Tuesday, 17 May 2016
தெரியலையா...? தெரிஞ்சக்கோ...!
இரண்டு பெண்கள் பேசிக்கொண்டே வந்தார்கள். ஒருவர் மலாய்ப்பெண். இன்னொருவர் தமிழ்ப்பெண்.
இருவருமே அதிகம் படித்தவர்கள் என்று சொல்ல முடியாதத் தோற்றம். .அந்த மலாய்ப்பெண் "எனக்கு ஃபேக்ஸ் (FAX) ன்னா என்னான்னே தெரியலே! என்னா செய்வாங்க, எப்படி அனுப்புவாங்கன்னு ஒன்னும் புரியலே!" என்று ஒருவாரு சொல்லிக்கொண்டே வந்தார். அதற்கு அந்தத் தமிழ்ப்பெண் "இது என்னா பெரிய விஷயம்! தெரியலேன்னா, தெரிஞ்சுக்கோ!" என்று சிரித்துக் கொண்டே அவருக்குப் பதிலளித்தார்.
அடா...அடா,,. எவ்வளவு பெரிய விஷயம் . சர்வ சாதாரணமாக அவர் சொல்லுகிறாரே! தெரியலேன்னா, தெரிஞ்சுக்கோ!
இதை நாம் தெரிந்து கொள்ளுவதற்கு எத்தனை தன்முனைப்புப் புத்தகங்களைப் படிக்க வேண்டியிருக்கிறது! எத்தனை தன்முனைப்புக் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது!
இந்தப் பெண்ணோ - இத்தனைக்கும் பெரிய படிப்பெல்லாம் படித்தவர் மாதிரி தெரியவில்லை - அவர் இப்படிப் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறாரே!
இது நம் அனவருக்குமே பொருந்தும். தெரியலைன்னா, தெரிஞ்சுக்குவோம்! அவ்வளவு தான்! இதில் நமக்கு என்ன பெரிய பிரச்சனை? தெரியலேன்னா நாம் எப்போதும் முட்டாளாக இருக்கப் போகிறோம்! தெரிந்து கொண்டால் ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக் கொண்டவராவோம். அவ்வளவு தான் விஷயம்!
நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ளுவதற்கு எத்தனையோ பேர் நம் அருகிலேயே இருப்பர். ஆனாலும் ஏதோ ஒரு தயக்கம். அவர்களை நாம் கேட்க முடியாது. காரணம் நம்மைவிட அவர் ஒரு படி கீழ் ஏன்று நாம் நினைக்கிறோம். அப்படியெல்லாம் பார்த்தால் எதையுமே நாம் தெரிந்து கொள்ள முடியாது.
நாம் நினைக்கும் நம்மைவிடத் தகுதி குறைவானவர்கள் சில துறைகளில் நம்மைவிடத் திறமையானவர்களாய் இருப்பார்கள். நாம் எல்லாருமே எல்லாத் துறைகளிலும் முற்றும் அறிந்தவர்கள் இல்லை. சில பொது விஷயங்களில் சிலர் பலே கில்லாடியாக இருப்பார்கள். சாதாரணமாக செய்து விட்டுப் போவார்கள்! பெரிய படிப்பு படித்தவர்கள் அவர்கள் முன் நிற்க முடியாது!
சில அரசாங்க அலுவலகங்களுக்குப் போகும் போது சில பாரங்களை நாம் பூர்த்திச் செய்ய வேண்டியிருக்கும். நமக்குச் சில புரியாது. நாம் விழித்துக் கொண்டிருப்போம். அதைவிட நமக்குப் பக்கத்தில் இருப்பவரிடம் கேட்டால் அவர் நமக்கு அதனைச் சொல்லிக் கொடுப்பார். அல்லது அங்குப் பணிபுரிபவர்களிடம் கேட்டாலே அவர்கள் நமக்குப் பதில் சொல்லுவார்கள்.
அந்தச் சில நிமிடங்களில் நம்மை அவர்கள் முட்டாள் என்று நினைத்து விட்டுப் போகட்டுமே! நாமோ, ஒன்றை நாம் புதிதாகக் கற்றுக் கொண்டோம் என்று நம்மை நாமே பாராட்டிக் கொள்ளுவோமே!
உண்மையைச் சொன்னால் யாரும் நம்மைப் பற்றி ஒன்றும் நினைக்கப் போவதில்லை. நமக்குச் சொல்லிக் கொடுப்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சியே! காரணம் நாம் அவர்களையும் ஒரு மனிதராக மதித்து அவர்களிடம் கேட்கிறோமே அதைவிட அவர்களுக்கு என்ன சந்தோஷம் இருக்கப் போகிறது!
எப்போதுமே முட்டாளாக இருப்பதைவிட சில நிமிடங்கள் முட்டாளாக இருந்து விட்டுப் போவேமே! ஒரு முறை தெரிந்து கொண்டால் அதற்கு பின்னர் அது நம்முடையது தானே! அப்படிச் சிந்திப்போம்!
நமது வாழ்க்கையில் நமக்குத் தெரியாதது எத்தனையோ! எத்தனையோ! அத்தனையையும் தெரிந்து கொள்ளவும் முடியாது! ஏதோ முடிந்தவரை தெரிய வேண்டியதைத் தெரிந்து கொண்டு வாழ முயற்சிப்போம்.
வேறு என்ன?
தெரியலியா? தெரிஞ்சிக்கிவோம்!
Labels:
கோடிஸ்வரர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment