வாழ்க்கையில் முன்னேற நினைப்பது என்பது யாருக்கும் போட்டியல்ல!
நாம் முன்னேற நினைக்கிறோம். அதுவும் குறிப்பாக பொருளாதார ரீதியில் பின் தங்கியிருக்கிறோம். அதனால் நாம் முன்னேற நினைப்பது யாருக்கும் இடைஞ்சல் அல்ல. நமது முன்னேற்றம் நமது கையில். அதை மட்டும் பிடித்துக் கொண்டால் போதும். நாம் முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது.
வாழ்க்கையில் முன்னேற்றம் காணுவது ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை. மிக உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு மனிதன் கூட 'அடுத்த இலக்கு என்ன?' என்று தான் சிந்திக்கிறான். ஒரே காரணம் தான். மேலே உள்ளவன் கீழே விழ தயாராக இல்லை.
ஆனால் கீழ் நிலையில் இருக்கும் ஒருவனுக்கு அடுத்த படி என்ன என்கிற எண்ண ஓட்டம் எப்போதும் இருக்க வேண்டும். காரணம் யாரும் நமக்குப் பாதை போட்டு வைக்கவில்லை. அதனால் நாமே தான் பாதை போட வேண்டும். அது முன்னேற்றப் பாதையாக இருக்க வேண்டும். அந்த பாதையில் நமது ஆர்வத்தைக் காட்ட வேண்டும். அது தான் வழி. தேர்ந்தெடுத்த விட்டோம். தொடர்ந்து அந்த வழியிலேயே பயணிப்போம்.
மிகவும் ஏழ்மை சூழலிலிருந்து நம்மில் பலர் வந்திருக்கிறோம். ஒரு சிலருக்குக் கல்வி சரியாக அமைந்தது. அதுவே அவர்களுக்கு ஓரளவு அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வாய்ப்பாக அமைந்தது. ஆனாலும் பொருளாதாரம் என்று வரும் போது அவர்கள் வெற்றியாளர்கள் என்று கருத முடியவில்லை.
நாம் என்ன தான் கல்வியில் ஓரளவு படித்த சமூகம் என்று பெயர் எடுத்தாலும் பொருளாதார முன்னேற்றம் மட்டுமே நம்மை உயர்த்திக் காட்டும்.
பள்ளிகளில் படிக்கின்ற வாய்ப்பே கிடைக்காத பலர் பொருளாதார ரீதியில் வெற்றி பெற்றிருக்கின்றனர். நண்பர் ஒருவர் முதலில் தையற் தொழிலில் இருந்தார். அதன் மூலம் கிடைத்த பணத்தை மூலதனமாகக் கொண்டு சொந்தமாக மளிகைக்கடை ஒன்றினைத்திறந்தார். அதன் பின்னர் அவர் வாழ்க்கையில் கிடுகிடு முன்னேற்றம். இப்போது முன்னேற்றம் கண்ட மனிதராக மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். அவர் ஓரு முன்னாள் தோட்டத் தொழிலாளி என்பதை மறக்க வேண்டாம்.
நாம் முன்னேற நினைப்பதில் யாரும் நமக்குத் தடையாக இருக்கப் போவதில்லை. இந்த நிலையில் நாம் ஏன் பாவப்பட்ட ஜென்மமாக வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்?
பெரிய சாதனைகளைப்பற்றிய எண்ணம் எதுவுமில்லை என்றாலும் நம்மால் முடிந்த, நமது வருமானத்திற்கு ஏற்ப நமது அடுத்தக்கட்ட நகர்வு இருக்க வேண்டும். ஒன்று: நமது பிள்ளைகளைக் கல்வியில் உயர்த்த வேண்டும். அதில் எந்த சமரசமும் இல்லை. அடுத்து சொந்த வீடு இருக்க வேண்டும். இதைச் செய்தாலே அதுவே பெரும் சாதனை. சொந்த வீடு இருந்தாலே அதுவே பெரும் வெற்றி தான்.
பிள்ளைகளின் கல்வி, சொந்த வீடு என்பதெல்லாம் நல்ல முன்னேற்றம் தான். நாம் யாருடனும் போட்டி போடவில்லை. அது நமது தேவை. அதற்காக யாரும் வருத்தப்படப் போவதில்லை. யாரும் பொறாமைப்படப் போவதில்லை.
நமது முன்னேற்ற நமது கையில்!
No comments:
Post a Comment