Thursday 28 April 2016

பெருசா..! பெருசா..!

டொனால்ட் ட்ரம்ப் ...உருவத்தில் மட்டும் பெரியவர் அல்ல. உயரத்தில் மட்டும் பெரியவர்  அல்ல.  எல்லா...எல்லாவற்றிலும்  உயர்ந்த  மனிதர்!

சின்ன சின்ன சங்கதிகளை எல்லாம் அவர் யோசித்துப் பார்ப்பதில்லை. எதைச் செய்தாலும் அது பெரியதாக இருக்க வேண்டும். பெரிசா...பெரிசா.. சிந்திக்கும் மனப்போக்குடையவர்.

ஆமாம்! உங்களுக்குப் பணம் தானே வேண்டும்?  அப்புறம் ஏன் அதனைப் பிச்சைக்காரத்தனமாக யோசிக்கிறீர்கள்? பெரியதாகவே யோசியுங்கள். பெரிய அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று யோசியுங்கள்.

ஆமாம்! டொனால்ட்  அப்படியே சிந்தித்து சிந்தித்துப்  பழக்கப்பட்டவர்.  நம்மையும் அப்படியே சிந்திக்கும்படி தூண்டி விடுகிறார்!

டொனால்ட் அமரிக்காவில் மிகப்பெரிய தொழிலதிபர்.  ஹொட்டல்கள், சூதாட்ட மையங்கள், தொலைக்காட்சி தயாரிப்பு, சொத்துக்கள் விற்பனையாளர், எழுத்தாளர்  என்று  பன்முகம் கொண்ட மனிதர். கடைசியாக அரசியலிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அமெரிக்க  ஜனாதிபதியாக வருவாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

டொனால்டின் தந்தையாரின் தொழில்  தச்சுத் தொழில். பின்னர்  மலிவான வீடுகளைக்கட்டி அவைகளை நடுத்தர குடும்பங்களுக்கு விற்றும், வாடகைக்கு விட்டும் வந்தவர். ஆரம்பக் காலத்தில் டொனால்டும் அவருடன் சேர்ந்து தனது திறமைகளை வளர்த்துக் கொண்டவர். பின்னர், தனக்கு ஒரு பாதை, தனக்கு ஒரு வழி என்று பெரியதாக யோசிக்க ஆரம்பித்தார்.

அவர் தந்தையார் இறந்த போது அவரின் சொத்து மதிப்பு  நானூறு மில்லியன் என்று மதிப்பிட்டாலும் அது மற்ற வாரிசுகளுக்கும் சேர்த்துத் தான். ஆனாலும் இப்போது டொனால்டின்  சொத்துக்கள் அனைத்தும் அவரே சம்பாதித்தவை.

அதன் பின்னர் தான் வானளாவிய கட்டடங்கள், பிரமாண்ட .. பிராமாண்டமான பல கோடிகோடிகளைத் தாண்டும் திட்டங்கள் என்று அவர் செய்யாதவை  ஒன்றுமில்லை. இப்படிப் பிரமாண்டங்களுக்கு நடுவே அவருக்குப் பலமான அடியும் விழுந்திருக்கிறது! அனைத்தையும் இழந்து, கையைப் பிசைந்து கொண்டு நிற்கையில் ஒரு விருந்துக்குப் போக வேண்டிய கட்டாயம். அங்கு அவர் ஒரு வங்கியாளரைச் சந்திக்க வேண்டி நேர்ந்தது. அந்த வங்கியாளர் டொனால்டுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கி அவர் மீண்டும் தொழிலுக்குத் திரும்ப ஊக்கமூட்டினார். அதன் பின்னர் அவருக்கு அனைத்தும் வெற்றியே!

அந்தத் தோல்விக்குப் பின்னர் டொனால்டு நமக்குக் கொடுக்கும் அறிவுரை என்ன? "படித்துக் கொண்டே இருங்கள். தொழில் சம்பந்தமான புத்தகங்களைப் படித்துக் கொண்டே இருங்கள். உங்களுக்கு எங்காவது ஒரு பொறி தட்டும். அது போதும் மீண்டும் உங்களை எழுச்சிபெற செய்ய!"

பெருசோ! சிறுசோ! தோல்வி என்பது டொனால்ட் ட்ரம்ப்புக்கும் உண்டு! நமக்கும் உண்டு! மனம் தளராமல்,  வெற்றி பெறுவது தான் நமது நாட்டமாக இருக்க வேண்டும்!

No comments:

Post a Comment