Monday 18 July 2022

எங்களாலும் முடியும்!

 

"எங்களாலும் முடியும்"  என்பதை மீண்டும் நிருபித்திருக்கின்றனர்  ம.இ.கா. தலைவர்கள். வரவேற்க வேண்டிய செய்தி என்பதில் ஐயமில்லை.

மலேசிய இந்திய உலோகத் தொழிற்துறையைச் சேர்ந்த  வர்த்தகர்கள்   பெரிதும் அவர்களைப் பாராட்டியிருக்கின்றனர். அவர்களின் மகிழ்ச்சியில் நாமும் பங்குபெறுவோம்! நல்லது நடக்கும் போது அரசியல்வாதிகளைப் பாராட்டுவதும் நமது கடமையே!

உலோகத் தொழில் துறை மற்றும் சேவைத்துறையைச் சேர்ந்த சுமார் 25,000 வர்த்தகர்கள் பயன்பெறும் வகையில் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டிருப்பதாக வர்த்தகர்கள் அரசாங்கத்திற்குத் தங்களது நன்றியைத் தெரிவித்திருக்கின்றனர்.

ம.இ.கா. தலைவர்களை - டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன் - இருவரையும்  நாம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த வர்த்தகர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் அனைத்துக்கும் தீர்வைக் கண்டிருப்பது நமக்கும் மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த நேரத்தில் நாம்  வேறு சில  விஷயங்களையும்  நமது தலைவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

அதுவும் குறிப்பாகக்  கல்வி சார்ந்த சில விஷயங்கள்.  நமது பத்திரிக்கைகளில்  வருகின்ற  செய்திகள் தான்.  

பள்ளிகள் கட்டப்பட்டுவிட்டன. ஆனால் பயன்படுத்த முடியவில்லை.  ஏற்கனவே பாதி கட்டடங்களோடு அப்படியே வேலை நின்று போய் காட்சியளிக்கும் பள்ளிகள். பள்ளிகள் கட்டுவதற்குப் பணம் கொடுத்தாயிற்று  ஆனால் பள்ளி எழவில்லை.  பள்ளிக்கு  அமைச்சர் அடிக்கல் நாட்டினார்  அது அப்படியே வேலையே தொடங்கப்படாமல்  மூலியாக நிற்கிறது.

இவைகள் எல்லாம் பெரும்பாலும் ம.இ.கா. தலைவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகள் தான். இந்தப் பள்ளிகளுக்கு எந்த ஒரு தீர்வும் காணப்படாமல் அப்படியே அசிங்கமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன!

நாம் இங்கு சொல்ல வருவதெல்லாம் இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரு தீர்வைக் காண முயற்சி செய்யுங்கள்  என்பது தான். இது கல்வி சம்பந்தப்பட்ட விஷயம். உண்மையில் நாம் கட்சி  கண்ணோட்டத்தோடு இதனைப்  பார்க்க முடியாது. அப்படிப் பார்க்கவும் கூடாது. ஏன் சீனர்கள் பார்ப்பதில்லையே? கல்வி என்று வரும்போது அவர்கள் ஆளுங்கட்சி எதிர்கட்சி என்பதாக வித்தியாசம் பார்ப்பதில்லை.  ஆனால் நாம் பார்க்கிறோம்! நாம் நமது மொழியை நேசிப்பதில்லை, அவ்வளவு தான் சொல்ல முடியும். பக்காத்தான் கட்சியின் 22 மாத கால ஆட்சியில் இருந்தவர்களைக் குற்றம் சொல்லுவதில் நியாயமில்லை. அவர்கள் தொடர்ந்து இருந்திருந்தால் பள்ளிக் கட்டடம் சம்பந்தமான பல பிரச்சனைகளுக்குத்  தீர்வு கண்டிருப்பார்கள் என்று ஆணித்தரமாக நம்புகிறேன்.

இப்போது ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் ம.இ.கா.வினர். அது போதும்  இந்த பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு.  பிரச்சனைகளைத்  தீர்ப்பதற்கு நீங்கள் எந்த ஒரு முயற்சியும் செய்யாவிட்டால் நீங்கள் மக்கள் முன் தலை நிமிர முடியாது. செய்வது உங்கள் கடமை. கடமை தவறினால் அது உங்கள் மடமை. பதவிகள் உங்களை அலங்கரிக்க வேண்டுமென்றால், நம் மக்களுக்கு, உங்கள் பங்களிப்பும் அவசியம். ஒரு வழிச்சாலை என்பதெல்லாம் இனி இல்லை! புரிந்து கொண்டால் போதும்.

உங்களால் முடியும் என்கிற போது அதனை ஏன் தள்ளிப்போட வேண்டும்? உங்களால் முடியும் என்பதை இந்த சமுதாயத்திற்குக்  காட்டுங்கள். அது போதும்.

No comments:

Post a Comment