Friday 8 July 2022

அலட்சியம் வேண்டாம்!

 

பெருநாள் காலம். நீண்ட விடுமுறை. சாலைகளில் எண்ணிக்கை அடங்கா ஊர்திகள்.

இன்னும் ஓரிரு தினங்களுக்கு நாட்டின் நிலைமை இப்படித்தான் இருக்கும். முதலில் பட்டணப்புறங்களிலிருந்து கிராமப்புறங்களுக்கான படையெடுப்பு! அதன் பின்னர் மீண்டும் வீடு திரும்புதல்!

இங்கு ஆபத்தான பயணம் என்றால் போகும் போதும் வரும் போதும் தான். இந்த நேரத்தில் தான் பெரும்பாலான விபத்துகள் நடக்கின்றன. அதிலும் ஒவ்வொரு ஆண்டும் விபத்துகள் பெருகிக் கொண்டு போகின்றன.

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகள் கொரோனாவின் பாதிப்பினால் பெரும்பாலானோர் தங்களின் கிராமங்களுக்குப் போக இயலவில்லை.  உற்றார் உறவினர்களைப் பார்க்க முடியவில்லை. பெற்றோர்களைப் பார்க்க முடியவில்லை. அண்ணன் தம்பிகளை, அக்காள் தங்கச்சிகளைப் பார்க்க முடியவில்லை. மனதிலே ஏக்கம்.  

இந்த ஆண்டு கொஞ்சம் தளர்வு ஏற்பட்டிருக்கிறது. அதனால் மக்களின் படையெடுப்பு அதிகமாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை. நமது அறிவுரை எல்லாம் உங்கள் எதிர்பார்ப்பில் தவறில்லை. உறவுகளைச் சந்திப்பதில் ஏகப்பட்ட மகிழ்ச்சி என்பதும் உண்மைதான்.

ஆனால் அதற்காக சாலைகளில் நிலைமை நாம் எதிர்பார்ப்பது போல அமைவதில்லை. பொறுப்போடு பயன்படுத்துபவர்கள் நிறையவே இருக்கின்றார்கள். ஒரு சிலர் பொறுப்பற்ற முறையில் சாலைகளைப் பயன்படுத்துவதால் தான் விபத்துகள் ஏற்படுகின்றன. எல்லாவற்றிலும் அவசரம் காட்டுபவர்கள் இருக்கின்றனர்.  சாலைகளில் உள்ள வாகனங்களைப் பார்க்கும் போது அவசரம் என்பது எந்த வகையிலும் நியாயமாக இருக்காது.

இந்த முறை இன்னொரு ஆபத்தையும் கிராமங்களுக்குக் கொண்டு செல்கிறோம். ஆமாம், கோரானாவைத் தவிர்க்க முடியவில்லை. கூடவே அதனையும் கூட்டிச் செல்கிறோம்! சென்ற பெருநாள் காலத்திற்குப் பின்னர் கோரோனா அதிகரித்திருக்கிறது என்கிறது சுகாதார அமைச்சு. இந்த முறையும் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்க வாய்ப்பிருக்கிறது.

என்ன செய்வது? பெருநாட்களைத் தவிர்க்க முடியாது. போய்த்தான் ஆக வேண்டும். உறவுகளைப் பார்க்க வேண்டும். ஆனால் உங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்துங்கள்  பொறுமையைக் கடைப்பிடியுங்கள். வாகனங்களைச் செலுத்தும் போதும் பொறுமைத் தேவைப்படுகிறது. உங்கள் குழந்தை குட்டிகளோடு பயணம் செய்கிறீர்கள். மகிழ்ச்சியான பயணம். மகிழ்ச்சியாகவே அமையட்டும். கோரோனாவும் கூட வருகிறது என்கிற ஞாபகம் இருக்கட்டும். முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதார அமைச்சு சொன்னால் அதனைக் கேட்டு அதன்படி நடந்து கொள்ளுங்கள். சமூக  இடைவெளியைக் கடைப்பிடியுங்கள் என்றால் அதனையும் செய்யுங்கள். அனைத்தும் நமது நன்மைக்காகத்தான் என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுங்கள்.

எதிலும் அலட்சியம் காட்ட வேண்டாம். வாகனங்களைச் செலுத்துவதானாலும் சரி, கோரோனா தொற்றை தவிர்க்க வேண்டுமானாலும் சரி  அலட்சியம் வேண்டாம். 

உங்கள் பயணம் சுகமான பயணமாக அமையட்டும்!

No comments:

Post a Comment