Thursday 20 July 2017

தாய்மொழிப் பள்ளிகள் தேவையா?


தாய் மொழிப் பள்ளிகள் தேவையா, அவசியமா என்னும் கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. இன்றைய நிலையில் சீன,  தமிழ் பள்ளிகளே தாய் மொழிப்பள்ளிகளாக குறிப்பிடப்படுகின்றன. 

எல்லாவற்றையும் போல இதிலும் அரசியல் இருக்கிறது. தாய் மொழிப்பள்ளிகள் வேண்டவே வேண்டாம் என்று ஒருவர் சொன்னால் அவர் பெரிய ஹீரோவாகக்  கருதப்படுவோர்! வேண்டும் என்று சொன்னால் அவர் இனத் துரோகி என முத்திரைக் குத்தப்படுவார்!  அதனால் வேண்டாம் என்று சொல்லுவதையே பலர் விரும்புவர்.

சமீபத்திலும் அது நடந்திருக்கிறது. இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர், கைரி ஜமாலுடின்,                     பெட்ரோனாஸ் பணியாளர்களுடனான ஒரு கலந்துரையாடலில் இந்தக் கேள்வியை எழுப்பினார்.  ஒரே மொழிக் கொள்கை, அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பள்ளி, ஒரே கல்வி என்பது நாட்டில் ஒற்றுமையை வளர்க்கும் என்பதாக அவர் கூறினார். இதனை அனைவரும் ஏகமானதாக ஏற்று, ஆரவாரத்துடன் கைதட்டி வரவேற்றனர்.

அதே சமயத்தில் இன்னொரு கேள்வியையும் அவர்கள் முன் அவர் வைத்தார். இந்தக் கல்விக் கொள்கையை எதிர்ப்பவர்கள் சொல்லுகின்ற வாதம் உங்களுக்கு ஏற்புடையதா என்றும் அவர் வினவினார்.  அது என்ன?  "முற்றிலும் மலாய் மாணவர்கள் தங்கிப் படிக்கும் மலாய்ப் பள்ளிகளின் நிலை என்ன?" என்பது தான். கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களில் அனைவரும் மௌனம் காத்தனர்!

நாம் அந்தக் கேள்வியைக் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? இது நாள் வரை பல ஆயிரம் மாணவர்கள் இது போன்ற விடுதிகளில் படித்து வெளியாகியிருக்கும் ஒரே இன மணவர்களால்  என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது? எல்லாம் மலாய் மாணவர்கள். அதே போல எல்லாம் சீன மாணவர்கள், அதே போல எல்லாம் இந்திய மாணவர்கள். உண்மையைச் சொன்னால் அப்படி  யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லையே! ஒரே இன மாணவர்களாக இருந்தாலும் வெளி உலகிற்கு வரும் போது பல இன மாணவர்களாத் தானே வர வேண்டியுள்ளது. இதில் என்ன இன ஒற்றுமை என்னும் சாயம் பூச வேண்டியுள்ளது!

இன ஒற்றுமை என்பது மொழி சார்ந்த பள்ளிகளில் இல்லை. இது தேசிய பள்ளிகளில்  ஆசிரியர்களால் விதைக்கப்படுகின்ற விஷ விதை. அதைத்தான் வேரறுக்க வேண்டுமே தவிர, தேவை இல்லாமல் தாய் மொழிப்பள்ளிகளை ஒழிக்க வேண்டும் என்னும் கோஷம் ஒடுக்கப்பட வேண்டும்! ஒழிக்க வேண்டும் என்பவர்கள் சரித்திரம் அறியாதவர்கள். பள்ளியில் படிக்கும் போது சரித்திரத்தைப் படிக்காமல் உபத்திரவம் பண்ணியவர்கள்! இவர்களுக்குச் சரித்திரமும் இல்லை சமகால அறிவும் இல்லை! 

அறைகுறை அறிவோடு பேசுவதல்ல தாய்மொழிக்கல்வி.            தாய்மொழி வழிக் கல்வி என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும்! நிலைத்திருக்கவே செய்யும்!

No comments:

Post a Comment