சிறு சிறு தொழில்களில் அதிக ஈடுபாடு உடையவர்கள் என்றால் அது சீன சமுதாயத்தினர் தான்.
இன்று நாட்டில் உள்ள அத்தனை பெரிய தொழில்களும் சீனர்களுடையது தான். ஆனால் அத்தனை பெரிய தொழில்களும் இந்த சிறிய தொழில்களிலிருந்து தான் பரிமாண வளர்ச்சி பெற்றவை.
அப்போதும் சரி இப்போதும் சரி, சிறு தொழில்கள் சீனர்களை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றிருக்கின்றன. அதனால் தான் அரசாங்கமே இது போன்ற சிறிய தொழில்களை ஊக்குவித்து வருகிறது. ஒவ்வொரு சிறிய தொழிலும் அடுத்து வரும் பெரிய தொழிலுக்கு ஆணிவேராக விளங்குகிறது.
நமது இனத்தவர்கள் ஏன் இது போன்ற சிறிய தொழில்களில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகின்றனர், ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றால் ஒன்று: அதன் வருமானம். அடுத்து: நம்மாலும் தொழில் செய்ய முடியும் என்கிற தன்னம்பிக்கை. சிறிய தொழில்கள் நமக்குப் பெரிய தொழில்கள் செய்ய ஊக்கப்படுத்தும். தன்னம்பிக்கையை ஏற்படுத்தும்.
இன்று நம்முடைய பிரச்சனை எல்லாம் தொழில் செய்யும் தன்னம்பிக்கை நமக்கு இல்லை. சீனர்களுக்கு அந்த பிரச்சனை இல்லை. தொழில்களை சீனர்களே ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதால் அவர்களுக்குத் தொழில் சம்பந்தமான எதுவும் அந்நியமாக இருப்பதில்லை. அவர்களுக்கு ஆலோசனைகள் சொல்ல ஆயிரம் பேர் இருக்கின்றனர். மேலும், தொழிலில், அவர்களின் ஆதிக்கத்தை விட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாகவும் இருக்கின்றனர். வங்கிகளும் அவர்களுடையது என்பதால் சீனர்கள் எல்லா வகையிலும் தொழில் செய்ய ஊக்கப்படுத்தப் படுகின்றனர்.
ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரை தொழில் என்பதே நமக்குப் புதிது. நாம், வேலை செய்யும் ஒரு சமூகமாகவே பழக்கப்பட்டிருக்கிறோம். அப்படியே வளர்க்கவும் பட்டிருக்கிறோம். வேலையைத் தவிர வேறு எதுவும் நமக்குத் தெரியாது என்றும் சொல்லி வளர்க்கப்பட்டிருக்கிறோம். வேலை, வேலை என்று சொல்லியே நம்மைச் சுற்றியுள்ள நமது சமூகம் நம்மை வளர்த்திருக்கிறது. "தொழில் செய்தால் போட்ட பணம் போய்விடும்" என்று தொழிலில் தோற்றுப்போனவர்களைச் சுட்டிக்காட்ட எப்போதும் தயாராக இருக்கிறோம்.
அதுவும் நமது மலேசிய நாட்டில் வியாபாரம், தொழில் என்று எப்படிச் சொன்னாலும் நாம் சீனர்களைத்தான் முன் நிறுத்துகிறோம். நமது சமூகம், நமது பெற்றோர், நமது உற்றார் உறவினர் அனைவரும் நமக்குச் சொல்லுகின்ற ஒரே அறிவுரை: சீனர்கள் வியாபாரம் செய்யவே பிறந்தவர்கள்! நம்மால் அவர்களோடு போட்டிப்போட முடியாது! இப்படிச் சொல்லியே நமக்குத் தாழ்வு மனப்பான்மையை நமது குடும்பத்தினரே நமக்கு ஏற்படுத்திவிட்டனர்.
ஆனால் இவைகள் எல்லாம் தகர்த்து எறியப்பட்டுவிட்டன. வேலை செய்பவனுக்குத் தொழிலும் செய்ய முடியும் என்கிற எண்ணம் இப்போது வலுப்பட்டு வருகிறது. மேலும் வியாபாரம் என்பது ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தது என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. ஏன் இந்திய சமூகத்தில் பஞ்சாபியர், குஜாராத்தியர், தெலுங்கர்கள், மலையாளிகள், தமிழ்ச் சமூகத்தில் செட்டியார்கள், தமிழ் முஸ்லிம்கள் இப்போது கவுண்டர்களும் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்துவிட்டனர். தமிழ்ச் சமூகத்தில் இதெல்லாம் மிகவும் பாராட்டுக்குரியவை! இந்தியர்களும் வியாபாரத்தில் 'தங்களால் முடியும்' என்பதை நிருபித்து வருகின்றனர்.
தமிழ் இனத்தில் உள்ள ஒவ்வொரு சமூகமும் சிறு தொழில்கள் மூலம் முன்னேற நினைப்பது மிக மிக பாராட்டுகுரியது. சிறு தொழிலிருந்து பெருந்தொழில் தான் பரிணாம வளர்ச்சி, பாராட்டுக்குரியது.
சீனர்களால் மட்டுமே முடியும் என்பது பொய்! நம்மாலும் முடியும் என்பதே மெய்!
தொடர்ந்து சிந்திப்போம்!
No comments:
Post a Comment