நாட்டில் புது கலாச்சாரம் உருவாகி வருகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது!
நமக்குத் தெரிந்தவரை வீடுகளுக்கு சிவப்பு வண்ணங்களைத் தெறிப்பதும், கார்களுக்குச் சிவப்பு வண்ணங்களைப் பூசி அலங்கலோப் படுத்துவதும் யார் என்று நமக்குத் தெரியும். வட்டிக்குப் பணத்தைத் தூக்கியெறியும் வட்டி முதலைகள் அல்லது ஆலோங் - இந்த கூட்டத்தினரின் வன்முறைதான் இந்த வண்ணம் பூசும் வேலை!
அவர்கள் எந்த வன்மத்தைக் கையாண்டாலும் அதனைத் தடுக்க ஆளில்லை என்பது இன்னொரு பக்கம்!
வண்ணம் பூசுவதும்/தெறிப்பதும் வட்டிமுதலைகளிடமிருந்து தான் வரும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் வேலையில் இங்கேயும் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது! இதனை நாம் எதிர்ப்பார்க்கவில்லை.
காமடி கிளப் ஒன்றில் ஏற்பட்ட ஒரு பிரச்சனை. பெண் ஒருவர் இஸ்லாமிய சமயத்தை அவமதித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அது இப்போது காவல்துறையினரால் - சமய இலாக்காவினால் - வைசாரிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பெண் மட்டும் அல்ல அவரது கணவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
இது ஒரு புறம் இருக்க, அந்த காமடி கிளப்பின் மீது ஒரு சிலர் சிவப்பு கறுப்பு சாயங்களைத் தெறிக்க விட்டிருக்கின்றனர்! இதை நாம் எதிர்ப்பார்க்கவில்லை. வட்டிமுதலைகளால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த வன்முறை கலாச்சாரம் இப்போது ஆன்மீகவாதிகளால் கையில் எடுக்கப்பட்டிருக்கிறதோ என்று சந்தேகத்தை எழுப்புகிறது. முதலில் இதனை நாம் எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியவில்லை!
வட்டிமுதலைகள் என்பவர்கள் மக்களின் உயிரை எடுக்கும் கலாச்சாரம் உடையவர்கள்! ஆன்மீகவாதிகள் அப்படி இல்லையே. மக்களை மனிதர்களாக வாழ வைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். ஒன்று உயிரை எடுப்பது. இன்னொன்று உயிரை வாழ வைப்பது. அவர்கள் எடுக்கும் உயிர்போக்கும் கலாச்சாரத்தை இவர்கள் கையில் எடுக்க முடியாது; எடுக்கவும் கூடாது! ஒன்றுக்கொன்று எந்த வகையிலும் ஒத்துப்போகக் கூடிய ஒன்றல்ல!
இது தொடரக் கூடாது என்பதே நமது வேண்டுகோள். ஆன்மீகவாதிகள் எந்தக் காலத்திலும் வன்முறையை ஆதரிப்பவர்கள் அல்ல. அப்படி ஆதரித்தால் அவர்கள் ஆன்மீகவாதிகள் அல்ல.
இது போன்ற கலாச்சாரங்கள் நம் நாட்டுக்கு ஏற்றதல்ல. தவறு செய்த அந்த நகைச்சுவை கலைஞர்களின் செயல் சரிதானா என்பது நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கு முன்னரே நாம் அவர்களுக்குத் தண்டனைக் கொடுக்க நினைப்பதும் ஏற்புடையதல்ல.
இந்த 'பெயிண்ட்' வீசும் கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும்! வன்முறையாளர்கள் கையில் எடுத்தாலும் அது குற்ற தான். அதே போல ஆன்மீகவாதிகள் கையில் எடுத்தாலும் அது குற்றம் தான்!
நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே!
No comments:
Post a Comment