Saturday 30 July 2022

கல்வி என்பது வர்த்தகம்!

கல்வி என்பது, நமது நாட்டைப் பொறுத்தவரை,  இப்போது வர்த்தகமயமாகிவிட்டது!

நமது மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் கல்வியில் இடம் கிடைக்காமல் இருப்பதற்கு  இந்த வர்த்தகமும் ஒரு காரணமாகிவிட்டது. மெட்ரிகுலேஷன் கல்வியில் இடம் கிடைக்காதவர்கள் "ஏம்ஸ்ட்" காலேஜில் சேரலாம் என்று ம.இ.கா. வே அறிக்கை விடுகிறது என்றால் இந்த பிரச்சனையை நாம் ஓரளவுக்குப் புரிந்து கொள்ளலாம்.

இவர்கள் காலேஜில் சேர வேண்டும் என்பதற்காக ம.இ.கா.வினரே நமக்கு எதிராக இருக்கிறார்களோ என்று எண்ண வேண்டியிருக்கிறது. இவர்கள் மட்டும் அல்ல மற்ற தனியார் கல்லூரிகளும் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் தோன்றுகிறது.  அதுவும் இந்தியர்கள் தங்களின் பிள்ளைகளின் கல்விக்கு தங்களிடம் உள்ள அனைத்தையும் தியாகம் செய்யத்  தயாராக இருப்பவர்கள் என்று அரசாங்கத்துக்குத் தெரியும்.

வெளி நாடுகளில் எத்தனை இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள் என்கிற விபரம் கல்வி அமைச்சுக்குத் தெரியும்.  இந்தியர்கள்  என்ன தான் வாழ்க்கையில் சிரமப்பட்டாலும் எப்பாடுபட்டாவது  தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பார்கள் என்பது கல்வி அமைச்சுக்குத் தெரியும். இவர்கள் பணக்காரர்கள் அல்ல என்பதும் அவர்களுக்குத் தெரியும். 

தனியார் கல்லூரிகளுக்கு 'பிஸ்னஸ்' கொடுக்க வேண்டும் என்பதற்காகவே  கல்வி அமைச்சு மெட்ரிகுலேஷன் கல்வியில் இந்திய மாணவர்களுக்கு இடம் ஒதுக்குவதில்லையோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

ஆக எல்லாமே பண மயமாகிவிட்ட இந்நாளில்  கல்வியும் அதில் ஒன்றாகிவிட்டது. பணம் இருந்தால்  தான் கல்வி கிடைக்கும் என்று ஒரு நிலை நாட்டில் இருந்தால் ஐயோ பாவம்! என்று தோன்றுகிறது. ஆனால் மலேசியர்  அனைவருக்கும் இந்நிலை இல்லை. இந்நிலை இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் மட்டும் தான்.

எது எப்படி இருந்தாலும் நாட்டில் ஏழைகள் எல்லா சமுதாயத்திலும் இருக்கின்றனர். மலாய் சமுதாயத்தில் சுமார் 95 விழுக்காடு  கல்வி வாய்ப்புக்கள் கிடைத்து விடுகின்றன. சீனர்களும் தனியார் கல்லூரிகள், வெளி நாடுகள் என்று பிரிந்து போய்விடுகின்றனர்.  மலேசிய சமுதாயத்தில் இந்திய மாணவர்களே அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இந்தியர்கள் தங்கள் பிள்ளைகளை மிகவும் சிரமமான ஒரு சூழலில் தான் படிக்க வைக்கின்றனர். இந்த கல்வி வியாபாரத்தில் அதிகம் பாதிப்படைபவர்கள் இந்தியர்கள்.

ஓர் அரசியல்வாதி தனது பிள்ளைகளை வெளி நாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கின்றான். நாம் அதைக் கேள்வி கேட்கவில்லை. உள்ளூரிலாவது இந்திய மாணவர்களுக்கு  வாய்ப்புக் கொடுங்கள் என்று தான் கேட்கிறோம். அதுவும் மறுக்கப்பட்டால் வாய்ப்புக்களை எங்கே தேடி அலைவது?

ஓர் அரசாங்கம் தனது குடிமக்கள் அனவருக்கும், குறிப்பாக கல்வி என்று வரும் போது, அதனை இலவசமாகக் கொடுக்க முன் வரவேண்டும். அது அரசாங்கத்தின் கடமை. ஆனால் அது நியாயமாக நடைபெறவில்லை.

பணத்தைக் கொடுத்துத் தான் கல்வி கற்க  வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது சரியான தீர்வு அல்ல!

No comments:

Post a Comment