Friday 29 April 2016

புதிய பட்டதாரிகளா? கொஞ்சம் கவனியுங்கள்!

கல்லூரிகளிலிருந்து புதிய கனவுகளோடு வெளியாகும் பட்டதாரிகளே! இதையும் கொஞ்சம் கவனியுங்கள்.

என்ன தான் உங்கள் படிப்பு அனைத்தும் தேசிய மொழியில் இருந்தாலும் நீங்கள் வேலைக்கு மனு செய்யும் போது ஆங்கிலத்தில் தான் மனு செய்ய வேண்டும் என்பது நீங்கள் கல்லூரிகளிலிருந்து  வெளியாகும் போதே உங்களுக்கு "கிளிப்பிள்ளை" பாடம் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்!

அது தவறில்லை தான்! ஆனாலும் நீங்களும் அது சரிதானா அல்லது ஏதாவது மாறுதல்கள் செய்ய வேண்டுமா என்பதைக் கொஞ்சம் அலசி ஆராய வேண்டும். சில பேர் கணினியில் புகுந்து விளயாடுகின்றனர்.  எல்லாமே சரிதான்.

நமக்கும் கொஞ்சம் பொது அறிவு வேண்டும். நாம் என்ன வேலைக்கு மனு செய்கிறோம்; நாம் சரியாகத்தான் செய்கிறோமா அல்லது புரிந்து கொண்டு தான் செய்கிறோமா என்பதைச் சிந்தித்துப் பார்த்து நாம் செயல்பட வேண்டும்.

சிலர் மனு செய்வதைப் பார்க்கும் போது நமக்கும் பாவமாகத் தான் இருக்கிறது!

இதோ நமது பட்டதாரி மாணவர்களின் சில எடுத்துக்காட்டுக்கள்:

                      NATIONALITY;             BLUE
                      NATIONALITY:             INDIA
                      POSITION:                    APPLICATION FOR EXPECTED SALARY


இது போன்ற கோமாளித் தனங்கள்  நிறையவே உண்டு!


பட்டதாரிகளே!  உங்கள் ஆங்கிலத் திறன் பற்றி நாங்கள் அறிவோம்.பார்க்கப் போனால் உங்கள் ஆங்கில விரிவுரையாளர்களை விட உங்களுக்கு இன்னும் அதிக ஆங்கில அறிவு உண்டு! அவர்கள் உங்களுக்கு மலாய் மொழியில் தான் ஆங்கிலம் போதிக்கின்றனர்! மலாய் மொழியில் தான் பேசுகின்றனர்! நீங்கள் அவர்களை விட பல மடங்குகள் மேல்!

ஆனால் அவர்களோடு உங்களை ஒப்பிடாதீர்கள். அவர்களுக்கு நிரந்திர வேலை உண்டு. அவர்களுடைய ஆங்கிலத்திறனைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை! கல்லுரிகளும் கவலைப்படப் போவதில்லை! அது அவர்களுக்கு அரசியல்! நீங்கள் இப்போது தான் வேலை தேடுகிறீர்கள். ஆங்கிலப் பத்திரிக்கைகளைப் படித்து உங்களது ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அரசாங்க வேலை தான் உங்கள் இலக்கு என்றால் இருக்கின்ற ஆங்கிலமே உங்களுக்குப் போதும்! ஆனால் தனியார் துறை என்றால்  உங்களிடம் இன்னும் அதிகமாகவே ஆங்கிலத் திறனை எதிர்பார்க்கிறது.

எத்தனையோ விஜய் படங்களைப் பார்க்கிறோம்.எத்தனையோ கமலஹாசன் படங்களைப் பார்க்கிறோம். பல மணி நேரங்களை எப்படி எப்படியோ வீணடிக்கிறோம். நம் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு முக்கிய மொழியைக் கற்க சில மணித்துளிகளை ஒதுக்கி உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளுங்கள்! குறைந்த பட்சம் எப்படி வேலைக்கு மனு செய்வது என்பதையாவது கற்று, தெளிந்து மனு செய்யுங்கள்.

நீங்கள் வெர்றி பெற வாழ்த்துகள்!


                   




         


No comments:

Post a Comment