ஒரு சில விஷயங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை! யார் முதலாளி?
ஒருவன் 48 தமிழகத் தொழிலாளர்களைக் கொத்தடிமையாக வைத்து வேலை வாங்கியிருக்கிறான். அதுவும் கடந்த நான்கு மாதங்களாக! காவல்துறை கண்டுபிடிக்க முடியவில்லை! இதுவே பாரிசான் ஆட்சி என்றால் நம்மால் புரிந்து கொள்ள முடியும். அங்குப் பணம் விளையாடும்! ஆனால் இப்போது புதிய அரசாங்கம். இது போன்ற பிரச்சனைகளே வரக்கூடாது - வராது - என்பது தான் நமது நம்பிக்கை. இனி மேல் வராது என நம்புவோம். இனி மேலும் இது தொடர்ந்தால் காவல்துறை கண்காணிக்கப்படவில்லை என நாம் ஏற்றுக் கொள்ளாலாம்!
"முதலாளி" என்கிற அந்த வார்த்தை உண்மையான முதலாளிகளை மனம் நோகச் செய்கிறது என்பது தான் உண்மை. ஒருவன் தனது கீழ் பணி புரியம் தொழிலாளர்களை கொத்தடிமையாக வைத்திருக்கிறான் என்றால் அது எப்படி நாம் அவனை முதலாளி என்று ஏற்றுக்கொள்ளுவது? ஒருவன் தனது தொழிலாளர்களுக்கு நான்கு மாதங்கள் சம்பளம் கொடுக்க முடியவில்லை என்றால் அவனை எப்படி நாம் முதலாளி என்று ஏற்றுக்கொளவது? அதுவும் அவர்களை மிரட்டி வேலை வாங்குபவன் என்ன முதலாளியா? அதுவும் உங்களைக் கொன்று விடுவேன் என்று சொல்லுபவன் முதலாளியா?
எப்படி தலைகீழாக நின்று பார்த்தாலும் மேலே குறிப்பிட்ட நபர் முதலாளி என்கிற வரையறையின் கீழ் வரவில்லை என்பது தான் உண்மை. குண்டர் கும்பல்களின் கைநாட்டுகளை எல்லாம் முதலாளி என்று சொல்லி முதலாளிகளைக் கேவலப்படுத்துவது சரியான நடைமுறை அல்ல!
கம்பிகள் எண்ண வேண்டியவனை முதலாளி என்கிறோம். கோவில் சிலைகளைத் திருடுபவனைத் தொழிலதிபர் என்கிறோம். மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பவனை மாண்புமிகு என்கிறோம்.
அடாடா! திருடர்களுக்கெல்லாம் எப்படி எப்படியெல்லாம் அடைமொழிகள்! மரியாதை மொழிகள்!
இப்போது இந்த 48 தொழிலாளர்கள் நிலைமை என்ன? அவர்கள் தமிழகத்திற்கே திருப்பி அனுப்பப்படுவர் என நம்புகிறோம். அவர்களுக்குக் குறைந்தபட்சம் ஐந்து மாத சம்பளம் கொடுத்து அனுப்பப்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
இப்போது சொல்லுங்கள் அவன் முதலாளியா? மூதேவியா? அல்ல அவன் மொள்ளமாறி!
No comments:
Post a Comment