Tuesday 24 May 2016

உணவு குப்பை அல்ல!


சில செய்திகளை நாம் படிக்கும் போது நமது மனம் கொதிக்கிறது. இந்தப் பாவி ஜென்மங்களை ஏன் இறைவன் படைத்தனோ என்று கேட்கத் தோன்றுகிறது.

உணவுகளை வீணடிப்பதில் நம் நாட்டைப் போல வேறு ஏதேனும் நாடுகள் உண்டா என்று எனக்குத் தெரியவில்லை.அவ்வளவு வீணடிப்புக்கள்! அவ்வளவு அலட்சியங்கள்! அவ்வளவு எகத்தாளங்கள்! உணவு என்றால் ஏதோ குப்பை என நினைக்கும் மனோபாவம்!

சில நாட்களுக்கு முன்னர் கூட ஒரு செய்தி வெளியாயிற்று. ஒரு இந்தியத் தாய் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தனது குழைந்தைகளுக்கு வெறும் மேகி மீ யைத் (Maggie Noodles) தினசரி சாப்பாடாகக் கொடுப்பதாக அந்தச் செய்தி கூறிற்று. இன்னும் எத்தனையோ குடும்பங்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவிக்கின்றன.

ஆனால் நாம் ஒவ்வொரு நாளும் 15,000 டன் உணவுகளை வீணடிக்கிறோம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதில் என்ன மிகவும் வருந்தத்தக்க ஒரு செய்தி என்றால் இந்த உணவுகளில் 3,000 டன் உணவுகள் சாப்பிடக் தகுதியான உணவுகளாம்;  சாப்பிடத்தகுந்த உணவுகளாம்!

நாட்டில் விளைகின்ற 28.4 விழுக்காடு அரிசி அத்தனையும் குப்பைகளுக்குப் போகிறதாம்! அப்படி ஏன் நடக்கிறது என்று புரிந்து கொள்ள யாரும் எந்த முயற்சியும் செய்யவில்லை! ஒரு வேளை தரமற்ற அரிசியா? புரியவில்லை! ஒரு பக்கம் உள் நாட்டு அரிசியை ஒரங்கட்டிவிட்டு வெளி நாட்டு அரிசியை வாங்க ஊக்குவிக்கப்படுகிறதா? கமிஷன் வாங்குபவர்களுக்குத் தான் வெளிச்சம்!

பழங்களும் காய்கறிகளும் 20 பதிலிருந்து 50 விழுக்காடு வரை குப்பைகளுக்குப் போகிறதாம்!

இதோ! ரம்லான் மாதம் தொடங்குகிறது. வந்து விட்டது பெரும் ஆபத்து! நமது குப்பைத்தொட்டிகளில் கணக்கற்ற வகைகளில் எதுவும் சாப்பிடாமல் அப்படியே தூக்கியெறியப்பட்ட  உணவு பொட்டலங்களைப் பார்க்கலாம்! நமது நாட்டைப் பொருத்தவரை நோன்பு மாதம் தான் உணவுப் பொருள்களை வீணடிக்கும் மாதம்! நோன்பைக் கடைபிடிப்பதும் அதன் பின்னர் உணவுப் பொருள்களை கணக்கில்லாமல் வாங்குவதும் அதன் பின்னர் சாப்பிட முடியாமல் குப்பையில் தூக்கி எறிவதும் ...அடா ...அடா..! காணக் கண்கள் கோடிவேண்டும்!

உணவு உண்பதற்குத்தான்! குப்பைகளுக்கு அல்ல! குப்பைத் தொட்டிகளில் வீசுவதற்கு  முன் ஆயிரம் முறை யோசியுங்கள்!

உணவு குப்பைகள் அல்ல!


No comments:

Post a Comment