடி, அடாவடித்தனம், வெட்டுக்குத்து என்று அனைத்தும் நிறைவேறியிருக்கின்றன. மிகவும் வேதனைக்குறிய சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன.
கேட்பதற்கு எதுவும் மகிழ்ச்சி அளிக்கவில்லை.
ஒன்றை மட்டும் நினவுபடுத்தலாம். நாம் ஓரு ஒற்றுமையற்ற சமூகம். சுயநலம் அதிகம். பொது நலத்தைப் பற்றி அக்கறை இல்லாதவர்கள். இவைகள் தான் மெத்த படித்தவர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்த பாடம்! சுயநல வாதிகள் இழுத்த இழுப்புக்கெல்லாம் நாம் ஆடிக் கொண்டிருக்கிறோம்!
இந்த ஆலய விவகாரத்தில் நமது பக்கம் நியாயம் இருந்தாலும் ஒரு சில காரணங்களைக் காட்டி நமது பக்கம் அந்த நியாயம் எடுபடாமல் போய்விடும். இது நாள் வரை நமது பக்கம் உள்ள நியாயங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன என்பது தான் வரலாறு. இனியும் அது தொடரலாம். காவல்துறை சொல்லுவது தான் சட்டமாகக் கருதப்படும்.
பல ஆலயங்கள் இப்படி தெருப் போராட்டத்திற்கு வந்து விட்டன. இந்த நேரத்தில் ஒன்றை நினைவு படுத்துகிறேன். யாழ்ப்பாணத் தமிழர்களின் கோவில்களில் இது போன்ற பிரச்சனைகள் இல்லை. செட்டியார் கோயில்களில் இந்தப் பிரச்சனைகள் இல்லை.
ஏன் நமக்கு மட்டும்? நமது கோயில்களின் வரலாறு தோட்டப்புறத்தில் இருந்து ஆராம்பமாகிறது. அந்தக் கோயில்களின் உரிமை நம்மிடம் இல்லை. அன்று நமது சாமிவேலு மட்டும் கொஞ்சம் விழிப்புடையவராக இருந்திருந்தால் அதனை மாற்றி அமைத்திருக்கலாம். கோயில்களை முறையாக அரசாங்கத்தில் பதிவு செய்திருக்கலாம். பள்ளிகளைக் கூட அரசாங்கத்தில் பதிவு செய்திருக்கலாம். எதுவும் செய்யவில்லை! அது நம்முடைய துரதிர்ஷ்டம்!
அன்று நமது தலைவர்கள் அசட்டையாக இருந்ததால் இன்று நாம் அரசாங்கத்துடம் மோத வேண்டிய சூழல்.
இந்த சீபீல்ட் ஆலயப் பிரச்சனையில் நாம் என்ன செய்யலாம்? ஒன்று அந்த கோயில் நிலத்தை நமக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். அந்த நிலத்தை வாங்கி கோயில் சொத்தாக மாற்றி அமைக்க வேண்டும். சொந்தமாக்கிக் கொள்ள முடியாத சூழல் என்றால் கோயிலை வேறு இடத்திற்குக் கொண்டு செல்ல மாற்று இடம் காண வேண்டும். வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. நிலம் யார் பெயரில் இருக்கிறதோ அவன் தான் அதன் உரிமையாளன். அவனை நம்மால் ஒன்று செய்ய முடியாது! சட்டம் அப்படித்தான் சொல்லுகிறது. நமக்கு நாலு அமைச்சர்கள் இருந்தாலும் அல்லது நாற்பது அமைச்சர்கள் இருந்தாலும் அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது! இறுதி தீர்ப்பு என்பது நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.
இந்த நேரத்தில் நாம் அமைதி காக்க வேண்டும். நமது நீதிமன்றம், நமது தலைவர்கள், நமது பிரதமர் - இப்படிப் பலர் இந்தப் பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கின்றனர். எதையாவது சொல்லி இன்னும் இன்னும் இழுத்துக் கொண்டு போவது நமக்கு நல்லதல்ல. பிரச்சனை ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
இனி வருங்காலங்களிலாவது இருக்கின்ற கோயில்களை முறையாக பதிவு செய்யுங்கள். சுயநலம் வேண்டாம். பொதுநலம் நாடுங்கள்.
அமைதி காக்க என்பதே நமது வேண்டுகோள்!
No comments:
Post a Comment