மீண்டும் ஆரம்பமாகிவிட்டது கதாகாலட்சேபம்!
மெட்ரிகுலேஷன் உயர்கல்விக்கு விண்ணப்பித்த 200-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. இவர்கள் அனைவரும் பெரும்பாலும் அனைத்துப் பாடங்களிலும் ஏ தகுதி பெற்றவர்கள்! அனைத்துப் பாடங்களிலும் "ஏ" என்பதை, இந்திய மாணவர்கள், ஒரு தகுதியாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை கல்வி அமைச்சு மீண்டும் நிருபித்திருக்கிறது. கல்வி அமைச்சின் மெட் ரிகுலேஷன் நுழைவு என்பது எந்த அளவையால் அளக்கப்படுகிறது என்பது இன்னும் நமக்குப் புலனாகவில்லை!
ஒரு பிரச்சனையென்றால் ஒருமுறை, இருமுறை வரலாம். ஆனால் பாரிசான் ஆட்சியில் வருடா வருடம் இந்த பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது! அப்படி என்ன? தீர்க்கவே தீர்க்க முடியாத பிரச்சனையா இது? அதற்கு ஏன் ஒரு தீர்வை இன்னும் கண்டுபிடிக்காமல் ஒவ்வொரு வருடமும் இழுத்து............இழுத்துக் கொண்டே போகிறது! அரசாங்கமே இதனைச் செய்கிறதா அல்லது தனிப்பட்ட மனிதர்கள் இதில் மூக்கை நுழைக்கிறார்களா?
அதுவும் 15-வது பொதுத் தேர்தல் வாசலில் நின்று வரவேற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஆளுங்கட்சியினர் இதனை வைத்து அரசியல் நடத்துகிறார்களா என்கிற ஐயம் எழத்தான் செய்கிறது! ம.இ.கா. வினர் இந்தியர்களின் ஆதரவற்று, சோர்ந்து போய் விழுந்து கிடக்கும் இந்த நேரத்தில் - இரு களவாணிகளும் சேர்ந்து இந்திய சமுதாயத்தின் ஆதரவைத் திரட்ட நினைக்கிறார்களோ!
இந்த செய்தி வெளியானதும் ம.இ.கா. உடனடியாக விழுந்து கிடக்கும் இந்தியர்களைக் காப்பாற்ற "எங்கள் தலைமையகத்தை நாடினால் உரிய உதவிகள் செய்யப்படும்" என்று அறிக்கை விடுகிறார்களே! அப்படியென்றால் என்ன பொருள்? ம.இ.கா. வை மதிக்காதவர்களா? இப்போது வாருங்கள். உதவி செய்வது எங்களால் தான் முடியும், வாருங்கள்! வாருங்கள்! என்று அழைப்பு விடுக்கிறார்களா? இது தான் சரியான நேரம் என்று ம.இ.கா.வுக்கு ஆதரவு தேடும் முயற்சியில் முயற்சி செய்கிறார்களோ?
எதுவும் நடக்கும்! இந்த அரசியல் களவாணிகள், தங்கள் நலனுக்காக, எதையும் செய்யக் கூடியவர்கள் தான்!
எல்லாப் பாடங்களிலும் "ஏ" எடுத்துவிட்டு இப்போது உங்களுக்கு இடமில்லை என்று சொன்னால் அது எந்த அளவுக்கு மாணவர்களைப் பாதிக்கும் என்பதைக் கூட அறியாத அறிவிலிகளா இவர்கள்? அதன் வலியை உணராதவர்களா இவர்கள்? நல்ல மார்க் எடுத்தாலும் இடமில்லை! நல்ல மார்க் எடுக்காவிட்டாலும் இடமில்லை! இது என்ன கல்விக் கொள்கை என்று நாம் கேட்கலாம் அல்லவா!
இது தொடரக் கூடாது என்பதே நாம் இந்த சமுதாயத்திற்கு விடுக்கும் வேண்டுகோள். நல்ல அரசாங்கம் அமையவில்லையென்றால் இது ஒரு தொடர்கதையாகவே போய்க் கொண்டிருக்கும். நாட்டை ஆள்வோர் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்பதை நாம் கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment