இந்திய சமூகம் எல்லாத் துறைகளிலும் விழிப்புணர்ச்சி பெற அத்தோடு குறிப்பாக வியாபாரத்துறைகளில் முன்னேற்றங்காண அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஓர் அமைப்பு தான் மித்ரா என்பதை அறிந்திருக்கிறோம்.
முன்னர் செடிக் எனவும் பின்னர் பக்காத்தானின் குறுகியகால ஆட்சியில் அதன் பெயர் மித்ரா என மாற்றப்பட்டாலும் அதன் பிடி என்னவோ பெரும்பாலும் ம.இ.கா.வின் உடும்புப்பிடியிலேயே இருந்தது தான் அதன் வீழ்ச்சிக்குக் காரணம் என்பது பொதுவான மக்களின் அபிப்பிராயம்.
நம் பார்வையில் அது விழ்ச்சி ஆனால் ம.இ.கா.வினரோ அதனைச் சாதனை என்பார்கள்! அவர்கள் சொல்லுவதையே சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள்! மித்ரா வை வைத்து அவர்களும் சில கோடிசுவரர்களை உருவாக்கிவிட்டார்கள்!
பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ இத்தனை ஆண்டுகாலம் ம.இ.கா.வின் கட்டுப்பாட்டில் தான் மித்ரா இருந்து வந்திருக்கிறது. இப்போது மீண்டும் மித்ரா பற்றியான செய்திகள் வர ஆரம்பித்திருக்கின்றன.
இப்போது வந்திருப்பது கலகலப்பான செய்தி! மித்ரா பாலர் பள்ளிகளின் மேல் ஆர்வத்தைக் காண்பிக்க ஆரம்பித்திருக்கிறது. பொதுத் தேர்தல் வரப்போகின்ற காலகட்டத்தில் பாலர் பள்ளிகளுக்குப் கொடுக்கப்படுகின்ற மானியங்கள்! இது அவர்களின் தேர்தல் வியூகங்களில் ஒன்று என்று சொல்லலாம்! நாம் கேட்டுக் கொள்வதெல்லாம் இது மித்ராவின் பணம். அதற்கான கணக்கையாவது முறையாகக் காட்டுங்கள்! அமைச்சு மீது பழி போடாதீர்கள் என்பது தான்! பாலர் பள்ளிகளின் மீதாவது அக்கறைப் பிறந்திருக்கிறதே அதற்கு ஒரு நன்றி சொல்லுகிறோம்!
ஆனால் மித்ராவின் தலையாய நோக்கம் என்பது பாலர்பள்ளிகள் அல்ல! இந்தியர்களை, சிறு வியாபாரிகளை, வியாபாரத்துறையில் பொருளாதார உதவிகள் மூலம் அவர்களை முன்னேற்றங்காண செய்வது தான். ம.இ.கா. பெரிய வியாபாரிகளுக்கு மட்டும் பொருள் உதவிகள் செய்து அவர்கள் முன்னேற வைத்தது தான் சாதனை! சிறு வியாபாரிகளை முற்றிலுமாக புறந்ததள்ளி விட்டனர்! புறந்ததள்ளியதில் ம.இ.கா.வினருக்கு பெரும் பங்கு உண்டு.
ஒரு விடயத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. 'இந்தியர்கள் முன்னேற வேண்டும், அதுவும் வியாபாரத்துறையில்' என்று நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக கூக்குரலிட்டுக் கொண்டிருக்கும் ம.இ.கா. தலைவர்கள் இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு எதிராகத்தான் செயல்பட்டிருக்கிறார்களே தவிர ஆதரவாக இருந்ததில்லை! ஆனால் தலைவர்கள் தான் முன்னேறியிருக்கிறார்கள்!
இன்னும் ஓர் ஆண்டு காலத்திற்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் மித்ரா வேறு என்ன என்ன சாதனைகளைச் செய்யப் போகிறதோ, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
No comments:
Post a Comment