Wednesday 5 July 2017

மஞ்சளை வெறுக்கும்....?


தினசரி வாழ்க்கையில் நம் வீட்டுப் பெண்கள் நிறையவே மஞ்சளைப் பயன் படுத்துகிறார்கள்.  பல வகைகளில்; அதில் மஞ்சளை முகத்தில் பூசுவதும் ஒன்று. ஆம்; நமது பெண்கள் மஞ்சளை ஒப்பனைப் பொருளாகவும் பயன் படுத்துகின்றனர். இன்றளவும் அது தொடரத்தான் செய்கிறது.  ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மஞ்சள் நம்மோடு கலந்துவிட்டது. அதனை யாரால் வெறுக்க முடியும்? வெறுக்க முடியுமா? முடியும்!

 தமிழர்களில் ஒரு சிறுபான்மையினர் மஞ்சளை வெறுக்கின்றனர். இன்னும் சொல்லப் போனால் மஞ்சள் நிறத்தைக் கூட வெறுக்கின்றனர். 

சமீபத்தில்  நக்கீரன்  இணைய தளத்தில் "மஞ்சள்" என்னும் நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது. முழுமையாக இல்லை என்றாலும் ஒரு சிறு பகுதி தான். அது போதும், அது சொல்ல வரும் செய்தினைப் புரிந்து கொள்ள.

அருந்ததி என்று சொல்லப் படுகின்ற ஒரு சிறுபான்மை தாழ்த்தப்பட்ட தமிழினம். அவ்ர்கள் தமிழர்கள் தான். ஆனால் அவர்கள் செய்கின்ற வேலை தான் நம்மைத் தலை குனிய வைக்கிறது.  தமிழன் இவ்வளவு கேவலமானவனா என்று நினைக்கத் தோன்றுகிறது.  ஒரு சகத் தமிழனை, தமிழன் நடுத்துகின்ற விதத்தைப் பார்க்கின்ற போது - இதற்கு யார் பொறுப்போ - அவன் நான்று கொண்டு தான் சாவான். அது தான் அவன் தலையில் எழுதப்பட்ட விதி!

மலத்தை கையால் அள்ளுகின்ற இந்த அருந்ததியினர் தனது சக மனிதனைப் பற்றி என்ன நினைப்பர்? இதற்கு யார் பொறுப்பு? அரசாங்கம் இதனை மாற்ற முடியாதா? மனம் வைத்தால் எல்லாமே முடியும். மற்ற நாடுகளிலெல்லாம் மலத்தைக் கையால் தான் அள்ளுகிறார்களா?  மற்ற நாடுகளில்லெல்லாம் முடியும் போது தமிழ் நாட்டில் முடியாதா?

சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் இதற்கு ஒரு முடிவு கட்டமுடியவில்லை என்றால் அதிகாரத்தில் உள்ளவர்கள் என்ன செய்கின்றார்கள்? இதனை ஒரு கேவலமாக அவர்கள் நினைப்பதில்லையா?

இந்த மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு இந்த வேலையைச் செய்கின்றனர். வேறு வேலைகள் கொடுக்க அவர்களுக்கு ஆளில்லை. கொடுக்க யாரும் தயாராக இல்லை. அவர்கள் பிள்ளைகள் பள்ளிக்குப் போக முடிவதில்லை. பள்ளியில் அவர்கள் ஒதுக்கப்படுகின்றனர். பள்ளிகளுக்குப் போனாலும் அங்கும் அவர்களுக்கு அந்த மலம் அள்ளும் வேலைக் கொடுக்கப் படுகின்றது.  படித்த ஆசிரியனே இவர்களை ஒதுக்குகின்றான். ஒரு சமூகத்தையே முன்னேற விடாமல் துரத்தி துரத்தி அடிக்கின்றனர். திரும்பத் திரும்ப  அந்த மக்கள் பிழைக்க வழியில்லாமல் அந்த மலக்குழியிலேயே இறங்கி வேலை செய்ய வற்புறுத்தப் படுகின்றனர். அவர்களைப் பாதுகாக்க எல்லா சட்டங்களும் இருந்தும் சட்டம் அதிகாரத்தில் உள்ளவர்களால் அசிங்கப்படுத்தப்படுகின்றது.

இந்த அருந்ததி மக்களின் சராசரி வயது நாற்பத்தைந்துக்கு மேல் போவதில்லை. பலதரப்பட்ட வியாதிகள் இவர்களுக்கு உண்டு.  அவர்கள் சாராயம் போட்டுத் தான் தங்களது வேலைகளைச் செய்ய முடியும். அந்த நாற்றத்தில் வேலை செய்ய வேறு வழியில்லை. அந்த நாற்றத்தைப் போக்க ஏதாவது 'செண்ட்' அடித்துக் கொள்ளுகின்றனர். கையால் மலத்தை அள்ளுவதால் கையால் சாப்பிட முடிவதில்லை. தங்களைச் சுற்றி அந்த நாற்றம் சுழன்று கொண்டே இருக்கும். 

இவர்களின் அவலத்தை யாரும் கண்டு கொள்ளுவதாகத் தெரியவில்லை. அரசியல் தான் பண்ணுகிறார்களே தவிர அருந்ததியரைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆமாம், அருந்ததியர்கள் இல்லாவிட்டால் இந்த மேல்தட்டு வர்க்கம் என்ன செய்யும்?  ஏதாவது ஒரு வழியைக் கண்டுப்பிடித்துத் தானே ஆக வேண்டும்? அதை இப்போதே செய்தால் என்ன?

ஆமாம், ஏன் இந்த மஞ்சள்? மலம் மஞ்சள் தானே அவர்கள் வெறுக்கத்தானே செய்வார்கள். 




No comments:

Post a Comment