Friday 22 July 2022

மீண்டும் எழ வேண்டும்!

சிறு தொழில் என்பது நமக்கு ஒன்றும் புதிதல்ல. காலங்காலமாக நமது தாய்மார்கள் செய்து வந்திருக்கிறார்கள்.

ஆனால் நாம் அதனை ஒரு சிறு தொழிலாக வளர்க்கவில்லை. இப்போது நாம் சில கட்டாயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  கணவன் மனைவி இருவரும் வேலை செய்யும் காலம் போய் ஒருவரின் வருமானத்தில் வாழ்கின்ற  நிலை ஏற்பட்டுவிட்டது. அதனால் நமது குடும்பங்களின் வருமானத்தைப் பெருக்க ஏதாவது ஒரு சிறு தொழிலாவது செய்யும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறோம்.

அது தவறும் அல்ல. ஆனால் எனக்கு ஓர் ஆச்சரியம் என்னவென்றால்  எங்கோ ஒரு மூலையில் முடங்கிக் கொண்டும்  முணகிக் கொண்டும் இருந்த  நமது சகோதரிகள்  வெகுண்டு எழுந்து விட்டனர்! அவர்களின் பொறுப்பை அவர்கள் உணர்ந்திருக்கின்றனர். இனி மேல் வீண் அரட்டை அடித்துக் காலத்தைக் கடத்த முடியாது. குடும்பம் வேண்டும். அவர்களின் நலன் வேண்டும். பிள்ளைகள் பள்ளி செல்ல வேண்டும். அவர்களுக்குச் சாப்பாடு வேண்டும். யாரிடமோ போய் கையேந்த முடியாது. நமது கையே நமக்கு உதவி என்பதைப் புரிந்து கொண்டார்கள். 

இப்போதெல்லாம் நமது சகோதரிகள் தோசை, இட்டிலி, வடை, நாசிலெமாக்  போன்ற காலை உணவு வகைகளை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். வரவேற்க வேண்டிய முயற்சி. அவர்கள் தொடர்ந்து செய்யும் போது அதன் மூலம் வரும் வருமானம் அவர்கள் முன்பு வேலையில் செய்த வருமானத்தைவிட அதிகம் என்பதை உணர்கின்றனர். நேரத்தையும் அவர்களுக்குத் தோதாக அமைத்துக் கொள்கின்றனர்.

அதே வேளை நமது இளைஞர்களும் கம்பனிகளில் நடக்கும் கட்டுப்பாடுகளைப் பிடிக்காமல் சொந்தமாகவே சிறு தொழில்களில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். இவைகளெல்லாம் வரவேற்கப்பட வேண்டிய முயற்சிகள்!  இளைஞர் ஒருவர் சுக்குக்காபி, சுக்குத் தேநீர், வடைவகைகள் போன்றவற்றை சைக்கிளில் வைத்து விற்பனைச் செய்கின்றார். இன்னொரு இளைஞர் பத்தாய்காய்களைத் தனது காரில் வைத்துக் கொண்டு வியாபாரம் செய்கின்றார். எல்லாமே நல்ல முயற்சிகள்.

இதனை நான் நமது இளைய சமுதாயத்தின் வளர்ச்சியாகவே பார்க்கிறேன். உண்மையைச் சொன்னால் நமது இளைஞர்கள் இது போன்ற சிறு தொழில்களில் ஈடுபடவே மறுத்த ஒரு காலம் உண்டு. மறுத்த என்பதைவிட அவர்கள் அதிகம் வெட்கப்பட்டனர் என்பது தான் உண்மை. 

காரணம் வேலையே செய்து பழகிவிட்ட ஒரு சமுதாயம் நாம். மாதா மாதம் சம்பளம் வாங்கியே பழகிவிட்ட ஒரு சமுதாயத்தை தொழில்துறையில் திசை திருப்புவது அவ்வளது எளிதல்ல. இப்போது ஏதோ ஒரு கட்டாயம். கொரோனா வந்த பிறகு அனைத்தையும் மாற்றி அமைத்துவிட்டது. சாப்பாட்டுக்கு வழியில்லாத ஒரு நிலைமை ஏற்பட்டதும் எல்லாமே மாறிவிட்டன.

இந்த மாற்றம் நல்லது தான்.வியாபாரம் என்பது நமக்குப் புதிதல்ல. தேவையெல்லாம் நாம் இழந்துவிட்ட நமது வியாபாரங்களை மீட்டெடுக்க வேண்டும். அதற்கான திறமை நம்மிடம் உண்டு.

இன்றைய இந்த சிறு தொழில்கள் நாளை பெருந் தொழிலாக மாறக் கூடிய சாத்தியம் நிறையவே உண்டு. அப்படித்தான் இன்றைய பெருந்தொழில்கள் எல்லாம் பரிணாம வளர்ச்சிக் கண்டு கோபுரமாக வளர்ந்து நிற்கின்றன.

மீண்டும் எழுவோம்!

No comments:

Post a Comment