Saturday 9 July 2022

வாக்களிப்பது அவசியம்!

 

இன்னும் ஓர் ஆண்டுக்குள் அடுத்த 15-வது பொதுத் தேர்தல் வருவதற்கான சூழல் பிரகாசமாகத் தெரிகிறது.

வந்தாலும் வராவிட்டாலும் ஒன்றை மட்டும் நான் வலியுறுத்துகிறேன். வாக்களிக்கும் தகுதியை நீங்கள் பெற்றிருந்தால் எந்த ஒரு காரணத்தையும் சொல்லாமல் நீங்கள் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று   வாக்களிப்பது மிக மிக அவசியம்.

நம்மிடையே நிறைய மனக்குறைகள் உண்டு. குறிப்பாக இன்றைய நிலையில் விலைவாசிகள் ஏற்றம், விவசாயம் செய்கின்ற நிலங்களை அபகரித்தல், வேலை வாய்ப்புக்களில் புறக்கணிப்பு, இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் போதிப்பதில் குறைபாடுகள் மற்றபடி அடையாளக்கார்டு, குடியுரிமை போன்ற பிரச்சனைகள் - இப்படிப் பல பிரச்சனைகள் நம்மிடையே இருக்கின்றன.

இது போன்ற பிரச்சனைகள், நாம் விழிப்பாய் இல்லாவிட்டால், தொடர்ந்து கொண்டே இருக்கும். நம்மிடையையேயும் குறைபாடுகள் உண்டு. 

ஆனால் நாம் மிக எளிதாக அரசாங்கத்தைக் குறை கூறுகிறோம். அல்லது நமது தலைவர்களைக் குறை கூறுகிறோம். நமது குறைகள் நமது கண்களுக்குத் தெரிவதில்லை.

நம்மிடையே குறைபாடுகளை வைத்துக் கொண்டு "தேர்தல் வரட்டும்! நான் ஓட்டுப்போடப் போவதில்லை!" என்று சவடால் தனம் பண்ணுவதில் யாருக்கும் பயனில்லை.

வாக்குச்சீட்டு என்பது நமது ஜனநாயக உரிமை. வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை. ஜனநாயகத்தில் குறைபாடுகள் இருக்கலாம். இருக்கத்தான் செய்யும்.  அதற்காக வாக்களிக்க மறுப்பது மன்னிக்க முடியாத துரோகம்.

உங்கள் தொகுதியில் தேர்தலில் நிற்பவர்கள் அயோக்கியர்கள் என்று பெயர் எடுத்திருக்கலாம். அதில் ஏதாவது யோக்கியர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு நீங்கள் வாக்களிக்கலாம். ஒரு சிலர் கட்சியின் சின்னத்தை வைத்து வாக்களிப்பார்கள். அப்படியும் செய்யலாம். ஏதோ ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தேர்தலைப் புறக்கணிக்கிறோம் என்று சொல்லி வாக்களிக்காமல் இருப்பது நிறைய அயோக்கியர்கள் நம்மை ஆளுகின்ற நிலை ஏற்பட்டுவிடும். அவர்களால் யாருக்கும் நன்மை இல்லை. தங்களது சொந்த நலனில் மட்டும் தான் அவர்கள் அக்கறை காட்டுபவர்களாக இருப்பார்கள்!

நல்லவர்கள் நாட்டை ஆள வேண்டும். நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நல்லது நடக்க வேண்டும் என்றால் நாம் அவசியம் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்!

No comments:

Post a Comment