Tuesday 13 November 2018

உணவகங்களில் புகை பிடிக்கத் தடை..!

உணவகங்களில் புகைப் பிடிப்பதை அடுத்த ஆண்டு  முதல் அரசாங்கம் தடை செய்வதை  வரவேற்கிறோம்.

தடை செய்ய வேண்டும் என்பது பொது மக்களின் நீண்ட நாளைய கோரிக்கை.  உணவகங்களில் புகைப் பிடிப்பது என்பது அராஜகமான செயல். உணவகங்களுக்கு வருபவர்கள் பெரியவர்கள் மட்டும் அல்ல ; ஆண் பிள்ளைகள் மட்டும் அல்ல; பெண்கள், குழந்தைகள் இன்னும் புகைப் பிடிக்காத ஆண்களும் உண்டு, முதியவர்களும்  உண்டு. இவர்களுக்கெல்லாம் இந்த அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியான செய்தி. வரவேற்கிறோம்!

புகைப் பிடிப்பது  என்பது மிகவும் அராஜகமான - மிகவும் காட்டுத்தனமான - ஒரு செயல்.  மக்களை அலட்சியப் படுத்துகின்ற ஒரு செயல். பாவப் புண்ணியம் பார்க்காத ஒரு செயல். மற்றவர்களை மனிதராகக் கூட பார்க்காதவர்கள் இந்தப் புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்! பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ளுவது என்கின்ற நாகரிகம் தெரியாத நாசகாரக் கூட்டம் இந்த புகைப் பிடிக்கும் கூட்டம்!

உணவகங்கள் சொல்லுகின்ற காரணங்களை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. உணவகங்கள் சிகிரெட்டுக்களை வைத்துத் தான் பிழைக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை. சிகிரெட் விற்பனை செய்யாத உணவகங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களுக்கும் வியாபாரம் நடக்கத்தான் செய்கின்றது.

உணவகங்கள்,  வாடிக்கையாளர்கள் உணவு உண்ண ஒரு சுகாதாரமான சூழலை  உருவாக்க வேண்டுமே தவிர உணவகங்களில் நரகத்தை உருவாக்கக் கூடாது. நெருப்போடும், அனலோடும் உணவு உட்கொள்ள வேண்டும்  என்கிற தலைவிதி வாடிக்கையாளர்க்கில்லை!

உணவகங்கள் கடுமையான எதிர்ப்புக்களைக் காட்டுகிறார்கள் என்றால் அவர்களை யாரோ பின்னாலிருந்து இயக்குகிறார்கள் என நாம் நினைக்க வேண்டியுள்ளது. அது சிகிரெட் நிறுவனங்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் எந்த ஐய்யப்பாடும் இல்லை.

நாம் சொல்ல வருவதெல்லாம் ஒன்று தான். அரசாங்கம் அமலுக்குக் கொண்டு வரும் இந்த நடவடிக்கையை நாங்கள் முழு்மனதுடன் ஆதரிக்கிறோம். புகை இல்லா உணவகங்களே நமக்குத் தேவை! தடை தடையாகவே இருக்கட்டும்!

No comments:

Post a Comment