Thursday 1 November 2018

மர்ம நிதி ஒதுக்கிடு...!

முன்னாள் பிர்தமர் நஜிப் பதின்மூன்று  தமிழ்ப்பள்ளிகளுக்கு 39.7 மில்லியன் வெள்ளி  ஒதுக்கப்பட்டிருப்பதாக  சொல்லுகிறார்.  அது என்னாயிற்று என்று கேள்வி எழுப்புகிறார். இப்போதைய கல்வி அமைச்சர்,  நஜீப் நீங்கள் ஒதுக்கிய அந்தப் பணத்தை என்ன செய்தீர்கள்?  எங்கே கொண்டு போனீர்கள்? என்று இவரும் கேள்வி எழுப்புகிறார்!

இந்த நேரத்தில் தமிழ்க்கல்வியின் காவலர் கமலநாதன் தனது தலைவர் நஜிப்புக்காக ஆதரவு கரம் நீட்டியிருக்கிறார். அந்தப் பணம் ஒதுக்கப்பட்டது என்பது உண்மை தான். சம்பந்தப்பட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கு 'மாதிரி' காசோலைகள்  கொடுக்கப்பட்டதும்  உண்மை தான். கடந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றிருந்தால்  இந்நேரம் அந்தப் பதின்மூன்று பள்ளிகளும் பல்கலைக்கழகங்களாக மாறியிருக்கும் என்று பெருமிதம் கொள்ளுகிறார்!

ஆமாம், என்ன தான் நடந்தது?  தேர்தல் நேரத்தின் போது  எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்னும் நோக்கத்தோடு,  இந்தியர்கள ஏமாறவேண்டும் என்னும் எண்ணத்தோடு,  பிரதமர் நஜிப் தனது ம.இ.கா. பரிவாரங்களோடு ஆங்காங்கே சென்று பல உறுதிமொழிகளைக்  கொடுத்தார்.  அவைகள் அனைத்தும் வெறும் வெற்று மொழிகளே! அதனை ம.இ.கா. வினரும் அறிவர். ஆனாலும் இப்போதும் அவர்களுக்கு மீசையில் மண் ஒட்டவில்லை என்பதாகப் பேசுகின்றனர்!

ஏற்கனவே பாரிசான் ஆட்சி காலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கு வாரி வாரி கொடுத்ததாக.கணக்குக் கொடுத்திருக்கிறார்கள்! எந்தத் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கொடுத்தீர்கள் என்றால் மட்டும் யாரும் வாய்த் திறப்பதில்லை! இத்தனைக்கும் அவைகள் எல்லாம் அமைச்சரவை அங்கீகரித்து, நிதியமைச்சு அங்கீகரித்து - இந்தனை அங்கீகாரம் கிடைத்தும் அந்தக் கோடிகள் பள்ளிகளுக்குப் போய்ச் சேரவில்லை என்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.

ஆனால் இந்த முறை - பொதுத் தேர்தலுக்கு முன்பாக பல அதிசயங்கள் நடந்தன. அதில் தான் இந்த அதிசயமும்!  இந்த 39.7 மில்லியன் வெள்ளி அமைச்சரவையில் பேசப்படவில்லை! நிதியமைச்சு எந்த ஒதுக்கிடும் செய்யவில்லை. ஆனால் 'மாதிரி' காசோலையெல்லாம் கொடுத்து ம.இ.கா.வினரையும் தமிழ்ப்பள்ளிகளையும் பிரதமர் மனதைக் குளிர வைத்துவிட்டார்! அப்படியே அவர்கள் வெற்றி பெற்று பதவிக்கு வந்திருந்தாலும் அந்தப் பணம்  தமிழ்ப்பள்ளிகளுக்குப் போய்ச் சேராது  என்பது ஊரறிந்த ரகசியம்!

எப்போது அந்தப் பள்ளிகளுக்கு நிதி உதவி போய்ச் சேரும்?  இப்போது சொல்லுவதற்கில்லை! அரசாங்கத்திடம் பணம் இல்லை!

பொறுத்திருப்போம்!

No comments:

Post a Comment