Wednesday 12 July 2017

கேள்வி - பதில் (51)


கேள்வி

தமிழக மீனவர்களை இலங்கை அரசு மனிதர்களாகக் கூட மதிக்க மாட்டர்கள் போல் தோன்றுகிறதே?

பதில்

உண்மையே! மதிக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறார்கள். காரணம் தமிழக நிலவரம் அப்படி. இன்று தமிழகத்தில் ஒரு வலுவான அரசியல் இருந்தால் இப்படியெல்லாம் நடக்காது. நடக்கவும் துணிய மாட்டார்கள்.

"தடை செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டு மீன் பிடிப்பவர்களுக்கும்,  அத்து மீறல் செய்யும் படகுகளுக்கும் 2 கோடி முதல் 20 கோடி வரை அபராதமும், இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும்" என்கிற புதிய சட்டம்  இலங்கை அரசாங்கம் தமிழக மீனவர்களை  மனிதர்களாகக் கூட மதிக்கவில்லை என்றே எடுத்துக் கொள்ளலாம். அதே போல இந்திய அரசாங்கமும் தமிழக மீனவர்களை இந்தியர்களாகவும் ஏற்றுக்கொள்ளவில்லை, தமிழர்களாகவும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே சொல்லலாம்.  இப்படி ஒரு சட்டம் இயற்றப்படுவதற்கு இந்தியாவின் ஆசியும் அவர்களுக்கு உண்டு என்பதைத்தான் இது காட்டுகிறது. இந்திய அரசு எந்த ஒரு கருத்தையும் கூறாமல் மௌனமாக இருப்பதே அதற்குச் சான்று.

மோடி அரசு இரண்டு விதமான இலாபங்களை இதன் மூலம் அடைந்திருக்கிறது என்று சொல்லலாம். மோடியின் செல்லப்பிள்ளை என்று சொல்லப்படும் இலங்கை அரசு, தமிழகத்திற்கு எதிராக செய்யும் அனைத்துக் காரியங்களுக்கும் இலங்கை அரசுக்கு ஆதரவு அளிக்கிறது. அடுத்து,  ஒட்டு மொத்த தமிழக ஆளுங்கட்சி ஒரே குரலில், தமிழகத்திற்கு எதிராக மோடி அரசு எதனைச் செய்தாலும், அதனையும் ஆதரிக்கத் தயார் நிலையில் இருக்கிறது. ஆக, மோடி தமிழகத்திற்கு என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறாரோ அத்தனையும் அவரால் இப்போது செய்ய முடியும். அனைத்தும் தமிழர் நலனுக்கு எதிரானது என்பது தான் வருத்தமான செய்தி.

தமிழ் நாட்டை ஏதோ அயல் நாடு போல் பிரதமர் மோடி எண்ணுவதே இப்போது தமிழ்  நாட்டுக்கு உள்ள பிரச்சனை. அவர் எப்போது தமிழ் நாடு இந்தியாவின் ஒரு மாநிலம் என்று எண்ணுகிறாரோ அப்போது தான் தமிழ் நாட்டுக்கு விடிவு காலம் வரும்.

அது வரை தமிழக மீனவர் பிரச்சனை தொடரத்தான் செய்யும். சுட்டுத்தள்ளத்தான் செய்வார்கள். பறிமுதல் நடக்கத்தான் நடக்கும்.  பார்த்துக்  கொண்டிருப்பது தான்  தமிழனின் இன்றைய நிலை.

கேட்க நாதியற்ற சமுகமாக இன்று தமிழன் வாழ்கிறான். ஐயா! கலைஞரே வாழ்க! ஐயா! ஸ்டாலினாரே வாழ்க! இருவருமே சேர்ந்து கச்சத்தீவை சிங்களவனுக்குத்  தாரை வார்த்தீர்கள். இப்போது நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறீர்கள்.  தமிழன் அழுது கொண்டிருக்கிறான்.


No comments:

Post a Comment