Monday 12 November 2018

கல்வி மீதான தாகம்...!

இந்தியாவின் கேரள மாநில மக்களின் கல்வித் தாகம் நம்மை வியக்க வைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

பள்ளிக்கூடமே செல்லாத ஒரு பாட்டியின் கதையைக் கேளுங்கள். அவர் பெயர் கார்த்தியாயினி அம்மாள். வயது 96. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது அவருடைய வயது.

நம்மைப் போன்ற சராசரி மனிதன் என்ன சொல்வான்?  இந்த வயதில் படித்து என்ன கிழிக்கப் போகிறீர்கள்; காடு வா வா என்கிறது வீடு போ போ என்கிறது என்பது சராசரிகளின் எண்ணம். ஆனால் சாதனை செய்ய நினைப்பவர்களுக்கு வயது ஒரு தடையே அல்ல!

அரசாங்கம் அறிமுகப்படுத்திய முதியோர் கல்வியைத் தனக்கு ஒரு வாய்ப்பாக கருதினார்.  அந்த வகுப்பில் கலந்து கொண்டார். பரிட்சையிலும் நல்ல தேர்ச்சி பெற்றார்.  அதிக மதிப்பெண்களைப் பெற்று "நல்ல மதிப்பெண்களைப் பெற்ற மகராசி!" என்று நல்ல பெயரையும் எடுத்து விட்டார்!

கல்வி கற்பதற்கு வயது ஒரு பொருட்டல்ல. எந்த வயதிலும் படிக்கலாம். கல்வி கற்கலாம். இங்குத் திரும்பி பார்க்கிறேன். ஆறாம் வகுப்பு வரை பள்ளியில் படித்தவன் தன்னைப் படிக்காதவன் என்கிறான்! தனது பெயரை எழுதத் தெரியவில்லை என்கிறான்!  "சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்" என்பார்கள்.  அவனுக்கு அது புரியவில்லை, என்ன செய்வது?

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்  பகத்சிங் அவர் சிறையில் மரண தண்டனையை எதிர் நோக்கியிருந்த போது கூட ஏதாவது புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பாராம்.  தூக்குத் தண்டனை நிறைவேற்றப் போகும் நேரத்தில்  அதிகாரிகளிடம் ஒரு பத்து நிமிடம் அவகாசம் கேட்டு அந்தப் பத்து நிமிடத்தில் ரஷ்ய புரட்சியாளர் லெனின் எழுதிய "அரசும் புரட்சியும்" என்னும் புத்தகத்தைப் படித்துவிட்டு வந்து தண்டனையை ஏற்றுக் கொண்டாராம். அவர் சொன்ன காரணம்: "சாகும் போது நான் முட்டாளாகச் சாக விரும்பவில்லை. புதிதாக ஒன்றைத் தெரிந்து கொண்டோம் என்னும் திருப்தி எனக்குப் போதும்" என்றாராம்.

இதனைத் தான் கார்த்தியாயினி பாட்டியும் செய்திருக்கிறார். சாகும் போது தான் கல்வி கற்றவராக இருக்க வேண்டும் என்னும் அந்த கல்வித் தாகம் தான் அவரை நல்ல மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைக்க வைத்திருக்கிறது!

கல்விக்கு வயதில்லை. கற்பதற்கு வயதில்லை. நேரங்காலம் இல்லை. ஒவ்வொரு நாளும் கல்வியே!

No comments:

Post a Comment