Monday 23 May 2016

உலகசாதனைப் புரியும் தமிழ் மாணவர்கள்!


தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகளவில் சாதனைகள் புரிகின்றனர்! நம் அனவைருக்கும் மகிழ்ச்சியான செய்தி தான்.

ஆனால் இந்தச் சாதனைகளே நமக்கு எதிராகத் திரும்புகிறதோ என்று சந்தேகம் எழுவது இயல்பு தான்! சந்தேகம் என்பதைவிட பொறாமையை ஏற்படுத்துகிறதோ என்று நினைக்க வேண்டியுள்ளது!

தேசியப் பள்ளிகளுக்குக் கோடிகணக்கில் செலவு பண்ணியும் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.ஆனால் எப்போதும் புறக்கணிக்கபடுகின்ற தமிழ்ப்பள்ளீகள் எப்படி சாதனைகள் புரிகின்றன?

சமீபத்தில் அறிவியல், தொழில்நுட்ப  துணையமைச்சர் டத்தோ டாக்டர் அபு பாக்கர் அவர்கள் இந்தத் தமிழ்ப்பள்ளி மாணவர்களை அவர்களின் அறிவியல் படைப்புக்களுக்காகப் பாராட்டினார்! அதனைக்கூட அவர் கிராமப்புற பள்ளிகள் என்று தான் சொன்னார்.தமிழ்ப்பள்ளி என்று சொல்ல வாய் வரவில்லை!

இந்தச் சாதனைகள் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதித்தவை.

1) 2014-ம் ஆண்டு கூலிம் தமிழ்ப்பள்ளி, லண்டனில் நடைபெற்ற அனைத்துலக பிரிட்டிஷ் அறிவியல், புத்தாக்கப் போட்டியில் உயரிய இரண்டு தங்க விருதுகளைப்  பெற்றன.
2) 2015-ம் ஆண்டு பினாங்கு ராமகிருஷ்னா தமிழ்ப்பள்ளி ஹாங்காங்கில் நடைபெற்ற அனைத்துலக மாணவர் புத்தாக்கக் கண்டுபிடிப்பு போட்டியில் ஆறு விருதுகளுடன் ஒரு தங்கப்பதக்கத்தையும் வென்றது.

உலக அளவில் உயரிய விருதுகள் தான். ஆனால் நமது நாட்டில் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை! ஏன், கல்வி அமைச்சு கூட அந்த மாணவர்களை ஏறெடுத்துப் பார்க்கவில்லை! ஒரு வேளை இதனை விட - தங்கத்தைவிட - வேறு எதனையும் எதிர்பார்த்தார்களோ தெரியவில்லை!

இந்தச் சாதனையைத் தேசியப் பள்ளியில் பயிலும்  மாணவர்கள் சாதித்திருந்தால் அதற்கு அடுத்த ஆண்டே பள்ளிப்பாடப் புத்தகங்களின் அந்தச் சாதனைகள் பாடமாக வெளி வந்திருக்கும்! யார் கண்டார் - டத்தோ பட்டங்கள் - கூட கிடைத்திருக்கலாம்!

ஆனால் இந்தச் சாதனைகளுக்குப் பின்னர் தான் தமிழ்ப்பள்ளிகள் பல சோதனைகளைச் சந்திக்கின்றன. தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை என்று சொல்லுபடுகின்றது. பயிற்சிப் பெற்ற ஆசிரியர்கள் இருந்தும் அவர்களுக்கு வேலை கொடுக்காமல் இழுத்தடிக்கப்படுகின்றது. தமிழ்ப்பள்ளிகளுக்காகப் பயிற்சி பெற்ற அவர்களுக்கு வேலை இல்லை! குறைவான ஆசிரியர்களை வைத்துக் கொண்டு ஆசிரியர்கள் பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டி உள்ளது.

தாய் மொழி பள்ளிகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று சொல்லிக்கொண்டே எல்லா ஆபத்துக்களையும் தமிழ்ப்பள்ளிகள் சந்தித்து வருகின்றன. சீனமொழி பள்ளிகள் மீது கைவைக்க முடியாத நிலையில் தமிழ்ப்பள்ளிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நசுக்கப்படுகின்றன.

இருப்பினும் தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து இருக்கும். தமிழும் தொடர்ந்து இருக்கும். நமது மாணவர்களும் தொடர்ந்து சாதனைகள் புரிவார்கள். பொறாமைப் படுபவர்கள் பொறாமையாலேயே அழிவார்கள்!

நமது மாணவர்கள் சாதனைகள் புரியட்டும்! உலகம் அவர்களை வாழ்த்தட்டும்!

வாழ்க! வளர்க!

No comments:

Post a Comment