Tuesday 13 November 2018

அமைச்சரவையில் மாற்றமா...?

அமைச்சரவையில் ஏதேனும் மாற்றங்கள் உண்டா? மாற்றங்கள் வருமா?  என்றெல்லாம் காற்றுவாக்கில் வருகின்ற செய்திகள்.

செய்தியில் உண்மை இருக்குமா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் பெரும்பாலும் காற்று வாக்கில் வருகின்ற செய்திகள் பின்னர் உண்மை செய்திகளாக மாறுகின்றதை நாம் பார்க்கின்றோம்.

முதலில் அது வதந்தி பின்னர் அது நிஜம்!

உண்மையோ பொய்யோ  அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. அப்படி ஒர் அமைச்சரவை மாற்றம் ஏற்பட்டால் வழக்கம் போல நாம் கேட்க வேண்டியதை கேட்டுக் கொண்டு தான் இருப்போம்.  காரணம் பாதிக்கப்படுபவர்கள் நாம் தானே!

ஒரு கல்வித் துணை அமைச்சர் பதவி நமக்குத் தேவை என்பதாக பக்கத்தான் அரசாங்கம் எப்போது அமைந்ததோ அப்போதிருந்து நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். 

ஏற்கனவே நாம் வெறுத்து ஒதுக்கிய பாரிசான் அரசாங்கம் கூட ஒரு கல்வித் துணை அமைச்சர் பதவியை இந்தியர் ஒருவருக்குக் கொடுத்ததை நாம் மறுக்க முடியாது. அது ஒரு பொம்மை பதவி என்று சொன்னாலும் அந்தத் துணை அமைச்சரோடு நமது கல்வியாளர்கள் அவரோடு உட்கார்ந்து பேசுவதற்கான ஒரு வாய்ப்பு இருந்ததை நாம் மறுக்க இயலாது.  

ஆனால் இன்றைய நிலை என்ன? கல்வி அமைச்சரோடு நமது கல்வியாளர்கள் உட்கார்ந்து பேச வாய்ப்பில்லை! அவருக்கு நேரம் இல்லை.  அப்படியே பேச வேண்டுமானால் அவரது உதவியாளர்களோடு தான் பேச வேண்டும். அந்தப் பேச்சு வார்த்தைகள் அவ்வளவு திருப்திகரமாக அமையாது என்பது நமக்கும் தெரியும். 

ஓர் அமைச்சர் அல்லது ஒரு  துணை அமைச்சர் - இவர்களோடு நேரடியாகப் பேசுவதென்பது என்பது வேறு.  அவர்களுடைய உதவியாளர்களோடு பேசுவதென்பது வேறு. இன்று சீனக் கல்வியாளர்கள் அவர்களுடைய பிரச்சனைகளை நேரடியாக சீன துணைக் கல்வி அமைச்சரிடம்கொண்டுசெல்கின்றனர். அதைத்தான் சீனக் கல்வியாளர்கள் விரும்புகின்றனர். இந்தியக் கல்வியாளர்களும் அதைத்தான் விரும்புவர். 

நாங்கள் இந்தியர்களுக்கு நான்கு அமைச்சர் பதவி  கொடுத்து விட்டோம் என்று சொல்லி கைகழுவுகிற வேலை வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக் கொள்ளுகிறோம். கல்விக்காக ஓர் அமைச்சர் கிடைக்கும் வரை அல்லது குறைந்தபட்சம்  கல்விக்காக ஒரு நாடாளுமன்ற செயலாளர்  கிடைக்கும் வரை  அல்லது பிரதமர்  துறையில் தமிழ்ப்பள்ளிகளுக்காக  ஒரு இணை அமைச்சர் கிடைக்கும்வரை-ஒன்றைச் சொல்லலாம்-இந்தியர்களின் கோரிக்கை  நிறைவேற்றப்படவில்லை என்று பக்கத்தான் அரசாங்கத்திற்கு ஆணித்தரமாக சொல்லலாம்.

நமக்கு வேண்டியதெல்லாம் இனி எந்த மாற்றம் வந்தாலும் இந்தியர்களுக்கு கல்வித் துறை சார்ந்த ஒரு பதவி கொடுக்கப்பட வேண்டும் என்பதில் பக்கத்தான் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

அமைச்சரவை மாற்றமா - எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

No comments:

Post a Comment