Sunday 8 May 2016

பொருளாதார வலிமை பெறுவோம்


இன்று இந்தத்  தமிழ்ச் சமூகம் பொருளாதாரம் என்று வரும் போது நாம்  பின் தங்கியிருக்கிறோம் என்பது நமக்கு அனைவருக்குமே புரிகிறது.

உலகளவில் நாம் ஒரு பெரிய சமூகம். சுமார் 13 கோடி தமிழர்கள் வாழ்கின்றோம். அது ஒரு பெரிய எண்ணிக்கை. மலேசியாவிலும் நாம் மூன்றாவது பெரிய சமூகம். நமது எண்ணிக்கை சுமார் 20 இலட்சம் என்று கணக்கிடப்படுகிறது.

மலேசியாவில் நமது பொருளாதாரம் வலுவானதாக இல்லை. உண்மையைச் சொன்னால் இப்போது தான் பொருளாதாரம் மிக முக்கியமானது என்பது நமக்குப் புரிய ஆரம்பித்திருக்கிறது.

அரசாங்க ஆதரவு இல்லாமல் -  சரியான பொருளாதார பிண்ணனி இல்லாமல் - நமது முன்னேற்றத்தில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மையே. அரசாங்கம் சிறிய தொழில்களுக்கு  நிதி ஒதுக்கீடு செய்தாலும் அந்த நிதியும் சரியான  முறையில் சிறு தொழில் செய்பவர்களுக்குப் போய் சேருவது இல்லை என்னும் குற்றச்சாட்டும் உண்டு. அந்த நிதி பெரிய வர்த்தகர்களுக்குத் தான் பயன்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

ஆனாலும் இப்படியே நாம் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக்கொண்டே போவதில் எந்தப் பயனுமில்லை. அரசாங்கம் கொடுத்தால் நல்லது. கொடுக்காவிட்டால் அதைவிட  நல்லது என்னும் மனப்போக்கை நாம் கொண்டிருக்க வேண்டும்.

சீனர்களின் பொருளாதார முன்னேற்றம் என்பது அரசாங்க உதவினால் ஏற்பட்டதல்ல. சிறிய தொழிலில் ஈடுபட்டு பின்னர் அதனை பெரிய தொழிலாக மாற்றி அமைத்தவர்கள் சீனர்கள். நமது தமிழ் முஸ்லிம்  நணபர்கள், நமது நகரத்தார் சமூகம் அனைவருமே சிறு தொழில்களிருந்து பின்னர் தங்களது தொழில்களைப் பெரிய தொழில்களாக வளர்ச்சி அடையச் செய்தவர்கள்.

இன்று மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் ஆனந்தகிருஷ்ணன்   என்பது நமக்கு அனைவருக்குமே தெரியும்.  நமக்கும் அதில் பெருமையே. ஆனாலும் நமது இன்றைய இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர் - ஏர் ஏசியா விமானத்தின் -  டோனி ஃபெர்னாண்டஸ்.  மிகவும் சுறுசுறுப்பும் எப்போதும் உற்சாகமாகத் திகழும் அவர் நமது இளைஞர்களுக்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டு. கடனில் மூழ்கியிருந்த ஒரு விமான நிறுவனத்தை இரண்டு வெள்ளிக்கு வாங்கி - அந்த விமானத்தின் கோடிக்கணக்கான கடன்களை இரண்டே  ஆண்டுகளில் கட்டி முடித்தவர்!  அவர் செய்த ஒரே மாற்றம்:  அந்த விமானத்தை மலிவு கட்டண விமானமாக்கி மலேசியர்களை உலகம் பூராவும் பயணிக்க வைத்தார். 

இன்று அவர் தயவால் தான் தமிழ் நாடு, இந்தியா இன்னும் பல நாடுகளுக்கு   நாம் மலிவு கட்டணத்தில் பயணம் செய்கிறோம். இன்று ஏர் ஏசியாவில் தான் நமது இன இளைஞர் பலர் விமான ஓட்டுனர்களாகவும், விமானப் பணீபெண்களாகவும் அதிகமான எண்ணிக்கையில் பணி புரிகின்றனர்.

ஆமாம், இளைஞர்களே! இந்தத் தமிழினத்தின் முன்னேற்றம் என்பது நம்மோடு நின்றுவிடவில்லை. நமது இனத்திற்கும் அது பொருளாதார வலிமையைக் கொண்டு வரவேண்டும்.

நமது நோக்கம் பொருளாதார வலிமைக்கான நோக்கமாக இருக்க வேண்டும். யாருக்கோ வேலை செய்து அதுவே பெருமை என்னும் மனப்போக்கை நாம் அகற்ற வேண்டும்.

பொருளாதார வெற்றியே நமது தமிழ் இனத்தின் பெருமை!

No comments:

Post a Comment