Thursday 19 May 2016

டத்தோஸ்ரீ பழனிவேலு அவர்களே....!


டத்தோஸ்ரீ பழனிவேலு அவர்களே! உங்களைப் பற்றி எழுத வேண்டும் என்று எனது மனதிலே ஓர் ஆசை. இன்று தான் அதற்கு வாய்ப்புக் கிடைத்தது. மகிழ்கிறேன்!

உங்களைப் பற்றியான விமர்சனங்கள் பல இருக்கலாம்.  ம.இ.கா. (மலேசிய இந்தியர் காங்கிரஸ்) சரித்திரத்தில் நீங்கள் மட்டும் தான் மிகவும் பலவீனமானத் தலைவர் என்று  ம.இ.கா.வினர் கூறுகின்றனர். நீங்கள் ஒர் ஐயப்ப பக்தர் என்றும் எப்போதும் ஏதோ பக்தி நிலையிலேயே இருப்பதாக ஒரு குற்றச் சாட்டு! தமிழனுக்குப் பக்தி என்பது கூட கேலிக்குரிய ஒன்றாகப் போய்விட்டது!

நான் அப்படி நினைக்கவில்லை. பக்தி என்பது உங்களது பலம் என்றே நினைக்கிறேன்.

உங்களுக்கு முன்னர் ம.இ.கா. பல தலைவர்களைக் கண்டிருக்கிறது. ஆனால் பாருங்கள் நீங்கள் இருந்ததோ சில வருடங்கள் தான். அந்த சில வருடங்களில் நீங்கள் செய்த சாதனையை வேறு யாரும் சாதிக்கவில்லை.நமது மாணவர்களுக்கு நீங்கள் செய்த உதவி என்பது எக்காலத்திலும் மறக்க முடியாதது.

பிரதமருடன் நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதன் பலன் இன்று பல மாணவர்கள் - எத்தனையோ ஏழை மாணவர்களுக்கு  - நல்லதொரு பலனை அளித்திருக்கிறது.

மெற்றிக்குலேஷன் கல்வி மட்டும் அல்ல; பல மாணவர்கள் பல்கலைக்கழகங்களிலே பயில்கின்றனர். தொழில்நுட்பக் கல்லுரிகளிலே படிக்கின்றனர்.. இதை எல்லாம் உங்களுக்கு  முன்னர் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

நிதிச் சுமை என்பதாலேயே பல ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. ஆனால் இன்று பல ஏழைக் குடும்பங்களின் பிள்ளைகள் உயர்கல்வி பயிலுகின்றனர். பெற்றோர்களின் முகங்களிலே மகிழ்ச்சி! மாணவர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

ஆனாலும் நமது பெற்றோர்கள் செய்கின்ற சில காரியங்கள் நமக்கு வருத்தத்தை அளிக்கின்றது.வெளி மாநிலங்களில் கல்வி பயில பெற்றோர்களே தடையாக இருக்கின்றார்கள்! அதுவும் ஆண் பிள்ளைகளை! பிள்ளைகள் கெட்டுப்போய் விடுவார்களாம்! இப்போது கெட்டுப்போகிறவன் எல்லாம் வீட்டிலிருந்து தானே கெட்டுப் போகிறான்! எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தன்னுடைய ஒரே ஒரு பெண் பிள்ளையை கல்வி பயில சபா மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார். அவர் கல்வியை முடித்து இப்போது கோலாலம்பூரில் முனைவர் பட்டத்திற்குப் படித்துக் கொண்டிருக்கிறார்.பெற்றோர்கள் மனம் மாறுவார்கள் என நம்பலாம்.

நான் பல மாணவர்களை - கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்களை - அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறேன். பல துறைகளில் கல்வி பயிலுகின்றனர்.

உண்மையில் நான் மகிழ்ச்சியடைகிறேன். முன்பெல்லாம் தொழில்நுட்பக் கல்லுரிகளில் கல்வி பயில எவ்வளவு 'கெடுபிடி' என்பது எனக்குத் தெரியும். இப்போது அனைத்தும் 'தாராள'  மயமாக்கபட்டது குறித்து மகிழ்ச்சி
அடைகிறேன்!

டத்தோ! இந்த இந்திய சமுதாயம் மறக்க முடியாத ஒரு நபர் நீங்கள்! குறிப்பாக கல்வித் துறையில் நீங்கள் செய்தது சாதனையே!

நீங்கள் செய்த இந்தச் சமுதாயப் பணிக்காக நீங்கள் நீடுழி வாழ வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்! வாழ்த்துகள்!




No comments:

Post a Comment