Sunday 18 November 2018

டாக்டர் ஸ்ரீராம் தான் பொருத்தமானவர்..!

ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் டாக்டர் ஸ்ரீராம் வேட்பாளாராக நிறுத்தப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான இந்திய மக்களின் விருப்பமாகும். அங்குப் போட்டியிட வேறு ஒரு வேட்பாளரைத் தேடிக் கொண்டிருப்பது சரியான தீர்வாக இருக்காது என்பதை கட்சியின் தலைமைத்துவம் உணர வேண்டும். 

ரந்தாவ் என்பது கணிசமான இந்தியர்களைக் கொண்ட தொகுதி. ரந்தாவ் தொகுதி என்றாலே அது இந்தியர்களின் தொகுதி என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியும். ஒரு வேளை தேர்தல் எல்லை சீரமப்பில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் ரந்தாவ் என்கிற பெயர் இந்தியர்களோடு ஒட்டிக் கொண்ட ஒரு பெயர். இதற்கு முன்னர் ஆளுங்கட்சியின் சார்பில் இந்தியர்கள் பலர் வெற்றி பெற்றிருக்கின்றனர். ஒரு கால கட்டத்தில் அய்யாக்கண்ணு, வேலு, முத்துப்பழனியப்பன் போன்றோர் ம.இ.கா. வேட்பாளர்களாக இதே தொகுதியில் வெற்றி வாகை சூடியிருக்கின்றனர்.

அது மீண்டும் இந்தியரின் தொகுதியாக மீட்டெடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பது ஒன்றும் கேலிக்குறிய விஷயமோ அல்லது எதிர்ப்பார்க்கக் கூடாத விஷயமோ அல்ல. நடந்து முடிந்த தேர்தலில் எந்த ஒரு மலாய்க்காரரும் வேட்பாளாராக நிறுத்த முடியாத  சூழலில் பி.கே.ஆர். டாக்டர் ஸ்ரீராமை தேர்ந்தெடுத்து நிறுத்தியது என்பதை மறந்து விட வேண்டாம். பொதுத் தேர்தலில் அவர் ஏமாற்றப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்.  நீதிமன்ற போராட்டங்களுக்குப் பின்னர் தான் அந்த தேர்தல் செல்லாது என நீதிமன்றம் அறிவித்தது.

இப்போது அந்தத் தொகுதியில்  போட்டியிட 'நீயா, நானா' போட்டிகள் நடக்கலாம். ஆனால் அந்தத் தொகுதிக்காக பெரும்பாடுப்பட்ட டாக்டர் ஸ்ரீராமை அவ்வளவு எளிதில் தூக்கி வீசுவது பி.கே.ஆருக்கு நல்லதல்ல.

இந்த நேரத்தில் இன்னொன்றையும் நாம் குறிப்பிட வேண்டும். போர்ட்டிக்சன் நாடாளுமன்ற தொகுதியை இப்போது இந்தியர்களின் கைகளிலிருந்து போய்விட்டது.  குறைந்து போன ஒரு நாடாளுமன்ற தொகுதியை குறைந்த பட்சம் ஒரு சட்டமன்ற தொகுதியை வைத்து ஈடுகட்டலாம். எல்லாம் பி.கே.ஆர் கையில்.

பி.கே.ஆர். சார்பில்  டாக்டர் ஸ்ரீராமே வேட்பாளராக நிறுத்தப்பட  வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. 

எங்களது எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கிறோம். 

No comments:

Post a Comment