சமையல் எண்ணெய் இல்லையென்றால் சமையலறையில் வேலை இல்லை!
பாதிக்கப்படுவது குடும்பங்கள் மட்டும் அல்ல. சிறு சிறு வியாபாரங்களில் ஈடுபட்டிருக்கும் நடைபாதை கடைகள், சிறிய, பெரிய, நடத்தர உணவகங்கள் - இப்படி எல்லாமே பெரிய அளவில் பாதிக்கப்படும்.
இவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது பிளாஸ்டிக் பைகளில் விற்கப்படும் இந்த எண்ணெய் மட்டும் தான். நமது ஏழைக் குடும்பங்களிலும் இந்த எண்ணெய் தான் பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளது. அது மட்டும் அல்ல சமீப காலங்களில் விலை உயர்ந்த எண்ணெய்கள் பெரும் பெரும் கடைகளில் கிடைக்காத போது பிளாஸ்டிக் பைகளில் விறகப்படும் இந்த எண்ணெய் தான் அனைவராலும் பயன்படுத்தப்பட்டது. இன்றைய நிலையில் எது கிடைக்கிறதோ அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் தான் நாம் இருக்கிறோம்.
ஆனாலும் இந்த வகை எண்ணெயே பெரும்பாலும் பயன்பாட்டில் இருப்பதால் - ஏழைகளின் தோழனாக இருப்பதால் - அரசாங்கம் முடிந்தவரை அதன் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அரசாங்கத்தின் உதவித்தொகையோடு குறைந்தவிலையில் பொது மக்களுக்கு வழக்கம் போல கடைகளின் மூலம் விற்கப்படுகிறது.
மக்களை ஏமாற்றும் கடைக்காரர்கள் எல்லாக் காலங்களிலும் உண்டு. ஒரு சில வியாபாரிகள் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்வது நமக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை.
ந்மக்குத் தெரிந்தது எல்லாம் மக்களை ஏமாற்றும் இந்த வியாபாரிகள் கடுமையாகத் தண்டிக்கப்படுவது தான் சரியான வழி. சமீபத்தில் மலாக்காவில் ஒரு வியாபாரி அகப்பட்டிருக்கிறார். அரசாங்கத்தின் உதவித்தொகையோடு கிடைக்கும் இந்த எண்ணெயை ஒரு வெள்ளி கூடுதலாக வேறு வியாபாரிகளுக்கும் அவர் விற்றிருக்கிறார்.
இன்னும் ஒரு சில வியாபாரிகள் பக்கத்து நாடுகளுக்கும் இப்படி குறைவான விலைக்கு விற்கப்படும் இந்த எண்ணெயை, விற்பனைச் செய்கிறார்கள். பார்க்கப்போனால் இது பல ஆண்டுகளாக நடைபெறும் வியாபாரமாகவே தெரிகிறது! இப்போது நமக்கே பற்றாக்குறை என்பதால் கொஞ்சம் கெடுபிடியாக இருக்கிறார்கள், அவ்வளவு தான்!
எது எப்படியோ இதற்கு முன் என்ன நடந்ததோ அப்போது அது பற்றி நாம் கவலைப்படவில்லை. ஆனால் இப்போது அப்படிச் செய்வதை நம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நமக்கே பற்றாக்குறை என்னும் போது அதனை எப்படிப் பக்கத்து நாடுகளுக்குக் கடத்தல் செய்ய முடியும் என்பது சரியான கேள்வி. அதுவும் அரசாங்கத்தின் உதவித்தொகையோடு உள்நாட்டு மக்களுக்காக விற்கப்படும் ஒரு பொருளை இப்படிப் பக்கத்து நாடுகளுக்கு அதிக விலையில் விற்பது தேசத்துரோகம் தானே! அதற்கு மேல் பேச ஒன்றுமில்லை! அது அதிகாரிகள் சம்பந்தப்பட்டது!
சமையல் எண்ணெய்க்கு அரசாங்கம் ஒரு தீர்வைக் கண்டிருக்கிறது. ஏழை முதல் பணக்காரர் வரை சம்பந்தப்பட்டது சமையல் எண்ணெய். அதன் விலை கூடாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். சாக்குப்போக்கு சொல்லுவதை எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கடைசியாக கடத்தல் செய்பவர்கள், விலை ஏற்றத்துக்காக பதுக்கல் செய்பவர்கள், விலையை ஏற்றி வியாபாரம் செய்பவர்கள் - இவர்கள் கண்டிக்கப்பட வேண்டும். கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment