நமது மலேசிய நாட்டில் சீனர்களின் மளிகைக் கடைகள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம்!
ஓர் ஐம்பது மலாய் குடும்பங்கள் இருந்தால் போதும். அங்கே ஒரு சீனரின் மளிகைக் கடையைக் காணலாம். அது போல ஓர் ஐம்பது இந்தியக் குடும்பங்கள் இருந்தால் போதும் அங்கே ஒரு சீனரின் மளிகைக் கடையைக் காணலாம்.
மலாய்க் குடும்பங்கள் பெரும்பாலும் கம்பங்களில் இருப்பதால் அங்கே கடை திறப்பது ஒரு பிரச்சனை அல்ல. ஆனால் இந்தியக் குடும்பங்கள் நிலை வேறு. ஏதோ ஒரு மூலையில் அவர்கள் வசித்து வந்தாலும் அங்கே ஒரு சீனர் வியாபாரம் செய்து கொண்டிருப்பார்! அந்த அளவுக்கு அவர்கள் எந்த மூலை முடுக்காக இருந்தாலும் அங்கே போய் அவர்கள் வியாபாரம் செய்யத் தயங்குவதில்லை. வசதிகளே இல்லையென்றாலும் அவர்கள் வசதிகளை ஏற்படுத்திக் கொள்வார்கள். வியாபாரம் செய்வதற்காக எந்த ஒர் எல்லைக்கும் அவர்கள் போகத்தாயார் நிலையில் இருப்பார்கள்.
சீனர்கள் சும்மா மந்திரத்தாலோ, மாயாஜாலங்கலாலோ வியாபாரத் துறையில் முன்னுக்கு வந்துவிடவில்லை. வெறும் உழைப்பு மட்டும் அல்ல. வியாபாரம் என்னும் போது மற்ற இனத்தவர் புகுமுன்னே தாங்கள் புகுந்து விட வேண்டுமென்று நினைப்பவர்கள். ஒரே ஒரு குறிக்கோள் மட்டும் தான். அது வியாபாரம். வியாபாரத்தில் தான் பணம் சம்பாதிக்க வேண்டும். வேறு எதுவும் தேவை இல்லை. இன்று வியாபாரத்தில் முன்னணியில் நிற்கிறார்கள் என்றால் அவர்களுடைய துணிச்சலும் முக்கிய காரணம்.
இப்போது நிலை மாறி விட்டது. எல்லா இனத்தவர்களும் வியாபாரம் செய்யலாம் என்கிற நிலைக்கு நாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. அதனால் தான் ம்லாய்க்காரர், இந்தியர் என்று பட்டியல் நீளுகிறது. அவர்களும் எல்லா இடங்களிலும் வியாபாரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
இந்தியர்களைப் பொறுத்தவரை தோட்டப்புறங்களில் மளிகைக்கடைகள் வைத்திருந்தனர். இப்போது தோட்டங்களும் குறைந்து போயின. இன்றைய நிலையில் இந்தியர்கள் உணவகத் துறையில் தான் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். தவறு இல்லை. தங்களுக்கு எளிதாக எது வருமோ அந்தத் துறையில் ஈடுபாடு காட்டுவது இயற்கையே.
நம்மிடம் உள்ள மிகப் பெரிய குறைபாடு என்பது வியாபாரம் என்றால் அது சீனர்களால் மட்டுமே முடியும் என்கிற ஓர் எண்ணத்தை வளர்த்துக் கொண்டு விட்டோம். அது தவறான கருத்து. வியாபாரத்துக்கும் இனத்துக்கும் சம்பந்தமில்லை. நம் நாட்டில் சீனர்களே வியாபாரத்தில் அதிக அக்கறை காட்டுவதால் "வியாபாரம் என்றால் சீனர்கள்' என்கிற தவறான எண்ணத்தை மனத்தில் விதைத்துவிட்டோம்.
ஏன் சீனர்கள் வியாபாரத்தில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்? சிந்திக்க வேண்டும். ஒரே காரணம்: பணம் மட்டும் தான்! நீங்கள் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்றால் வியாபாரத்தை விட்டால் வேறு வழியில்லை. ஒரு சிறு வியாபாரம் செய்யும் பெண்மணி, ஓரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒர் அதிகாரியைவிட அதிகம் சம்பாதிக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்!
No comments:
Post a Comment