Thursday, 27 February 2025

செயின் போல் பள்ளி (14)




                        வனத்து சின்னப்பர் சிற்றாலயம்,தேர்ட் மைல் எஸ்டேட்
                                                               எஸ்டேட் நுழைவாயில்

நான் 
சிரம்பானில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்  எனது பெற்றோர்கள் சிரம்பான் அருகே அள்ள தேர்ட் மைல் எஸ்டேட்  (அதாவது தமிழில் மூனாங்கட்டை என்பார்கள்) அங்கே மாறி வந்தார்கள்.

அவர்கள் நோக்கம் சரியாக இருந்தாலும் குறைந்தபட்சம் நான் இரண்டு மைல் தூரம் நடந்து போக வேண்டும்! அதுவும் காட்டுவழியில்! நல்ல வேளை அப்போது  என்னோடு அச்சுதன் என்னும் இன்னொரு மாணவரும்  சேர்ந்து கொண்டார். அவர் வரவில்லை என்றால்  நான் தனியாகத்தான்  போக வேண்டும். நான் பள்ளிப் போகின்ற காலத்தில் விடுமுறை எடுத்ததாக நினைவில் இல்லை.

இந்தத் தோட்டம் எனக்கொரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது.  எங்கள் வீட்டுப் பக்கத்திலேயே  சாரங்காபாணி என்னும் பெரியவர் சிறிய மளிகைக்கடை நடத்தி வந்தார். அவ்ர் தினசரி "தமிழ் நேசன்" நாளிதழை வாங்கிவந்தார். அப்போது தான் பத்திரிக்கை படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்தக் காலகட்டத்தில் தான் "பராசக்தி" படம் வந்த நேரம்.  தமிழ்ப்பள்ளிகளில் படித்த பலர் சிவாஜி கணேசன் வசனங்களைப் பேசி கல்வியில் கோட்டை விட்டனர். அதில் என் நண்பன் சுகுமாரனும் ஒருவர்.  அவர் கருணாநிதியின் புத்தகங்களைக் கொண்டுவந்து குவிப்பார்! அவர் படித்தாரோ இல்லையோ நான் அனைத்தையும் படித்தேன்.

அப்போது தான் "இந்தியன் மூவி நியூஸ்" சினிமா மாத இதழ் சிங்கப்பூரிலிருந்த வந்த நேரம்.  அந்தோனி என்னும்  அண்ணன் ஒருவர் தவறாமல் அந்த மாத இதழை வாங்கி வருவார். நான் தவறாமல் படிப்பேன்!  பக்கத்து வீட்டுப் பெரியவர் ஒருவர் விக்கிரமாதித்தன், தேசிங்குராஜன்,  நல்லதங்காள்  புத்தகங்களை வாங்கிவந்து ராகம் போட்டுப் படிக்கச் சொல்வார். இப்படித்தான் பலதரப்பட்ட மாத இதழ்களை, நூல்களைப் படிக்கின்ற பழக்கம்  எனக்கு ஏற்பட்டது. பள்ளிப்பாடங்களுக்கு உதவ தான் யாருமில்லை!

நான் மேல் குறிப்பிட்ட அண்ணன் அரசாங்கத்தில் பதிவு இலாகாவில்  பணிபுரிந்தவர், அதனால் அவரே எனக்கு அலுவலகத்திற்குப் போகாமலே அடையாளக்கார்டை எடுத்துக் கொடுத்தவர். 

அந்தத் தோட்டத்தில் இருந்த போது ஒரு விஷயத்தைக் கற்றுக் கொண்டேன்.  அது தான் படிக்கின்ற பழக்கம்.



அறிவோம்: சீனாவின் அதிசய "மூங்கில் மரம்" பற்றி அறிந்திருக்கிறீர்களா?  விதையை  மண்ணில் விதைத்து, நான்கு ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டும்.தினசரி தண்ணீர் ஊற்ற வேண்டும், உரம் போட வேண்டும் ஆனால் எந்தவொரு வளர்ச்சியும் வெளியே பார்க்க முடியாது. அது தனது வேர்களை மண்ணுக்கு அடியில்  வலிமையாக ஆழப்படுத்திக் கொண்டு போகும்.  ஐந்தாம் ஆண்டு  அதன் தளிர்கள் தலை தூக்கும். பின்னர் அது கிடுகிடு என வளர்ந்து அடுத்த இரண்டு மாதத்தில் 150 அடிவரை வளருமாம்! 

Wednesday, 26 February 2025

நீண்ட பயணம் ஆரம்பம்!


 கல்வியில் எனது நீண்ட பயணம் என்றால் அது சிரம்பானில் உள்ள செயிண்ட் போல் பள்ளி தான். முதல் ஆறு ஆண்டுகள் காலை நேரம் பின்னர்  மூன்று ஆண்டுகள் மாலை நேரப்பள்ளி. காலை நேரப்பள்ளியில் திறமையற்ற என்னைப்போன்ற  மாணவர்களை மாலை நேரத்தில் தள்ளி விட்டார்கள்.

ஒன்றை நான் சொல்லியாக வேண்டும். நான்  திறமையற்ற  மாணவன் என்று சொல்லிவிட முடியாது. எந்த ஒரு வழிகாட்டியும் இல்லை.  கடைசிவரையிலும் இல்லை. ஏதோ பள்ளிக்குப் போனோம் வந்தோம். என்னத்தையோ படித்தோம். அவ்வளவு தான்.  ஆசிரியர்களிடம் கேட்க தைரியம் இல்லை. ஆங்கிலம் வராது.  ஆசிரியர்கள்  அனைவருமே சீனர்கள். 

உண்மையில் மாலை நேரப்பள்ளி ஒரு வராப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். காலை நேரத்தில்  சிலோனீஸ் மாணவர்கள் மற்றும்  மலையாள மாணவர்கள் - இவர்கள் எல்லாம்  நம்மைப் பார்த்தாலே ஆகாது.  என்னுடைய சூழலில் உள்ள மாணவர்கள் யாரும் இல்லை. அதனால் சீன மாணவர்கள் தான்  நண்பர்கள். அவர்களும் என்னைபோன்ற புத்திசாலிகள்!

மாலை நேரப்பள்ளியில் இந்திய மாணவர்கள், மலாய் மாணவர்கள், சீன மாணவர்கள்  எல்லாம் ஒரு கலப்பு. . அப்போது தான் பேசக்கூடிய தைரியமே வந்தது. நாலு பேரோடு பேசுகின்ற துணிவும் வந்தது. ஆனால் பரிதாபம்.  கல்விக்கு அது உதவவில்லை.  எப்படியோ சீனியர் கேம்ப்ரிட்ஜ் பரிட்சை எழுதும் அளவுக்குப் போய்விட்டேன். வெற்றி பெறவில்லை.

நான் செண்டாயான் தோட்டத்தில் தான் எனது கல்வியை ஆரம்பித்தேன். ஆனால் ஆச்சரியம் என்னைத்தவிர  வேறு மாணவர்கள் யாரும் என்னோடு படித்ததில்லை. நான் அங்கிருந்த மூன்று ஆண்டுகளில் நான் ஒருவனாகத்தான் தனி ஆளாக போய் வந்துகொண்டிருந்தேன். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால்  சேர்ந்து படிக்க உதவியாக இருந்திருக்கும் அல்லவா?


 அறிவோம்:  அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை எப்போது தனது வண்ணத்தை மாற்றியது?  1814 - ம்- ஆண்டு இங்கிலாந்துக்கும்  அமரிக்காவுக்கும்  கடும் போர் நடந்தது. அந்த நேரத்தில்  அமரிக்க அதிபரின்  மாளிகை -  பல வண்ணங்களோடு  இருந்த மாளிகையை - நெருப்பு வைத்து எரித்தனர் இங்கிலாந்து படையினர். எரித்த பாகங்களை மறைக்க  வெள்ளையடித்து மறைத்தனர்  அமெரிக்கர்கள்.  ஆக, இன்றுவரை,  வெள்ளையடித்த  மாளிகை,  வெள்ளை மாளிகை (White House) யாகவே  தொடர்கிறது.   

வரலாற்று ஆசிரியர் மன்னர் மன்னன்

Tuesday, 25 February 2025

இரண்டு ஆண்டுகளே படித்தேன் (12)

இரண்டு ஆண்டுகள் நான் போர்ட்டிக்சன் ஆங்கிலப்பள்ளியில் படித்தேன் எதனையும் ஞாபத்திற்குக் கொண்டுவர முடியவில்லை.

நான் மறக்க முடியாதது என்றால்  பள்ளி,  கடற்கரை ஓரமாக இருந்ததால்  காலை பள்ளிக்கூடம் போனதும் முதல் வேலை மீன் பிடிப்பது தான்! அப்போது கரை கட்டப்படாத  கடலாக இருந்ததால் தண்ணீர்  வகுப்பறை அருகேவரையில் வரும்.  கடலையே பார்க்காத என்னைப் போன்றவர்களுக்குக் கடல்  நீரைப் பார்ப்பதே மிகவும் மகிழ்ச்சியான விஷயம் தானே!  மீன்களைப் பிடிப்பதும் அவைகளை மீண்டும் தண்ணிரீலேயே  விடுவதும் எங்களின் காலை நேர விளையாட்டு!  தண்ணீர் வெய்யில் வரும் நேரத்தில் எல்லாம் வடிந்துவிடும். கடலுக்குப் போகாமலே  கடல் நீரில்  விளையாடுவது அதற்குப் பின்னர் அமையவில்லை.

இன்னொரு மறக்க முடியாத நினைவுகள் என்றால் அந்த சமயத்தில் அங்கு விற்கப்பட்ட  நாசிலெமாக். அந்தக் காலத்தில் பெரியவர்களால்,   அவர்கள் கைகளால்,  செய்யப்பட்ட  நாசிலெமக்  அதன் சுவையே தனி.  அதன் பிறகு அந்தச் சுவையே கிடைக்கவில்லை.  கொஞ்சம் சோறு, சம்பல்,  ஒரு ஊடான் - அது போதும். அதன் பின் பசி என்பதே இல்லை! ஆனால் அதன் விலையை  என்னால் ஞாபகத்திற்குக் கொண்டுவர மூடியவில்லை. காரணம் அப்போது காற் காசு, அரைக் காசு, முக்கால் காசு, ஒரு காசு  புழக்கத்தில்  இருந்த நேரம். ஐந்து காசு கூட அப்போது இருந்ததா? தெரியவில்லை. 

எப்படியோ இரண்டு ஆண்டுகளை  அந்தப்பள்ளியில் கழித்துவிட்டேன். 1950-ம்  ஆண்டு  சிரம்பான் St.Paul's Institution பள்ளிக்கு என் தந்தையார் மாற்றிவிட்டார். 


அறிவோம்:  புத்தகங்களைப் படிப்பது என்பது இப்போது மிகவும் குறைந்து போனது.இளம் பெற்றோர்கள் யாரும் புத்தகங்களைப் படிப்பதில்லை.   கைப்பேசிகளிலேயே  படித்துவிடுகிறோம்  என்கிறார்கள். குழந்தைகள் படிப்பதைவிட பார்ப்பதைத் தான் விரும்புகிறார்கள். புத்தகங்கள படிப்பதை  மீண்டும் பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும். அமெரிக்க முன்னாள் ஜனாபதி  ஆபிரகாம் லிங்கன்  32 மைல் நடந்து போய் ஒரு புத்தகத்தை வாங்கி வந்தராம். அவரைப்பற்றி தான் இன்றுவரை உலகம் பேசிக் கொண்டிருக்கிறது. புத்தகத்தின் சிறப்பு அது தான்.

Monday, 24 February 2025

ஆங்கிலப்பள்ளி எப்படி? (11)

                                SK Port Dickson (Govt. English Primary School)

ஆங்கிலப்பள்ளி என்பதால் எந்த ஒரு பயமும் ஏற்பட்டதாக நினைவில் இல்லை. ஏற்கனவே  மூன்று ஆண்டுகள் தமிழ்ப்பள்ளியில்  படித்திருப்பதால்  அனைத்தும் சுமூகமாகத்தான் இருந்தன. ஒரே ஒரு குறை: ஆங்கிலம் பேச வராது என்பதைத் தவிர குறை ஏதும் இல்லை!

எனது முதல்,  வகுப்பு (Primary 1)  ஆசிரியை: மிஸ் நாயர்.  வகுப்பில் அதிகம் இருந்தவர்களில்  மலாய் மாணவர்களே அதிகம் என நினைக்கிறேன். இந்திய மாணவர்கள் இருந்தார்களா என்பதும் தெரியவில்லை.  யாரிடமும் தமிழில் பேசியதாக நினைவில் இல்லை.   வகுப்பில் குறைவான மாணவர்கள் தான்.

 எனது முதலாவது நண்பன்  என்றால் எனது பக்கத்தில் அமர்ந்திருந்த மலாய் மாணவன் ஏடம் (Adam)  என்பவன் தான். இத்தனை ஆண்டுகள் ஆகியும் அவனது முகம் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. எப்போதும் சிரித்த முகம். என்னைவிட இரண்டு மூன்று  வயது கூட இருக்கும். என்னைப் பார்த்து அவன் காப்பி அடிப்பான்!

என்னிடம் உள்ள 'திறமை' என்னவென்றால்  எனக்கு வாசிக்கும் திறன் உண்டு. புரிகிறதோ புரியவில்லையோ, வாசிக்கத் தெரியும்! சொல்வதெழுதல்  (Dictation)  நன்றாகவே செய்வேன்.

அந்தப்பள்ளியில் தான் நோட்டுப்புத்தகம், பென்சிலில் எழுதுகிற பழக்கம் வந்தது. தினசரி  தேதி, மாதம், ஆண்டு எழுதுகின்ற பழக்கமும் வந்தது. அப்போது தான்  ஆண்டு 1948 என்று மறக்க முடியாதபடி ஆண்டின் ஞாபகமும்  திணிக்கப்பட்டது.  பின்னர் அதுவே பழக்கத்திற்கு வந்துவிட்டது.


அறிவோம்: மலேசியாவில் தமிழ்க்கல்வி எங்கு, எப்போது ஆரம்பிக்கப்பட்டது?  Penang Free School  என்னும் பள்ளியில், பினாங்கில் - 21-10-1816 - அன்று  தான் தமிழ்க்கல்வியின் தொடக்கம். (209 ஆண்டுகள்) தொடங்கியவர்:  Rev.Hutcings. நாம் வாழும் சிரம்பான் நகரின் ஜாவா லேன் தமிழ்ப்பள்ளியில் தொடக்கம் 1898 - ம் ஆண்டு.

Sunday, 23 February 2025

எனது முதல் ஆங்கிலப்பள்ளி (10)

                                       Port Dickson English Primary School (1950)
அந்தக் காலத்தில் ஆங்கிலப்பள்ளிகளில் சேர்வது என்பது கொஞ்சம் கடினமான விஷயம்.

.  பெரும்பாலும் படித்தவர்கள் வீட்டுப் பிள்ளைகளே பள்ளியில் படிப்பார்கள். ஏற்றத்தாழ்வுகளைப் பார்ப்பவர்கள் என்றால்  அது பெரும்பாலும் இலங்கைத் தமிழர்களாகத்தான் இருப்பார்கள். பள்ளிகளில் அவர்களின் ஆக்கிரமிப்பு அதிகம். 

எனது தந்தையார் பிரச்சனையைச் சமாளிக்க போர்ட்டிக்சனில் உள்ள தேவாலயத்திற்குச் சென்று  அங்குள்ள பாதிரியாரிடம் சிபாரிசு கடிதம் கேட்டார். அவரோ "நீயோ பால்மரம் வெட்டுபவன் உன் பிள்ளை என்ன பேனா பிடித்து எழுத வேண்டுமோ?"  என்று சொல்லி   கடிதம்  கொடுக்க   மறுத்துவிட்டார்.  அவரும்  இலங்கைத்தமிழர்.  அது அவர்களின் பிறவிக்குணம். பின்னர் என் தந்தையார் பள்ளி அலுவலகத்தில் அதிகாரியாக இருந்த ஓர் இலஙைத்தமிழருக்கு இலஞ்சம் கொடுத்துத்தான் என்னைப் பள்ளியில் சேர்த்துவிட்டார். வீட்டில் வளர்த்த ஒரு பசு மாட்டை விற்று  அந்தப் பணத்தை  இலஞ்சமாகக் கொடுத்துத் தான் நான் பள்ளியில் சேர முடிந்தது. அது நடந்தது 1948-ம் ஆண்டு. அப்படி ஒரு நிலைமை இப்போது இல்லை.

படித்தவர்கள் வீட்டுப் பிள்ளைகள் போகும் பள்ளிக்கூடம் என்பதால்  முதல் நாளே என் தந்தையார்,   வேர்வையைத் துடைக்க ஒரு கைக்குட்டை சிலுவார் பாக்கெட்டில் வைத்துவிட்டார், என் தாயார் சட்டைப்பாக்கெட்டில் ஒரு ஜெபமாலையை வைத்து "மறவாதே! எப்போதும் வைத்திருக்க வேண்டும்" என்று கட்டளையிட்டுவிட்டார். இன்றுவரை   இரண்டையுமே மறக்கவில்லை. அதைத்தான் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்றார்களோ?


அறிவோம்: நம்மை ஏழ்மை நிலையிலிருந்து  அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போக  கல்வி இருந்தால் போதும்.  வேறு எதுவும் தேவை இல்லை. கல்வி இல்லையென்றால்  நாம் அடிமைகளாகத்தான் வாழ வேண்டும்.

Saturday, 22 February 2025

இப்படியும் எழுதலாமே! (9)



கடிதம் எழுதுவது எப்படி?  கடிதம் எழுதுவது ஒரு கலை.

 இடைநிலைப்பள்ளியில்  படிக்கும் போது இது போன்ற தலைப்புகளில் புத்தகங்கள் தேவைப்பட்டன.  மற்ற மாணவர்களைப் போல நானும் வாங்கிப் படித்திருக்கிறேன்.   மாதிரிக் கடிதங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். 

ஆனால் நடைமுறை என்று வரும்போது நமக்கு அப்படி ஒரு சூழல் ஏற்படவில்லை.  தமிழ்நாட்டிலிருந்து  உறவுகளிடமிருந்து கடிதங்கள் வரும். பதில் எழுத ஆளில்லை. அக்கம் பக்கமும்  ஆள் இல்லை.  என் பெற்றோர்கள் ஏதோ ஒவ்வொரு எழுத்தாகக் கூட்டிப் படிப்பார்கள். ஆனால் எழுதுவதற்கு உதவாது. எனக்கு அப்போது ஏழு வயது இருக்கும்.  என் தந்தையார் என்னை எழுதச் சொன்னார்.  நான் மூன்றாம் வகுப்புவரைத் தமிழ் பள்ளியில்  படித்திருக்கிறேன். எழுதுவேன்.  ஆனால் ஒவ்வொரு சொல்லாகச்  சொல்ல வேண்டும். அதுதான் விதிமுறை.

அப்படித்தான் நான் கடிதங்கள் எழுதினேன்! அக்கம் பக்கத்தாருக்கும் கடிதங்கள்  எழுதினேன்!  ஒன்று மட்டும் உறுதியானது.  நான் தமிழை மறக்க வழி இல்லாமல் போயிற்று.

அப்போதெல்லாம் கடித முகவரி எல்லாம் தமிழில் எழுதினால் போதும். நமக்கும் வந்து சேர்ந்துவிடும். அங்கும் போய் சேர்ந்துவிடும். அஞ்சலகங்களில் இலங்கைத் தமிழர்களின் ஆதிக்கம் அதிகம்.  காரணம் இதுதான். 

ஒரு மொழியை மறக்காமல் இருக்க வேண்டும் என்றால் தொடர்ந்து எழுதி பயிற்சி செய்வதுதான். இது தான் எனது அனுபவம். 


அறிவோம்:  மலேசியாவின் முதல் அஞ்சலகம் எதுவாக இருக்கும்?  தைப்பிங் நகரில் உள்ள அஞ்சலகம் தான் மிகப்பழமையான அஞ்சலகமாக கருதப்படுகிறது. 1884-ம்  ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்த அஞ்சலகம் இப்போது மியுசியமாக  மாற்றப்பட்டுள்ளது.

Friday, 21 February 2025

ஓடி விளையாடு பாப்பா! (8)


 முன்பெல்லாம் பலவிதமான விளையாட்டுகளை நாம் விளையாடி வந்தோம்.

பல விளையாட்டுகளின் பெயர்களே மறந்து போயின. எல்லாமே தமிழ் நாட்டிலிருந்து வந்த  விளையாட்டுகள் தாம்.

சடுகுடு, கோலாட்டம், பம்பரம் விடுதல்,  குண்டு விளையாடுதல்,  தாயம் விளையாடுதல், நொண்டியடித்தல், பல்லாங்குழி ஆட்டம் - அதற்கு மேல் ஞாபகத்திற்குக் கொண்டுவர முடியவில்லை. விளையாட்டுகள் எல்லாம் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு விளையாட்டு. அதிகமாக ஆடும் ஆட்டம் என்றால்  பம்பரம், குண்டு விளையாடுதல். எப்போதும் விளையாடுவது அல்ல. அதற்கும் ஒரு காலம் உண்டு!

சமீபத்தில்  விடியோ ஒன்றைப் பார்த்த போது ஆப்பிரிக்க பழங்குடி மக்கள்  தாயம், நொண்டியடித்து  விளையாடுவதைப் பார்த்தேன்.  ஆச்சரியம் என்னவென்றால்  நமக்கு இந்த விளையாட்டெல்லாம் மறந்து போய் விட்டன.  பழைய விளையாட்டுகள் மறந்து போயின  என்றால் புதிய விளையாட்டு மட்டும் விளையாடுகிறோமா? அதுவுமில்லை!  சோம்பேறித்தனம் தான் அதிகமாக வளர்ந்துவிட்டது

ஓடி விளையாடு பாப்பா என்றார் பாரதி. இப்போது ஓடுவதும் இல்லை ஆடுவதும் இல்லை, வில்லாடுவதும் இல்லை விளையாடுவதும் இல்லை - எல்லாவற்றிலுமே ஒரு தேக்கநிலை. பெற்றோர்களும் அதை அனுமதிப்பதுமில்லை.  வருங்காலங்களில் வேறு பெயர்களில்  "ஓடி விளையாடு பாப்பா"  வரலாம். வராமலும் போகலாம்.


அறிவோம்:  "நான் சுமார் 1500  ஓட்டப்பந்தயங்களில்  கலந்து கொண்டிருக்கிறேன். 500 க்கு மேற்பட்ட  பந்தயங்களில்  பரிசுகளைப் பெற்றிருக்கிறேன். ஆனால் நான் 1500 போட்டிகளில் கலந்து கொண்டதுதான்  எனது வெற்றிக்குக் காரணம்."  பேராசிரியை  பர்வீன் சுல்தானா.

Thursday, 20 February 2025

வேட்டையாடு விளையாடு! (7)

பன்றி வேட்டை என்பதெல்லாம்  அப்போது அடிக்கடி நடக்கும். அதற்காகவே வேட்டை நாய்களை வளர்ப்பார்கள்.  வேட்டை நாய்கள் உண்டா என்பதே தெரியாது. அது சாதாரண தெரு நாய்களாகக் கூட  இருக்கலாம்.  தெரு நாய்களை வேட்டை நாய்களாக  மாற்றும் திறமை எல்லாம் அவர்களுக்கு உண்டு!  எல்லாம் காலத்தின் கட்டாயம்!

பன்றி வேட்டை அடிக்கடி நடைபெறும். இப்போது துப்பாக்கிகளைப் பயன்படுத்தி எளிதாகக் காட்டுப்பன்றிகளை சுட்டுத் தள்ளிவிடுகிறார்கள்.  ஆனால் கையில் ஈட்டியை வைத்துக் கொண்டு  பன்றிகளை விரட்டி ஈட்டியால் குத்தி அவைகளைக்  கொல்ல வேண்டும்.  உயிரோடு பிடிப்பதெல்லாம் இயலாத காரியம்.  அது கடினமான வேலை தான்.  நாம் தான் கடினமான வேலைக்கெல்லாம் அஞ்சாதவர்கள் ஆயிற்றே!

பின்னர் தோட்டத்தில் அந்த இறைச்சியை விற்றுவிடுவார்கள்.  அவ்ர்களிடம் நாங்களும் வாங்கும் பழக்கம் உண்டு.  பன்றியைத் தேடிப் போகும் போது  சமயங்களில் உடும்பு, அலுங்கு (எறும்புத்திண்ணி)  போன்றவைகளும்  கிடைக்கும்.  எல்லாமே சாப்பிடக் கூடியவைகள்  தானே?  அப்படித்தான் நான் நினைக்கிறேன். 

காட்டுப்பன்றிகள் பயங்கரமான ஒரு மிருகம். வேட்டை  நாய்கள் இல்லாவிட்டால்.  மனிதர்களை அது கொன்றுவிடும். எந்த அசம்பாவிதமும்  நடந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. வீரப்பரம்பரை ஆயிற்றே!

இதனைப் பொழுது போக்காகவும்  எடுத்துக் கொள்ளலாம் அல்லது வீர விளையாட்டாகவும்  எடுத்துக் கொள்ளலாம்.  உண்மையில் பன்றி வேட்டை உணவுக்கான வேட்டை!


அறிவோம்:  5300 ஆண்டுகளுக்கு முன் உலகிலேயே முதன் முதலாக  இரும்பைக் கண்டுப்பிடித்த தமிழர்களாகிய  நாம்  மிருகங்களைக் கொல்ல ஈட்டிகளைத்தானே  பயன்படுத்தினோம். நமக்கு இது புதிதல்ல.

Wednesday, 19 February 2025

நான் பார்த்த முதல் கார் (6)

     
                                   Peugeot 203  Vintage Car 1950

இப்போதெல்லாம் கார்களைப் பார்ப்பது பெரிய விஷயமே இல்லை. எந்த நாட்டுக் கார்களையும் நம் நாட்டில் பார்க்கலாம்.

ஆனால் தோட்டப்புறங்களில் எந்தக் காரைப் பார்ப்பது அதுவும் அந்தக் காலத்தில்?  வாய்ப்பே இல்லை ராசா!

எனது பக்கத்து வீட்டு நண்பன் என்னைவிட முன்று நான்கு வயது பெரியவன்.  நான் பள்ளிக்கூடம் போன காலத்தில் அவன் பள்ளிக்கூடம் போகவில்லை.   அவன்,  தான் விரைவில் மலாக்கா போவேன். அங்கே பள்ளிக்கூடம் போவேன் என்று சொல்லுவான். அவர்கள் தற்காலிகமாக, வேறு வழியில்லாததால்,  தோட்டத்திற்கு வேலைக்கு வந்தவர்கள். அவர்கள் தந்தையார் நோய்வாய்ப் பட்டதால்  குடும்பம் நொடித்துப்போனது.

அவன் சொன்னது போல அவனுடைய மாமா ஒரு நாள் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார்.  அவர் மலாக்காவில்  மாட்டு டாக்டராக  (Veterinary Doctor) இருந்தவர். அவர் வந்த கார் தான் புஜோட்.  அப்போது தான் ஒரு காரையே முழுசாகப் பார்த்தேன். அது புஜோட் கார் என்று நண்பன் தான் சொன்னான்.  புஜோட் என்கிற பெயர்  அப்படியே மனதில் பதிந்து விட்டது. பிற்காலத்தில் நானும் புஜோட் காரைப் பயன்படுத்திருக்கிறேன்.ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அதனை விற்றுவிட்டேன். இப்போதும் அது தான்  எனக்குப் பிடித்தமான கார்.

ஒன்றை நினைத்துப் பார்க்கிறேன்.  நாடு வெள்ளையனின்  காலனியாக இருந்தது. கார்கள் எல்லாம் பெரும்பாலும்  பிரித்தானிய  கார்கள்தான் வரும். அந்தக் காலத்தில்  பிரஞ்ச்காரன் கார் எப்படி வந்தது என்பது தெரியவில்லை. புஜோட் பிரஞ்ச் நாட்டைச் சேர்ந்த கார். பயன்பாட்டில் இருந்தவை மோரிஸ் மைனர் கார்கள். வெள்ளையனின் கார். 

எப்படியோ என் நண்பனின் மாமா புதுமை விரும்பியாக இருக்கலாம்.  எனக்கும் அது ஒட்டிக்கொண்டது.  இப்போதும் அத தான் எனது நம்பர் ஓன்!

அறிவோம்:  இத்தனை ஆண்டுகளில் இப்போது தான், முதன் முதலாக,  பாலக்காடு தமிழரான  நடிகர் அஜித் குமார்,  கார் பந்தயத்தில் பரிசு பெற்றிருக்கிறார். தமிழர்களுக்கு அது பெருமை தானே!


Tuesday, 18 February 2025

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் எப்படி? (5)

அப்போதெல்லாம் பெருநாள் கொண்டாட்டம் என்றால் எங்களுக்கு கிறிஸ்துமஸ்  இன்னொன்று ஈஸ்டர்.

ஞாயிற்றுக்கிழமை  வழிபாடு என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத காலம். சுருக்கமாகச் சொன்னால்  போக்குவரத்து இல்லாத காலம்.   இந்த இரண்டு பண்டிகைகளுக்கும்  இரவில்  வழிபாடுகள் நடக்கும்.   தோட்ட நிர்வாகம்  லோரி கொடுத்து உதவி செய்யும். மாலை நேரத்தில்  லோரியில் ஏற்றிக் கொண்டு போய் கோவிலில்  இறக்கி விடுவார்கள்.  வழிபாடு  இரவு 11.30 க்கு.

கோவில் அருகிலேயேகிறிஸ்துவ பள்ளிக்கூடம். (St.Paul's Institution) அங்குள்ள பள்ளி மண்டபத்தில் அனைவரும் தங்கி இரவில்  வழிபாட்டுக்குப்  போவோம். அது போன்ற நாள்களில்  தியேட்டர்களில் புதிய தமிழ்ப்படம் ஒன்றை இரவு காட்சியாகப்  போட்டுவிடுவார்கள். அதைப் பார்த்துவிட்டுத்தான் இரவு வழிபாடு. அடுத்த நாள் காலை பஸ் பிடித்து வீடு திரும்புவோம். வீடுதிரும்புமுன் ஏதோ ஒரு சீனர் கடையில் மீ கோரெங் சாப்பிட்டுவிட்டுத்தான்  திரும்புவோம். அப்போது தமிழர்களின் சாப்பாட்டுக் கடை  ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை.

இது தான் பண்டிகைக் காலங்களில்  நமது வாடிக்கை.  பண்டிகை என்றாலே மகிழ்ச்சி  தானே. அதிக  மகிழ்ச்சி என்பது: லோரியில் பயணம் செய்வது 2) சினிமா படம் பார்ப்பது!  கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை எல்லாம் பார்த்ததில்லை. 

ஆட்டு இறைச்சி சாப்பாடு என்பது  பண்டிகைக்காலம்  மட்டும் தான், ஓர் ஆட்டை வாங்கி  நாலைந்து குடும்பங்கள் கூர் போட்டுக் கொள்வார்கள். கோழி  இறைச்சி என்றால் வீட்டில் வளர்க்கப்படும் கோழி தான். அதற்கு வீட்டிற்கு யாராவது உறவினர்கள் வரவேண்டும்.  மீன் உணவைப் பார்த்ததில்லை. அதற்குச் சிரம்பான்  மார்க்கெட் போக வேண்டும். ஆனால் அதெல்லாம் ஒரு பிரச்சனையாகத்  தோன்றியதில்லை.  ஏங்கியதுமில்லை.

பண்டிகைகள் அப்போதும் மகிழ்ச்சியைக் கொடுத்தன இப்போதும் கொடுக்கின்றன.  வசதிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும்  பண்டிகை என்பதே மகிழ்ச்சியான விஷயம் தான்!

Monday, 17 February 2025

பாஷாணம் சாப்பிட்டால் என்ன ஆகும்? (4)


 தோட்டங்களில் பாஷாணம் அடிப்பது சாதாரண விஷயம்.  செடி கொடிகள்,  புதர்கள், வளரும் லாலான்கள்  இவைகளுக்கெல்லாம்  பாஷாணம் அடிப்பது  எப்போதும் உள்ளது தான்.

தொழிலாளர்களுக்கு இதனை முன்னமையே அறிவித்துவிட்டால்  அவர்கள் தங்கள் மாடுகளை மேய விடமாட்டார்கள்.  கொட்டகையில் கட்டிப்போட்டு விடுவார்கள்.

ஒரு முறை  நிர்வாகம் அறிவிக்கவில்லை.  மாடுகள் மேய போய்விட்டன. மலைக்காடுகளில் மாடுகள் மயங்கி விழுகின்றன. அப்போதெல்லாம்  மாட்டு டாக்டர், கால்நடை இலாக்கா எல்லாம் கேள்விப்படாத காலம்.  மாடுகளையெல்லாம் இழுத்துக்கொண்டு வந்தார்கள். அதற்கான சிகிச்சை எந்த புண்ணியவான் சொன்னாரோ! எங்கள் வீட்டு முன் தான் சிகிச்சை நடந்தது.  அதில் எங்கள் மாடும் சம்பந்தப்பட்டிருந்தது.

என்ன சிகிச்சை?  மலத்தொட்டியிலிருந்து மனிதமலத்தை அள்ளிவந்து  மாட்டின் வாயில் ஊற்றி குடிக்க வைப்பது! அது தான் சிகிச்சை!  என்னவோ,  மாடுகள் பிழைத்துக்  கொண்டன!  நமக்கு என்ன தெரியும்? அது ஒரு வைத்திய முறை! அவ்வளவு தான். நஞ்சை நஞ்சால் தானே எடுக்க வேண்டும்?

5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பைக் கண்டுபிடித்து  அப்போதே கத்தி, வாள்களைத் தயார் செய்த தமிழனுக்குத் தெரியாத  வைத்தியமா? என்ன கொஞ்சம் நாற்றமடிக்கும், அவ்வளவு தான்!

அந்தக் காலகட்டத்தில்  எங்களிடமும் ஓரிரு மாடுகள் இருக்கும்.  எல்லாம் பாலுக்காகத்தான். தயிர் எப்போதும் இருக்கும். அப்போதெல்லாம் பால் தூய்மையாக இருக்கும்.  அதன் பின்னர் என்னவோ  சீமை மாடு என்றார்கள், சீமைப்புல் என்றார்கள், அதிகம் பால் கறக்கும் என்றார்கள் ஆனால் நமக்கு அது ஒத்துவரவில்லை. அந்தப்பால் குடித்தாலே வயிற்றோட்டம் தான்! இப்போதுவரை அப்படித்தான்.அப்போது நாங்கள்  சிந்தி ரக மாடுகளைத்தான் வாங்குவோம்.  இப்போது சிந்தி மாடுகள் உள்ளனவா என்று தெரியவில்லை. எல்லாம் காலத்தின் கோலம்!


Sunday, 16 February 2025

ஜப்பான்காரன் காலம் (3)


ஜப்பான் காலம் என்றாலே அந்தக் காலத்து மனிதர்களுக்கு நடுக்கும் வரத்தான் செய்யும்.

எனது பெற்றோர்கள் ஏதும் கஷ்டம் அனுபவித்தார்களா என்பது தெரியவில்லை.  நான் கேள்விப்பட்டதெல்லாம் எனது சித்தப்பா சயாம் ரயில்பாதை  போடப்போனவர் திரும்பவில்லை.

மற்றபடி எனது காலம் முற்றிலுமாக வெள்ளைக்காரன் காலம் தான். எங்கள் வீட்டில் புதிய ஜப்பானிய பண நோட்டுகள் இருந்தன. அதனையெல்லாம் "இனி தேவை இல்லை" என்று அவைகளைப் போட்டு எரித்த சம்பவம் ஞாபகத்தில் இருக்கிறது.

எனது குடும்பத்தில் நான் ஒரே பிள்ளை.  நான் பட்டினி இருந்ததில்லை.  அப்போது  அரிசி உணவு,  மரவெள்ளிக்கிழங்கு, சக்கரவள்ளிக்கிழங்கு இவைகள் தான்  முக்கிய உணவுகள்.  அரிசித் தட்டுப்பாடு இருந்ததா என்பது தெரியவில்லை. என் தாயார் அரிசியில் , ஒவ்வொருநாளும் கற்களைப் பொறுக்கிக் கொண்டிருப்பார். அது தெரியும்.

காலையில் எங்கள் பக்கத்து வீட்டுப் பாட்டி வியாபாரத்திற்காகப்   பசியாறப் போடுவார். புட்டு, தேங்காப்பால் அப்பம்,  தோசை -   அதனால் காலைப் பசியாறல் தினசரி உண்டு. அது போக காலைப் பத்து மணிக்குப் பக்கத்து தோட்டத்திலிருந்து  பாய்  ஒருவர் (உத்திரபிரதேசத்துக்காரர்)   வங்காளி ரொட்டி, இஞ்சித்தண்ணி  விற்க வருவார். பள்ளி விடுமுறை நாள்களில்  அவருக்காகக் காத்திருப்பேன். அவர் சம்பள நாட்களில் எங்கள் வீட்டில் பணம் வசூலித்து விடுவார்.  

இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால்  அந்த நேரத்தில் பலருக்குக் கஷ்டம் என்னைப் போன்ற ஒரு சிலர் நோகாமல் வளர்ந்தோம் என்பதற்காகத்தான்.  எல்லாகாலத்திலும் இது உண்டு.  இன்னொன்று தொழில் முயற்சிகள்  அந்தக் காலத்திலேயே இருந்திருக்கின்றன. ஆனால் அவர்களை வளர்த்துவிடத்தான்  ஆளில்லை. 

Saturday, 15 February 2025

கல்வி அதிகாரிகள் (2)

ஆறு மாதத்திற்கு ஒரு முறை கல்வி அமைச்சைச் சேர்ந்த  அதிகாரிகள் வருவர்.  அதில் ஒருவர் வள்ளிபுரம் - யாழ்ப்பாணத் தமிழர். இன்னொருவர் ஹென்ரி - இந்தியத் தமிழர்.   அவர்களை இன்ஸ்பெக்டர்கள் என்பார்கள். வள்ளிபுரம் மிகவும் வன்மமாகவே இருப்பார்.  ஹென்ரி சாந்த சொரூபி. இருவரும் மாறி மாறி வருவர்.  மாணவர்களின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பவர்களோ என்னவோ தெரியவில்லை.  

நான் படித்த அந்தப் பள்ளிக்கூடம் இப்போது இல்லை. தோட்ட அலுவலகத்தை  பள்ளியாக மாற்றிவிட்டார்கள். இப்போது அது சீன மொழிப்பள்ளியாக மாறிவிட்டது.   முன்பு பணிபுரிந்த iஇந்தியத்  தொழிலாளர்கள்  எல்லாம் தோட்டத்தைக் காலிசெய்துவிட்டுப் போய்விட்டார்கள்.   சீனக் குழந்தைகள் வெளியிலிருந்து  வந்து படிக்கின்றனர்.       

               

சீனத் தொழிலாளர்கள் யாரேனும் தோட்டங்களில் வேலை செய்திருக்கிறார்களா?  செய்திருக்கிறார்கள்.  ஆனால் தோட்ட வீடுகளில் வசிப்பதில்லை.  அவர்கள் தோட்டத்திற்கு வெளியே  காட்டுப்புறங்களில்  சொந்தமாக வீடுகளைக் கட்டிக் கொண்டு  தனியாகத்தான் வாழ்வார்கள்.

 அப்போது கம்யூனிஸ்ட் பயங்கரவாதம் நாட்டில்  தீவிரமாக இருந்த நேரம். ஆனால் நாங்கள் வசித்த தோட்டத்தில்  வெளிப்படையாக ஒன்றும் தெரியவில்லை என்றாலும் ஏதோ அரசல்புரசலாக சில செய்திகள் வரும்.  ஆனால் பயப்படும்படியாக ஒன்றும் தெரியவில்லை.

ஒருநாள் பயப்படும்படியான செய்தி வெளியாகிவிட்டது.  தோட்டத்தில் வாட்ச்மேன் ஒருவர் வேலை செய்து வந்தார்.  அவர் பெயர் இரத்தினம். அவரை 'எஸஸி' என்பார்கள். நான் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து பார்த்ததில்  அது  (Home Guard)  அதுவே எச்.ஜி. ஆகி பின்னர் எஸ்ஸி ஆக மருவிவிட்டது.  அவருடைய வேலையே பயங்கரவாதிகள் தோட்டத்திற்குள் ஊடுருவிடக் கூடாது என்பது தான்.  

அவர் வேலை செய்யும் மக்களோடு மக்களாக தோட்டத்தையே வலம் வந்து கொண்டிருப்பார்.  அப்போது ஒரு நாள்  காட்டுப்பகுதியில்  பயங்கரவாதிகள் அவரைப்  போட்டுத்தள்ளி விட்டனர். செய்தி தோட்டத்தில் தீயாய் பரவிவிட்டது. எல்லாரும் அடித்துப்பிடித்துக் கொண்டு அந்த இடத்தை நோக்கி ஓடினோம். அருகே சென்று  பார்க்க பயம். சுட்டுத்தள்ளியவர்கள் அவரின் பாதி உடலை தண்ணிரிலும்  தலைப்பகுதியை ஓடையின் மேற்புறத்திலும் கிடத்திவிட்டுப் போய்விட்டனர்.

கொடூரமான கொலை  தான். அதன் பின்னர் இது போன்ற  சம்பவத்தை நான் பார்த்ததில்லை.  இப்படி எத்தனை தமிழர்கள் நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்தனரோ?

சீனர்களைப்பற்றி பேசும் போது அப்போது அங்கு வாழ்ந்த சீனப் பெண்களைப்பற்றி பேசித்தான் ஆக வேண்டும். அவர்களில் சிலர் நடக்கும் போது  வேகமாக நடப்பதோ அல்லது ஓடவோ முடியாத நிலையில் இருந்தனர். அவர்கள் பாதங்கள் பாதியாக குறுக்கப்பட்டிருந்தன. அதாவது செயற்கையாகப்   பாதத்தை இறுகக்கட்டி  அதனை வளரமுடியாதபடி  செய்திருந்தனர். காரணம் தெரியவில்லை.  பின்னர் நான் தெரிந்து கொண்டது: அதாவது பெண்கள் யாருடனும் ஓடிவிடக் கூடாது என்பதற்காக  பெற்றோர்கள் இப்படி செய்து வைத்திருக்கின்றனராம்! உண்மை என்ன என்பது தெரியவில்லை.  அதே மாதிரி ஒரு சில பெண்களை சிரம்பான் பட்டணத்தில் பார்த்திருக்கிறேன். இப்போது அந்தப் பழக்கம் முற்றிலுமாக  ஒழிக்கப்பட்டு விட்டது.
                                                   

Friday, 14 February 2025

ஓரிடந்தனிலே.........!


 வானொலியில் நான் கேட்ட முதல் சினிமா பாடல் என்றால் அது  தான் "ஓரிடந்தனிலே... நிலையில்லா உலகினிலே.....!" என்கிற வேலைக்காரி  படத்தில் பி.லீலா மற்றும் ஜானகி பாடிய  பாடல். உடுமலை நாராயணகவி வரிகள்.   (படம் 1949-ல் வெளியானது) நான் இந்தப் படத்தைப் பார்த்ததில்லை.

அப்போதெல்லாம் வீடுகளில் வானொலி பெட்டிகள் இல்லாத காலம். அந்த காலகட்டத்தில்  தான் தோட்ட மக்களின் 'நலனுக்காக'  அவர்கள் நாட்டு நடப்புகளைத்  தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக,   எல்லாரும் பயனடைய வேண்டும் என்பதற்காக,   பொதுவான இடத்தில், ஒலிபெருக்கி  வசதியுடன்  வானொலி ஒன்றை  நிர்வாகம் அமைத்துக் கொடுத்தது.

அப்போது நான் கேட்ட முதல் பாடல் தான் மேலே குறிப்பிட்ட பாடல். அப்படியென்றால் நான் பார்த்த முதல்  சினிமா படம் எதுவாக இருக்கும்?  அதையும் சொல்லிவிடுகிறேன்.  போர்ட் டிக்சனில் ஏதோ ஒரு தியேட்டரில் நான் பார்த்த முதல் படம் 'அபூர்வ சகோதரர்கள்'. எம்.கே.ராதா (இரட்டை வேடம்), பி. பானுமதி நடித்திருந்தனர். படம் ஞாபகத்தில் இல்லை.  பானுமதி பாடிய 'லட்டு லட்டு மிட்டாய் வேணுமா?' என்கிற பாடல் மட்டும் ஞாபகத்தில்  உள்ளது. (1949-ல் வெளியான படம்) மீண்டும் அந்தப் படத்தை நான் பார்த்ததும் இல்லை.

இந்தக் காலகட்டத்தில்  எனது பெற்றோர்கள் வசித்த தோட்டம் என்றால் அது சிலியோவ்,  போர்ட்டிக்சன் அருகே உள்ள சென்டாயான் தோட்டம். நான் பிறந்தது சிரம்பான் மருத்துவமனையில் (1941) மற்றபடி தமிழ்க்கல்வி அதே தோட்டம் அதன் பின்னர்  போர்ட்டிக்சன் ஆங்கிலப்பள்ளியில்.

தோட்டப்பள்ளியில்  மூன்றாம் வகுப்புக்கு மேல் இல்லை. நான் ஐந்து வயதில் பள்ளியில் சேர்ந்து ஏழு வயதில்  மூன்றாம் வகுப்பை முடித்து விட்டேன்!  பள்ளியில் ஒரே ஆசிரியர் மட்டும் தான். அவர் பெயர் அனுகிரகம்.  பள்ளியில் மாணவர்கள் சுமார் பத்து பேர் இருப்பார்கள்.  நாங்கள் தான் முதலாம் ஆண்டு மாணவர்கள்.    மூன்றாம் ஆண்டை முடித்த முதல் மாணவர்கள்! எனக்குத் தெரிந்த முகங்களாக  யாருமில்லை.  என் வீட்டிலருகிலேயே  பள்ளிக்கூடம்.  பெருசா நடக்க வேண்டிய அவசியமில்லை.

அப்போதைய பாடப்புத்தகங்கள் எல்லாம் தமிழ் நாட்டிலிருந்து வருபவை. அதில் வரும் பாடல் ஒன்றின் ஒரு சில வரிகள் "கீச்சு கீச்சு தம்பளம், கியாங் கியாங் தம்பளம்...!" இப்படித்தான் அந்தப் பாடல் போகும். எனக்கு மனனம் என்பது வராது. இப்போதும் கூட ஒரு சினிமா பாடல் கூட எனக்கு முழுமையாகத் தெரியாது!    வாசிப்பது எனது பலம் . சொல்வதெழுதல் எனது பலம்.  கணக்கு எனது பலவீனம்!  இந்த மூன்று பாடங்கள் தான் அப்போது சொல்லிக் கொடுத்தார்கள் என நினைக்கிறேன்.

Wednesday, 12 February 2025

இனி புதியதொரு பாதை!

\இனி புதியதொரு பாதை ஆரம்பம்.   

 இதுநாள் வரை  அரசியல் சார்பு கலந்த  கட்டுரைகளை எழுதி வந்தேன். ஏதோ எனக்குத் தெரிந்தவரை. மற்றபடி பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை.

இனி எனது பாதை மாறுகிறது. எனது பழைய நினைவுகளை எழுதலாம் என்றிருக்கிறேன்.தோட்டப்புற  வாழ்க்கை, பள்ளி வாழ்க்கை, வேறு ஏதாவது நினைவுகள்  - அனைத்தையும், வரிசையாக அல்ல  என்ன ஞாபகத்திற்கு வருகிறதோ அவைகளை எல்லாம் பதிவு செய்வது எனது கடமை என நினைக்கிறேன்.

வழக்கம் போல  உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி!

வணக்கம்.

கோடிசுவரன்

Monday, 10 February 2025

தைப்பூச திருவிழா வாழ்த்துகள்!

 


         நாளை (11-2-2025)  உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் இந்து பெருமக்கள்                                   கொண்டாடும்  தைப்பூச திருநாள் வாழ்த்துகள்!

Sunday, 9 February 2025

பெரிது படுத்த வேண்டாம்!

சிறிய பிரச்சனைகளைப் பெரிது படுத்த வேண்டாம். ஆங்காங்கே சில பல பிரச்சனைகள் எழத்தான் செய்யும்.

சுமார் இருபது இலட்சம் மக்கள்  கூடுகின்ற ஒர் இடத்தில்  பல குளறுபடிகள் இருக்கத்தான் செய்யும். நமது இனமோ இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக  திருந்தும் இடத்தில் இருக்கின்றனர். 

இதில் ஒரு சிலர் குடித்துவிட்டு ஆட்டம் போடுவது தான்  ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பக்தியைப் பரப்பும் இடத்தில் இப்படித்தானா குடியைப் பரப்புவது?  ஒரு சிலருக்கு அது புரிவதில்லை?  எங்கே வேண்டுமானாலும் குடிப்போம்  என்று  குடித்துவிட்டு வம்பு இழுப்பவனை யார் என்ன செய்வது?   ஒரு வேளை அவனது குடும்பம் அப்படித்தான் இருக்க வேண்டும். எப்படியோ நாளடைவில் அவர்கள் திருந்துவார்கள் என நம்புவோம்.

ஒரு வகையில் பத்துமலை தேவஸ்தானம்  பாரட்டப்பட  வேண்டும்.  தேவையற்ற காவடிகளை எல்லாம் ஒழித்துக்கட்டிவிட்டனர்.  குடித்துவிட்டு ஆடுபவர்களையும்  கட்டுப்படுத்தி விட்டனர்.  ஆனால் அதனையும் மீறித்தான் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிருக்கின்றன. 

பெருங்கூட்டம் கூடும் இடங்களில் திருட்டுச் சம்பவங்கள்  நடக்கத்தான் செய்யும்.  முன்பெல்லாம் திருடர்கள் வேற்று இனத்தவராக இருந்தார்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது.  நமது பெண்களே திருடர்கள்!  அது தான் கொடுமையிலும் கொடுமை.  சரி, யார் திருடினால் என்ன? திருட்டு திருட்டுத்தான்.  வேறு வழியில்லை.

அதனால் தான் பொது இடங்களில்  நகைகளைப் போடாதீர்கள் என்று சொல்லுகிறார்கள். என்ன செய்ய?  போட்டால் தானே மற்றவர்கள் பார்ப்பார்கள் என்று இவர்கள் சொல்லுகிறார்கள்! திருடு போனால் அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று புரிந்து கொண்டால் சரி! நிறைய மக்கள் கூடுகின்ற இடத்தில்  ஏதாவது அசம்பாவிதங்கள்  நடக்கத்தான் செய்யும். மக்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்த ஆண்டு பத்துமலை தைப்பூச திருவிழா, குறைந்த குறைபாடுகளோடு,  சிறப்பாகவும் வெற்றிகரமாகவும்  நடந்து முடிய நாமும் இறைவனை இறைஞ்சுவோம்.

Saturday, 8 February 2025

பிரபா சொல்வது சரிதான்!

 

13-வது மலேசியத் திட்டம் என்பது அதாவது இந்தியர் சம்பந்தப்பட்ட  திட்டங்கள் வெறும்  வாயளவில் தான் இருக்கின்றனவா அல்லது உண்மையில் செயல்படுகின்றனவா என்பது இந்தியர்களுக்குத் தெரியத்தான் வேண்டும்.

அது சரியாகத்தான் செயல்படுகின்றனவா என்பதை தெரிந்துகொள்ள மித்ரா கண்காணிக்க விரும்புவது சரியான முடிவு தான்.  என்ன தான் நடக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.  பிரதமரோ  திடீரென்று ஒரு நாள் நாங்கள் அதைச் செய்தோம் இதைச் செய்தோம்  என்று தான் சொல்லுகிறாரே தவிர,  நமக்கு ஒன்றும் தெரியவில்லை!

இன்றைய நிலையில் டத்தோ ரமணன் மட்டும் தான் தனது அமைச்சு என்ன செய்கிறது என்பதை அடிக்கடி மக்களுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.  அது எந்த அளவு உண்மை என்று நமக்குத் தெரியாவிட்டாலும்  ஏதோ நடக்கிறது என்கிற உணர்வையாவது  நமக்குத் தருகிறது என்பது மட்டும்  உண்மை.

இப்போது மித்ராவே நாங்கள் அதனைக் கண்காணிக்கிறோம். எங்களுக்கு அந்த அனுமதியைக் கொடுங்கள் என்று கேட்பது நமக்கும் சரி என்று தான் படுகிறது.  இந்தியர்களுக்கான திட்டங்கள் நிறையவே உண்டு.  ஆனால் அது எந்த அளவில் நிறைவேற்றப்படுகிறது என்பது தான் யாருக்கும் தெரியவில்லை.

இந்த அனுமதியைக் கொடுக்க வேண்டியது  பொருளாதார அமைச்சு  அவர்களுக்கு அதில் எந்த பிரச்னையும் எழ வாய்ப்பில்லை என்று தான்  நமக்குத் தோன்றுகிறது. இந்தியர்களின் மீது அக்கறை உள்ள அரசாங்கம் தான் ஒற்றுமை அரசாங்கம்.   ஏமாற்று வேலை ஒன்றுமில்லை என்றால்  அவர்கள்  தயங்குவதற்கு ஒன்றுமில்லை.

மித்ராவின் கண்காணிப்பில்  இருக்க வேண்டும்  என்பதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம்.  ஆனால் மித்ராவின் தலைவர் பிரபாகரனுக்கு  நமது ஆலோசனை என்னவெனில்:   ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒற்றுமை அரசாங்கம்  இந்தியர்களுக்குச் செய்த சாதனைகளை வெளியிட வேண்டும். ஏதாவது  ஒரு காரியம்  செய்து தானே இருப்பார்கள்?  அப்படி வெற்றிகரமாகச் செய்த சாதனைகளைப் பட்டியிலிட்டுக் காண்பிக்க வேண்டும்., அப்படி ஒன்றுமே இல்லையென்றால் "ஒன்றுமில்லை" என்றாவது  இந்திய மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

கண்காணிப்புக்குழு என்று ஒன்று இல்லாத நிலையில்  மித்ரா அதனை ஏற்றுக்கொள்வதை  நாம் வரவேற்கிறோம். வாழ்த்துகிறோம். யாராவது முன்வர வேண்டும் அல்லவா?  மித்ரா முன் வருகிறது. வாழ்த்துவோம்!

Friday, 7 February 2025

அப்பாடா! பிரதமர் வந்தார்!

 

பிரதமர் வருவாரா? அப்படியெல்லாம் அவர் வந்துவிடமாட்டார் என்பது பலருக்குத் தெரியும்.  ஆனாலும் என்ன செய்ய? பிரதமர் ஆயிற்றே, அழைப்பது  தேவஸ்தானத்தின்  கடமை.

அவரும் பிரதமராயிற்றே! என்ன செய்ய? போகத்தான் வேண்டும்.  எம்.ஜி.ஆர். வேடம்  போட்டாயிற்று! போகத்தான் வேண்டும்.

அப்படியும் வேண்டாம்! இப்படியும் வேண்டாம்!  ஓர் இரண்டும் கெட்டான் நாளைத் தேர்ந்தெடுத்து  போய் வந்துவிடுவோம் என்கிற நிலைமையில் தான்  பிரதமர் வந்திருக்கிறார்.

அவரைக் குற்றம் சொல்லியும் புண்ணியமில்லை. இதற்கு முன்பு முன்னாள் பிரதமர்  நஜிப்  பத்துமலைக்குப் போய் வந்தபிறகு இன்று அவர் என்ன நிலைமையில் இருக்கிறார் என்பதை  பிரதமருக்கு நெருங்கியவர்கள் சொல்லத்தானே செய்வார்கள்?  வாழ்நாளெல்லாம்  கொள்ளையடிப்பவன் கூட  மூடநம்பிக்கைகளை நம்பத்தானே செய்கிறான்!  நாம் சாதாரணமாகச் சொல்வோம்:  மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்பதாக.  ஆனால் இன்று  மடியில் கனமில்லாத அரசியல்வாதி யார்?

இப்போது பிரதமர் அன்வார்  வருங்கால மலாய்த் தலைவர்களுக்குப் பாதை போட்டுக் கொடுத்திருக்கிறார்.  திருவிழா கொண்டாட்டத்திற்கு முன்பாகவே  சும்மா தலையைக் காட்டிவிட்டுப்  போய்விடுங்கள் என்பது தான் இதன் மூலம் அவர் கொடுக்கும் செய்தி.  ஒரு வேளை அவருடைய மனசாட்சியின்படி அது சரியாகக் கூட இருக்கலாம்.

இந்த நேரத்தில் நாம் சொல்ல வருவதெல்லாம்  இனி வருகின்ற திருவிழா காலங்களில்  முஸ்லிம் தலைவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்காதீர்கள். அதனை அவர்கள் விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. இந்து சமயத்தைச் சார்ந்த தலைவர்களுக்கு மட்டும் அழைப்பிதழ் கொடுங்கள். அதனை அவர்கள் மறுக்க மாட்டார்கள்.  மற்ற மதத்தினரை ஏன் வற்புறத்த வேண்டும்?

இனி இதுபோன்ற விஷயங்களில் தெளிவான முடிவு எடுங்கள். தேர்தல் காலம்வரும் இவர்களுக்கு ஒவ்வொரு கோவிலிலும்  என்ன செய்ய வேண்டுமோ  அப்போது செய்யுங்கள்! அப்போது இவர்கள் வாய் திறக்கமாட்டார்கள். நமக்கும் காரியம் ஆகும்!

Thursday, 6 February 2025

இரட்டை வேடம் போடுகிறாரா PMX?

ஒரு சில விஷயங்களில் நமது பிரதமர் இரட்டை வேடம் போடுகிறாரோ  என்று  நாம் ஐயுற  வேண்டியுள்ளது.

சில நாட்களாகவே பிரச்சனை ஒன்று மலேசியரிடையே  பேசுபொருளாக விவாதமாக நடந்து கொண்டிருக்கிறது.  ஜாக்கிம் ஒரு பக்கம் பிரதமர் இலாக்காவைச் சேர்ந்த இஸ்லாமியத்துறை அமைச்சர் ஒரு பக்கம்.  இவர்கள் சேர்ந்து முஸ்லிம்களுக்கு  முஸ்லிம் அல்லாதவர்களின்  நிகழ்வுகளில்  கலந்து கொள்வது பற்றியான  வழிகாட்டி ஒன்றை தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாயின.

அதுபற்றியான எதிரொலிகள் நாடெங்கும் ஒலித்தன.   நாட்டில் இப்போது அப்படி என்ன பிரச்சனையை முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்றனர்? பார்க்கப் போனால் முஸ்லிம் அல்லாதவர்கள்  ஜாக்கிம் போன்ற அமைப்புகளினால் பல பிரச்சனைகளை  எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பதை பலர் அறிவர்.

நம்மிடம் உள்ள கேள்வி எல்லாம் இஸ்லாமியத்துறை அமைச்சர்,  பிரதமர் அலுவலகத்திலேயே  குடிகொண்டிருப்பவர்.  பிரதமருக்குத் தெரியாமல் அவர் சுயமாக  எந்தவொரு முடிவும் எடுக்க முடியாது என்பது நமக்குத் தெரியும்.  காரணம்  மக்களைப் பாதிக்கக் கூடிய எந்த ஒரு முடிவையும் இஸ்லாமியத்துறை அமைச்சரால்  தனிப்பட்ட முறையில்  எடுக்க வழியில்லை.  பிரதமர் தான்  இது போன்ற பிரச்சனைகளைக் கையாள வேண்டும்.

ஒரு வேளை சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு  ஏதேனும்  வரையறை வரலாம். காரணம் பிரதமரே தைப்பூச நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டார் என்பது தெரிகிறது. அவரும் சரி அவருடைய அமைச்சர்களும் சரி தைப்பூச நிகழ்வுக்கு முன்னரே  கலந்து கொள்வதை  வழக்கத்திற்குக் கொண்டுவருவர் என்றே தோன்றுகிறது.

என்ன சொல்ல வருகிறார்கள் என்றால்  சமய நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடாது  மற்ற நாட்களில் கலந்து கொள்ளலாம்  என்பதற்கான முன்னோட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதென்ன முஸ்லிம்களுக்குத் தெரியாதா? இவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

என்ன சொல்ல?  முஸ்லிம்களை மேயுங்கள்.  மற்றவர்களின் மீது கை வைக்காதீர்கள்.

Wednesday, 5 February 2025

இவர்கள் என்ன முட்டாள்களா?

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் ஜாக்கிம்  அமைப்பை ஜோகூர் மாநிலத்திலிருந்து  விரட்டியடித்தவர்  அன்றைய  மாநில சுல்தான் அவர்கள்.  அவர் தான் இன்றைய மாமன்னர்.

நாட்டில மக்கள்  ஒற்றுமையாக வாழ வேண்டும் என்கிற  கொஞ்சம் கூட  அக்கறை இல்லாதவர்கள் தான்  ஜாக்கிம்.  எல்லா நாடுகளும் முன்னேற வேண்டும்  என்கிற துடிப்போடு இயங்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில்  "ஏன் முன்னேற வேண்டும்?"  என்று கேள்விக் கேட்டுக் கொண்டிருப்பது தான் ஜாக்கிம். 

பல இனங்கள், பல சமய்த்தைச் சார்ந்த மக்கள் வாழும் நாட்டில், இவர்கள் இப்படிப் போக வேண்டும், அவர்கள் அப்படிப் போக வேண்டும், இவர்கள் இதில் கலந்து கொள்ளக் கூடாது அவர்கள் அதில் கலந்து கொள்ளக் கூடாது,  என்று முட்டாள்தனமாக, தான்தோன்றித்தனமாக  மக்களைச் சீரழிக்கும்  வேலையில் இறங்கியிருக்கிறது ஜாக்கிம்!

இவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்?  மதத்தின்  மேல் உள்ள பற்றா? அப்படியெல்லாம் நாம் நினைக்கவில்லை. இவர்களுக்கு அரசாங்கம் சம்பளம் கொடுக்கிறது. அலுவலகங்களைக்  கொடுத்திருக்கிறது. அது போதும். அவர்கள் வயிறு நிறைகிறது. குளிரூட்டி  அலுவலகங்கலிலிருந்து கொண்டு  விதவிதமான, கலர் கலரான அறிக்கைகளையும்,  கட்டளைகளையும்  மக்களுக்கு   வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்!

நடப்பில் ஒரு பழமொழி உண்டு. உன் நண்பன் யாரென்று சொல் உன்னை யாரென்று சொல்லுகிறேன்.  மலேசியாவின் நண்பன் யார்?  எந்த நாடு தான் இவர்களுக்கு நண்பன்?   ஆப்கானிஸ்தான் ...?  அவர்கள் தான் இங்கு வருகிறார்கள் போகிறார்கள்.  பாலஸ்தீனத்தை  இவர்களாக வரச்சொல்லுகிறார்கள் போகச்சொல்லுகிறார்கள்.  எந்த ஒரு நாடும் இவர்களுடன் அணுக்க்மாக இல்லை என்பது தான் உண்மை.

இவர்கள் தனிக்காட்டு ராஜாவாக, சட்டதிட்டங்களை உருவாக்கிக் கொண்டு, வாழ  விரும்புவதாகத் தோன்றுகிறது.  இனி நாம் சாவதற்கு முன்பே  இவர்களிடம் அனுமதி கேட்டுத்தான்  சாக வேண்டும் போல் தோன்றுகிறது!

Tuesday, 4 February 2025

வா தமிழா உணவகம்!

                                                     வா தமிழா உணவகம், ஈப்போ
பொதுவாகவே உணவகம் என்றாலே ஆள் பற்றாக்குறை என்பதகத்தான் நமக்குச்  செய்திகள் வருகின்றன.

அதே சமயத்தில்  புதிய புதிய உணவகங்களும்  பல இடங்களில்  திறக்கப்பட்டுக் கொண்டுதான்  இருக்கின்றன. புதிய உணவகங்கள் பெரும்பாலும்  குடும்ப உறுப்பினர்களை வைத்தே  ஆரம்பிக்கின்றனர் என்பது உண்மை தான்.  அதனால் எந்தவொரு  ஆள்பாற்றாக்குறை பிரச்சனைகள்  எழுவதில்லை.  நாட்டில் பல கிளைகளைக் கொண்ட  நிறுவனங்களின் நிலை வேறு. அவைகள் பல நாடுகளில் தங்களது கிளைகளைக் கொண்டிருக்கின்றனர். அதனால் அவர்களுக்குச் சில சலுகைகள் கிடைக்கலாம். 

"வா தமிழா உணவகம்" உண்மையில்  ஆரம்பித்திருக்கும்  நண்பர் மிகவும் துணிச்சலான ஒரு மனிதர் என்பதில் ஐயமில்லை. இப்போதெல்லாம் தங்களது விளம்பரப் பலகையில்  தமிழ் மொழியையே புறக்கணிப்புச் செய்கின்றவர்களே அதிகம்.   ஆனால் இவர் துணிச்சலாக தனது உணவகத்திற்கே "வா தமிழா" என்று பெயர் வைத்திருக்கிறாரே அதற்காக அவரைப்  பாராட்ட வேண்டும். 

இன்று நாட்டில் இயங்கும் பல உணவகங்கள் தமிழர் அல்லாதவர்கள்  தான் நடத்துகின்றனர்.  வெளியே தெரிவதில்லையே தவிர  உண்மை அது  தான். ஆனால்  நாம் அவர்களைக் குறை சொல்ல வரவில்லை.  எப்படியிருந்தாலும்  அவர்கள் பரிமாறும் உணவுகள்  தமிழர் பாரம்பரிய  உணவுகள்  தானே.  அதனால் பாராட்டுவோம். 

இப்போது  ஈப்போவில் இயங்கும்  வா தமிழா உணவகத்திற்கு  நமது தமிழ் மக்களுக்கு நாம் சொல்ல வரும் செய்தி என்ன? அந்தப் பெயருக்காகவே அவர்களுக்கு உங்களின் ஆதரவைத் தாருங்கள்  என்பது தான்.  இப்போது தான் ஆரம்பித்திருக்கின்றனர். அவர்களுக்கு உங்களின் வற்றாத ஆதரவைத் தாருங்கள் என்பது தான் நமது செய்தி.   ஆரம்பத்தில் ஒருசில குறைபாடுகள் இருக்கலாம். அதற்காக  அவர்களைப் புறக்கணிக்க வேண்டாம். போகப் போக,  குறைகள் இருந்தால்,  அவர்களே அதனைச் சரி செய்து விடுவார்கள்.

எப்படி இருந்தாலும் நமது தமிழ் மக்களின்  ஆதரவு  அபரிதமாக இருக்க வேண்டும் என்பதே நமது அவா. அவர்களின் முன்னேற்றத்திற்கு நாம் ஆதரவாக இருப்போம்.  தமிழர்கள் நன்றாக இருந்தால் தான் அவர்களால் தமிழர்களுக்கு நல்லது நடக்கும். வாழ்த்துவோம்!

Monday, 3 February 2025

நுழைவு தேர்வில் தளர்ச்சி!


 நாட்டில் தாதியர் பற்றாக்குறை  மிக மோசாமான சூழலை அடைந்திருப்பதால்  இரண்டு ஆண்டுகளுக்கு (2025-2026+  -ம் ஆண்டுகளில் கல்வியில் சில தளர்வுகளை அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

இத்தனை ஆண்டுகள் எஸ்.பி.எம். தேர்வில் ஐந்து கிரடிட் பெற்றவர்களே தகுதி பெற்றவர்களாக  அறியப்பட்டனர்.  இந்த நடப்பு இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் மூன்று பாடங்களில் கிரடிட் பெற்றவர்கள்  தகுதி பெற்றவர்களாக ஏற்கப்படும் என சுகாதார அமைச்சர்   அறிவித்திருக்கிறார். கிரடிட் பெற வேண்டிய அந்த மூன்று பாடங்கள்: மலாய், கணிதம், அறிவியல். சாதாரண தேர்ச்சி பெற வேண்டியவை: ஆங்கிலம் அத்தோடு இன்னொரு பாடம்.

இந்தத் தளர்வு என்பது  இரண்டு  ஆண்டுகள் மட்டுமே என்பதைக் கவனிக்க. எத்தனை இந்தியப்  பயிற்சி  தாதியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்  என்பது தெரியவில்லை.  இங்கும் கோட்டா, மெரிட் அனைத்தும் இருக்கத்தான் செய்யும்.  ஏதோ ஒன்று இரண்டு நமக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று நம்பலாம்.

ஆனாலும் நாம் மனம் தளர்ந்து விடக்கூடாது  என்பதை மட்டும்  மனதில் வையுங்கள்.  கிடைக்கின்ற வாய்ப்பை  பயன்படுத்திக் கொள்வது  நமது கடமை.  நமது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் போல் நாம் இருக்க முடியாது.  அவர்களை நாம் உயரத் தூக்கிவிட்டோம். இனி நம்மை நாமே தூக்கிக்கொள்வது நமது கடமை. 

ஒரு சில மாணவிகளுக்கு இந்தத் தாதியர் டிப்ளோமா பயிற்சி  நல்லதொரு வாய்ப்பாக அமையலாம்.  அந்தத் தகுதிகள் உங்களுக்கு  இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில்  இந்த வாய்ப்பை விடாதீர்கள்.  இந்தத் தளர்வு என்பது இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே.   உங்களின் தகுதி இதற்கு ஏற்றமாதிரி இரூக்குமாயின்  பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வாய்ப்புகள் வரும் போது நாம் பயன்படுத்திக் கொள்வதில்லை. பிறகு குறை சொல்லுகிறோம்.  யாரும் நமக்காக பேசப்போவதில்லை. நமக்கு நாமே தான்  உதவிக்கொள்ள வேண்டும்.

யார் கண்டார்? இதுவும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையலாம்!

Sunday, 2 February 2025

சம்பளம் உயருகிறது!

இந்த மாதத்திலிருந்து தனியார் துறைகளில் சம்பளம் கூடுகிறது  என்பது தற்போதைக்கு நல்ல செய்தியாகத்தான் தோன்றுகிறது. 

சிக்கனமாக வாழத் தெரிந்தவர்கள் எல்லாச் சூழலிலும் தங்களைத் தயார் படுத்திக் கொள்வார்கள். மிச்சம் பிடிக்கவும் செய்வார்கள்.  ஆனால்  வியாபாரிகள் சும்மா இருப்பார்களா?  அவர்கள் ஒரு பக்கம் விலைகளைக் கூட்டத்தான் செய்வார்கள். அது அவர்களின் இயல்பு. 

வியாபாரிகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என்பது தெரியவில்லை. காரணம் சம்பளம் கூடும்போதெல்லாம்  விலைகளும் ஏற்றங்காணும். இது ஒன்றும் புதிதல்ல.  பின் நோக்கிப் பார்த்தால் அது புரியும்.

அநேகமாக உணவுகளின்  விலை ஏற்றம்  எந்தக்காலத்திலும்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலுமா என்பது தெரியவில்லை.  அதுவும் குறிப்பாக குழந்தைகளின் பால்மாவுகளின் விலை ஏற்றத்தைத் தடுப்பது, கடந்தகால அனுபவத்தின்படி,  மிகவும் கடினம் தான். குழந்தைகளின் பால்மாவு ஏற்றத்தையும் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்.

வியாபாரிகள், விலை ஏற வேண்டும் என்பதற்காக  ஒரு சில பொருள்களைப்  பதுக்கும் வேலைகளில் ஈடுபடுவார்கள். இது எப்போதும் நடப்பது தான்.  அங்கும் இலஞ்சம் முக்கியமான காரணியாக விளங்குவதால்   முன்பு இப்படி நடந்தது.  ஆனால்  அரசாங்கம் இப்போது கொஞ்சம்  எச்சரிக்கையாய் இருப்பதால்  தவிர்க்க முடியும் என  நம்புகிறோம்.

எந்தச் சூழலிலும்  பணம் என்று வரும் போது அலட்சியமாக இருந்து விடாதீர்கள். சேமிப்பு, காப்புறுதி இவைகள் எல்லாம் தேவையே.   அலட்சியமாக இருந்தால் பணமும்   உங்களை உதாசீனம் செய்துவிடும்

சம்பள உயர்வை வரவேற்கிறோம்!

Saturday, 1 February 2025

பாராட்டுகிறோம்!


 பிரதமர் அன்வார் அவர்கள் பல நாடுகளுக்குச் சென்று  அங்குள்ள முதலீட்டார்களைச் சந்தித்து அவர்களை ஈர்த்து முதலீடுகளை நாட்டுக்குக்  கொண்டுவருவது  பாராட்டுக்குரியது என்பதில் ஐயமில்லை.  ஒப்பந்தம் போட்டுவிட்டால் அனைத்தும் வந்துவிடும்  என்று பொருளல்ல. ஒரு சில வரலாம் ஒரு சில வராமல் போகலாம். வந்தால் நல்லது வராவிட்டால் கைநழுவி போய்விட்டது! அவ்வளவுதான்!

ஆனால் இதனாலெல்லாம்  சராசரி மலேசியர்களுக்கு என்ன இலாபம்? இதுபற்றியெல்லாம் அவர்களுக்கு  எநதக் கவலையுமில்லை. மக்களைப் பொறுத்தவரை அன்றாடப் பிரச்சனை தான் அவர்கள் முன் இருப்பது. முதலீடுகள் வரும்வரை காத்திருந்தால்  அவனும் அவனது குடும்பமும் பட்டினியோடு  சாக வேண்டியதுதான். அவனுடைய தேவையெல்லாம் அவனுடைய அனுதின உணவு அவன் மேஜைக்கு வரவேண்டும்.  அப்போது தான்  அவன் உயிரோடு வாழ முடியும்.

இன்றைய விலைவாசி ஏற்றம்  அவன் கழுத்தை நெரிக்கிறது. பொருள்களின் விலை குறைந்தபாடில்லை.  புதிய முதலீடுகள் வந்தால் என்ன வராவிட்டால் என்ன?  அது எப்போதோ வரும். இன்றைய பிரச்சனையை எப்படி தீர்ப்பது? 

இதோ இந்த மாதத்திலிருந்து சம்பளம் கூடும் என்கிறார்கள்.  அதற்குச் சமமாக  பொருள்களின் விலையும் ஏறிவிடும். அதற்காகவே வியாபாரிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்! என்னத்தைக் கூட்டி என்னத்தைச் செய்ய! ஒரு பக்கம் ஏற்றினால் இன்னொரு பக்கமும் ஏறிவிடுகிறது!

இந்தச் சூழலில் பிரதமரைப் பாராட்டுகிறோம். அவருடைய கடமையை அவர் செய்கிறார். அவரைக் குற்றம் சொல்ல ஒன்றுமில்லை.  அரசாங்கப் பணியாளர்களும் தங்களது கடமையைச் செய்ய வேண்டும். அதற்கும் பிரதமர் தான் பொறுப்பு.

பிரதமரைப் பாராட்டுகிறோம்!