Saturday 17 November 2018

மீண்டும் ரந்தாவ் சட்டமன்ற தேர்தல்...!

ரந்தாவ் சட்டமன்ற தொகுதிக்கு  மீண்டும் தேர்தல்! 

கடந்த 14-வது  பொதுத் தேர்தலில் பக்காத்தான் சார்பில் ரந்தாவ் சட்டமன்றத்திற்குப் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட டாக்டர் ஸ்ரீராம் தொடுத்த வழக்கில்  நீதிமன்றம் அவருக்குச் சார்பான தீர்ப்பை வழங்கியதன் மூலம் வெற்றி பெற்றதாக முன்னர் அறிவிக்கப்பட்ட முகமது ஹாசானின் வெற்றி செல்லாது எனக் கூற,  ரந்தாவ் தொகுதியின் தேர்தல் ஒரு முடிவுக்கு வந்தது!  மீண்டும் அங்கு இடைத் தேர்தல் நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது!

இங்குப் போட்டியின்றி வெற்றிபெற்றதாக பொதுத் தேர்தலின் போது அறிவிக்கப்பட்டவர்  முன்னாள்  நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் முகமது ஹாசான். ஆள் பலம், அதிகார பலம், பொருளாதார பலம் என்று இரும்பு மனிதராக வலம் வந்தவர் முகமது ஹாசான்.  ஆனாலும் ஏமாற்றித் தான் வெற்றி பெற வேண்டும் என்னும் சூழலில் அவர் இருந்தார்! போட்டியிட்டால் தோல்வியைத் தழுவ  வேண்டும் என்பதை அப்போதே அவர் அறிந்தவர்!

இப்போது மீண்டும் ஒரு இடைத் தேர்தல்.  கடந்த ஆறு மாதங்களில் நான்கு இடைத் தேர்தல்களைச் சந்தித்து விட்டோம். இப்போது நான்காவது இடைத் தேர்தல். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இது இரண்டாவது இடைத் தேர்தல்.

அம்னோ மீண்டும் தனது முன்னாள் மந்திரி பெசாரான முகமது ஹாசானை அவருடைய தொகுதியில் நிறுத்தும் என எதிர்பார்க்கலாம். இப்போது தான் அவர் தனது உண்மையான பலத்தை நிருபித்தாக வேண்டும்! பொறுத்திருந்து பார்க்கலாம்.

பி.கே.ஆர் சார்பில் யார் அந்த வேட்பாளர் எனக் கட்சி முடிவு செய்யும் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் டாக்டர் ஸ்ரீராமை அவ்வளவு சீக்கிரத்தில் தூக்கி எறிந்துவிட முடியாது. டாக்டர் ஸ்ரீராம் அந்தத் தொகுதியில் தனது அயரா உழைப்பின் மூலம் நல்ல செல்வாக்கைப் பெற்றவர். அது மட்டும் அல்ல. ரந்தாவ் தொகுதி நீண்ட காலம் இந்தியர்களின் தொகுதி என பெயர் பெற்றது.

மற்றவர்கள் போட்டியிடுவதை விட டாக்டர் ஸ்ரீராம் போட்டியிடுவதே சிறப்பு. யார் அங்குப் போட்டியிட்டாலும் வெற்றி பெறலாம் என்னும் நிலை இப்போது. ஆனாலும் முன்பு போலவே அந்த இந்தியப் பாரம்பரியம் தொடர வேண்டும். என்பதே நமது எதிர்பார்ப்பு. போர்ட்டிக்சன் நாடாளுமன்ற தொகுதியில் ஒரு இந்திய வேட்பாளரை இடைத் தேர்தலின் மூலம் நாம் இழந்தோம். இந்தச் சட்டமன்றத் தொகுதியிலும் நாம் இழந்து விட முடியாது. 

அதனால் ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் டாக்டர் ஸ்ரீராம் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும். அதுவே நமது எதிர்பார்ப்பு.

பி.கே.ஆர். நல்ல முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்!

No comments:

Post a Comment