Sunday 10 July 2022

மீண்டும் கொரோனா!

 


நம் நாட்டில் மீண்டும் கோரோனா தொற்று தீவிரமாக மக்களைத்  தாக்கத் தொடங்கியிருப்பதாக சுகாதார அமைச்சு எச்சரித்திருக்கிறது.

சுகாதார அமைச்சரின் அறிவிப்பின் படி மலேசியர்கள் பல இலட்சம் பேர் தொற்று நோய்க்கான தடுப்பூசி இன்னும் போடாமலிருக்கின்றனர். முதல் ஊசி போடாதவர்கள் பல இலட்சம் என்றால் இரண்டாவது ஊசியும் போடாதவர்கள் இலட்சக்கணக்கில் இருக்கின்றனர்!

இந்த அளவுக்குத் தடுப்பூசி போடவில்லை என்றால் அது யாருடைய தவறாக இருக்க முடியும்? நிச்சயமாக சுகாதார அமைச்சின் தவறாக இருக்க முடியாது. ஒரு சிலர் 'நாங்கள் போடமாட்டோம்!' என்று பிடிவாதம் பிடித்தனர். ஒரு சிலர் இந்த ஊசிகளினால் 'எங்களுக்கு ஆபத்துவரும்' என்று போட மறுத்தனர். ஒரு சிலருக்குப் போக்குவரத்து பிரச்சனை அதனால் ஊசி போட முடியாத சூழல். ஒரு சிலர் இந்த மருந்துகளை 'ஹரம்'  என்று சொல்லி போட மறுத்துவிட்டனர். இப்படிப் பல காரணங்கள்!

அவர்கள் போட மறுத்தால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் சுகாதார அமைச்சு முக்கியமானவர்களை, மக்களுடன் தொடர்பு உள்ளவர்களை, போட வைத்தது பாராட்டத்தக்கது.  ஆசிரியர்கள், அரசாங்கத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்கின்றனர். தனியார் துறைகளில் வேலை செய்பவர்களை அந்த அந்த நிறுவனங்கள் தடுப்பூசி போட வைத்து விட்டனர். இவைகள் எல்லாமே பாராட்டுக்குரிய செயல்கள் தாம்.

இந்த அளவுக்கு மலேசியர்கள் தடுப்பூசி போட்டும் இன்னும் பல இலட்சம் பேர்  போடாமல் இருக்கின்றனர் என்பதை அறியும் போது கவலையளிக்கிறது. 

இப்போதெல்லாம் பலவிதமான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தடுப்பூசி தேவை என்பதாக ஒரு தரப்பும் தேவை இல்லை என்பதாக ஒரு தரப்பும் கூறுகின்றன.  பொது மக்களாகிய நமக்கு  எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. நம்மைப் பொறுத்தவரை சுகாதார அமைச்சு சொல்வதே சரி என்று எடுத்துக் கொள்கிறோம். அது தான் சரி என்பதே நமது முடிவு.

அதற்கும் ஒரு காரணம் உண்டு. இந்தத் தொற்று ஏற்பட்ட காலகட்டத்தில் மக்களின் மரண எண்ணிக்கை ஒரு பக்கம் இருக்க மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ உதவியாளர்கள் - இப்படிப்
 பலர் உயிர் இழந்திருக்கின்றனர்.  தடுப்பூசி தேவை இல்லையென்றால் இவர்கள் சாக வேண்டிய அவசியமில்லை. நேரங்காலம் இல்லாமல் மக்களுக்குச் சேவை செய்திருக்கின்றனர். அதனைக் குறைத்து மதிப்பிட அவசியமில்லை.

நாம் சொல்ல வருவதெல்லாம் இன்னும் தடுப்பூசி போடாதவர்கள் இந்த முறை வாய்ப்புக் கிடைக்கிறது. தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்பது தான்.  கொரோனாவின் வீரியத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள்!

No comments:

Post a Comment