Thursday 28 July 2022

நல்ல மார்க் வாங்குவது குற்றமோ!

 

பொதுவாக மெட்ரிகுலேஷன் கல்வி  எப்போது ஆரம்பிக்கப்பட்டதோ அன்றிலிருந்தே இந்திய மாணவர்கள் பிரச்சனைகளை எதிர்நோக்க ஆரம்பித்துவிட்டனர்!

இந்திய மாணவர்கள் என்ன தான் பல "ஏ" க்களைப் பெற்று எஸ்.பி.எம். பரிட்சையில் முதல் நிலைக்கு வந்தாலும் அவர்களுக்கு மெட்ரிகுலேஷன்  கல்வி மறுக்கப்படுகின்றது!  அதைவிட இந்திய மாணவர்களால் வேறு என்ன செய்ய முடியும்.  "ஏ" என்றால் அது தான் முதல் நிலை. அதுவும் அனைத்துப் பாடங்களிலும் "ஏ" பெற்றிருப்பது என்றால் அது தான் அதன் எல்லை. அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்?  அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்! 

கல்வி அமைச்சு இந்திய மாணவர்களிடமிருந்து என்ன தான்  எதிர்பார்க்கின்றது? அதனைக் கல்வி அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும்.  மூன்று "ஏ", நான்கு "ஏ" போதும் என்று நினைத்தால், மெட்ரிகுலேஷன் தகுதி அவ்வளவு தான், என்று அமைச்சு நினைத்தால்  அதனையாவது மாணவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். மணவர்கள் விழுந்து விழுந்து படித்து என்ன தான் பயன்?

பொதுவாக கல்வி அமைச்சு,  மாணவர்கள் பரிட்சைகளில் நல்ல தேர்ச்சி பெற வேண்டும்  என்று தான் நினைப்பார்கள். ஆனால் நம் நாட்டில் கல்வி அமைச்சின் நிலைப்பாடு வேறு மாதிரியாக இருக்கிறது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது!  மேற்கல்வி பயில நல்ல மார்க் தேவையில்லை என்று அமைச்சு நினைப்பதாகவே தோன்றுகிறது! அப்படியென்றால் அதையும் சொல்லிவிடுங்களேன்.

இந்திய மாணவர்களின் மெட்ரிகுலேஷன் விண்ணப்பங்கள் புறக்கணிக்கப்படுகின்றது என்று ஒவ்வொரு ஆண்டும் பேசிக் கொண்டிருப்பதும், எழுதிக் கொண்டிருப்பதும் நமக்கே சலிப்பை ஏற்படுத்துகின்றது. 

ஆனால் இந்நாட்டு இந்தியர்களின் தாய் கட்சி என்று சொல்லப்படும்  மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சிக்கு எந்த சலிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று அவர்கள் நினைக்கிறார்களோ இல்லையோ  நமக்கு அப்படி ஒரு சலிப்பை அவர்கள் மேல்  ஏற்படுத்துகிறது.

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் காலத்தில் இந்திய மாணவர்களுக்கு, மெட்ரிகுலேஷன் கல்விக்கு, 2500 இடங்கள், ஒதுக்கப்பட்டது என்றால்  அதையே தொடருங்களேன்.  அதையே அளவுகோளாக வைத்து செயல்படுங்களேன்.  இன்றைய நிலையில் பத்து இடங்களா அல்லது 20 இடங்களா என்று நம்மால் ஊகிக்க முடியவில்லையே! அவர்களிடமிருந்தும் மழுப்பலான பதில்கள் தானே வருகின்றன! ஏன் இந்த திருட்டுத்தனம் என்று  தானே  நாமும் கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது!

இந்த மெட்ரிகுலேஷன் கல்வியில் இந்திய மாணவர்களுக்குத் துரோகம் இழைக்கப்படுகிறது என்று நமக்குத் தெரிகிறது. தீர்வு காண  வேண்டியவர்கள் தீர்ப்பார்கள் என்கிற  நம்பிக்கையும் இல்லை. அவர்கள் பொங்கி எழுவார்கள் என்று தோன்றவில்லை அல்லது அமைதியான முறையில் தீர்வு காண்பார்கள் என்றும் தோன்றவில்லை.

இப்போது நமக்குத் தெரிந்ததெல்லாம் பரிட்சையில் நல்ல மார்க் வாங்குவது குற்றமோ!

No comments:

Post a Comment