Monday 30 May 2016

இப்படியும் ஒரு வழியிருக்கு! (2)


பத்தாங்காலி தமிழ்ப்பள்ளியில் பள்ளி மாணவிகளிடம் காலித்தனமாக நடந்து கொண்ட மலாய்மொழி ஆசிரியர்  என்ன  ஆனார்?

வேறு தமிழ்ப்பள்ளிக்கும் அவர் மாற்றப்படவில்லை. ஆனால் மாநிலக்கல்வி இலாகாவிற்கு அவர் பாதுகாப்பாக மாற்றப் பட்டிருக்கிறார்! அதுவும் தற்காலிகமே!  வேறு தமிழ்ப்பள்ளி தோதாக அமையும் வரை அவர் அங்குப் பணிபுரிவார். அவர் மேல் எந்த நடவடிக்கையும் கல்வி அமைச்சு இதுவரை  எடுக்கவில்லை!

இதன்  தொடர்பில் மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முதன்மை அமைப்பாளர் பாஸ்கரன் கூறும் போது தனக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக் கைவிரித்துவிட்டதாக செய்தி ஒன்று கூறுகின்றது. அதே சமயத்தில் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் டேனியல் அமலதாஸ் - மேலதிகாரிகளின் உத்தரவின்றி கருத்துரைக்க முடியாது  - என்று அவரும் பட்டும் படாமலும் பேசியதாக மேலும் அந்தச் செய்தி கூறுகின்றது. துணைக் கல்வி அமைச்சர் கமலநாதன் தனது அம்னோ எஜமானர்கள்  வாய்த் திறக்கச் சொன்னால் தான் வாய் திறப்பார்! ம.இ.கா. தலைவருக்கும் அதே நிலை  தான்! குனிந்த தலை இன்னும் நிமிரவில்லை!

இதனிடையே சமூக ஆர்வலர்கள் பலர் அந்த மலாய்மொழி ஆசிரியர் மீது  பெற்றோர்கள் காவல்துறையனிரிடம் புகார் செய்ய வேண்டும் என வற்புறுத்துகின்றனர்.  எந்தப்புகாரும்  செய்யாமலேயே காவல்துறையினர் பல பிரச்சனைகளைக் கையில் எடுத்திருக்கின்றனரே, இதனை மட்டும் ஏன் எடுக்கவில்லை,  என்று கேட்பவர்களும் உண்டு!

புகார் செய்வது என்பது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அதன் விளைவுகளைப் பார்க்க வேண்டும். இது இந்தியர் சம்பந்தப்பட்ட விஷயம். அதிலும் தமிழ்ப்பள்ளி மாணவிகள். காவல்துறையினர் அந்த ஆசிரியரை விசாரிக்கப் போவதில்லை. அந்த மாணவிகளை விசாரிப்பதில் தான் கூடுதல் கவனம் செலுத்துவர். அவர்கள் பெண் போலிஸை வைத்து விசாரிக்கப் போவதில்லை. காவல்துறையினர் அந்த மாணவிகளைக் கேலி கிண்டல்களோடு தான் அவர்கள் விசாரணை நடத்துவர். ஆசிரியரை அவர்களைத் தட்டிக் கொடுப்பர்! ஆக, இந்த நிலையில் பெற்றோர்கள் புகார் செய்வது அவர்களே தங்கள் தலையில் மண்ணை வாரிப்போட்ட கதை தான்!

ஒரு விஷயம் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு மலாய் ஆசிரியர் என்பதற்காக எத்தனை தில்லுமுல்லு வேலைகள் மேலிருந்து கீழ் மட்டம் வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, பாருங்கள்!

கல்வி அமைச்சின் தலையீடு, மாநிலக் கல்வி இலாக்காவின் தலையீடு, தமிழ் அமைச்சர்கள் வாய் திறக்காமல் இருக்கத்  தலையீடு, தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பார்கள் தலையிடாமல் இருக்கத் தலையீடு, பள்ளித் தலமையாசிரியர் தலையிடாமல் இருக்கத் தலையீடு,பெற்றோர் ஆசிரியர் சங்கம் தலையிடாமல் இருக்கத் தலையீடு - அடாடா! - ஒரு கயவனைத் தண்டிக்காமல் இருக்க எத்தனை கட்டுப்கோப்பாக  வேலை செய்கிறார்கள்! ஒரு நல்ல காரியத்திற்கு இப்படி கட்டுக்கோப்புடன் வேலை செய்தால் நாம் மகிழ்ச்சி அடையலாம்.

ஓர் ஆசிரியருக்கு இவ்வளவு அடைக்கலம் கொடுக்கும் அதிகாரிகள் ஒரு விஷயத்தை மறந்துவிட்டார்கள். நாளை அவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு இது நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும்  இல்லை! இப்போது அவர்கள் தமிழ்ப்பள்ளி மாணவிகள் என்பதால் மிகவும் அலட்சியும் காட்டுவதும், கேலியும் கிண்டலாகப் பிரச்சனையை அணுகுவதும் அவர்களுக்கு அது ஒரு தற்காலிக மகிழ்ச்சியை அளிக்கலாம். நாளை அதுவே அவர்களுக்கு ஒரு  பெரிய தண்டனையாக மாறும் என்பதை அவர்கள் எப்போதும் மனதில் இறுத்திக்கொள்ள வேண்டும்!

இதனைக் கல்வி அமைச்சினர் ஒரு விளையாட்டாகக் கருதுவதாகவே  நமக்குத் தோன்றுகிறது. பள்ளிகளில் சமயப் பாடங்கள் தினம் தினம் போதித்தாலும் இது போன்ற நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதுவும் ஆசிரியர்களே தவறான நடத்தை உள்ளவர்களாக இருப்பதை பார்க்கும் போது சமயப்பாடங்களும் ஒரு கண்துடைப்பு தானோ என்னவோ,  தெரியவில்லை!

இந்த மலாய் ஆசிரியரின் பிரச்சனை ஒரு முடிவுக்குக் கொண்டு வரபட்டுவிட்டதாக நான் நினைக்கவில்லை. எவ்வளவு தான் ஓர் ஆசிரியரின் தவறான செய்கைகளை மூடி மறைக்க முயன்றாலும் அது ஒரு நாள் வெடிக்கத்தான் செய்யும்! இதுவே ஒரு சீனப்பள்ளியில் நடந்திருந்தால் இந்நேரம் அந்த ஆசிரியர் எங்கு இருப்பார் என்பதை நம்மால்  ஊகிக்க முடியவில்லை! அனைத்து சீன மக்களுமே பொங்கி எழுந்திருப்பார்கள்! தமிழ்ப்பள்ளி என்பதால் அவருக்கு இப்போது  நல்ல நேரம்!

பொறுத்திருப்போம்; உண்மை உறங்குவதில்லை!







No comments:

Post a Comment