இந்தியாவால் தேடப்படும் இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் - இப்போது மலேசிய பிரஜை - என்னும் கம்பீரத்தோடு மீண்டும் ஊடகங்களில் வலம் வர ஆரம்பித்திருக்கிறார்.
அவருக்கு பெர்லிஸ் மாநிலம் கைக் கொடுத்திருக்கிறது. பலவேறு இஸ்லாமிய அமைப்புக்கள் அவருடைய உரையைக் கேட்க வரிசைப் பிடித்து நிற்கின்றன!
பெர்லிஸ் மாநிலம் ஏன் இப்படி ஒரு நிலையை எடுத்திருக்கிறது? மலேசியாவில் ஒரு சிறிய மாநிலமான பெர்லிஸ், சமய ரீதியில் சமீப காலத்தில் மிகப் பெரிய சரிவைச் சந்தித்திருக்கிறது என்பது உண்மையிலும் உண்மை. காரணம் சொல்ல வேண்டுமானால் சமயக் கல்வி என்பது 'ஏனோ, தானோ' போக்கில் அல்லது சும்மா போகிற போக்கில் கற்பிக்கப்படுகிறது என்பது தான் உண்மை நிலை என்றே தோன்றுகிறது.
ஆமாம். பெர்லிஸ் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார், முன்னாள் பிரதமர் துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் - இப்படி பன்முகம் கொண்ட டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிம் என்ன செய்தார் என்பதை நமது ஊடகங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து விட்டன. ஒரு பதினைந்து வயது சிறுமியை மானபங்கம் செய்தார் என்பதாக அவர் மீதுள்ள குற்றச்சாட்டு.
ஷாஹிடான் வகித்த பதவிகள் என்பது சாதாரணமானது அல்ல. பெர்லிஸ் மந்திரி பெசாராக (முதலமைச்சர்) நீண்ட காலம் இருந்தவர். அதாவது பெர்லிஸ் மாநிலத்தின் முதன்மை மனிதர். அந்த மாநிலத்தின் குடிகள் அனைவரும் அவருக்குக் கீழ் இருந்தவர்கள். அவர் தான் தலை. தனது குடிமக்களுக்குத் தலைவராக இருந்தவர்.
ஒரு தலைவர் என்பவர் குடி மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டியவர். தலைவரே இப்படி என்றால் குடி மக்கள் என்ன செய்வார்கள்? அந்தச் சிறுமி முதலில் காவல்துறைக்குச் சென்றிருக்கிறார். பின்னர் வாபஸ் வாங்கியிருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்திருக்கும் என ஊகிக்கலாம். அவ்வளவு தான்.
இப்போது நமக்கு ஒன்று புரிந்திருக்க வேண்டும். ஜாகிர் நாயக் பெர்லிஸ் மாநிலத்தில் ஏன் சமயப் பிரச்சாரம் செய்யப் போயிருக்கிறார் என்பதை இப்போது புரிந்து கொள்ளலாம். தலைமுதல் கால்பாதம் வரை சமயம் தலைகீழாக மாறிப் போயிருக்கிறது. அதனைச் சரி செய்ய வேண்டும். அதற்குப் பொறுத்தமானவர் ஜாகிர் நாயக் என்பதாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
ஜாகிர் நாயக்கின் சமயப் பிரச்சாரத்தை வரவேற்போம்! அவர் மூலம் பெர்லிஸ் மாநிலம் இழந்து போன தனது கௌரவத்தை மீண்டும் புத்துயிர் பெற அவரது சமயப் பிரச்சாரம் தேவை என உணர்கிறோம்.
வாழ்த்துகிறோம்!
No comments:
Post a Comment