Tuesday 18 July 2017

கேள்வி - பதில் (52)


கேள்வி

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவார் என பேச்சு அடிபடுகிறதே!

பதில்

வரலாம்; வராமலும் போகலாம். அவரிடமிருந்து உறுதியான பதில் இல்லை. ஏதோ மேலோட்டமாக கூறியிருக்கிறார். 

பொதுவாக அவர் அரசியலை விரும்பாதவர்.  ஆனாலும் ஒரு சிலரின் தேவையற்ற பேச்சின் மூலம் அவரை வம்புக்கு இழுக்கிறார்கள்.  அதுவும் குறிப்பாக ஊழலிலேயே சுழன்று கொண்டிருக்கும் அ.தி.மு.க. அமைச்சர்கள் தங்களை பெருந்தலைவர் காமராசர் போல நினைத்துக் கொண்டு சவால் விடுகிறார்கள்! எதற்கு எடுத்தாலும் அம்மாவின் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்கிறார்கள்! அவர்கள் உண்மையைத் தான் சொல்லுகிறார்கள்.  அம்மாவின் ஆட்சி என்பதென்ன? ஊழல் ஆட்சி தானே! அந்த ஊழல் ஆட்சி இன்னும் ஏன் தொடர வேண்டும்?  அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. இனி அம்மாவின் ஆட்சி தொடர வாய்ப்பில்லை!

ஆமாம், இந்த அமைச்சர்கள் ஏன் இந்த அளவுக்கு கமல் மேல் வெறுப்பைக் காட்டுகிறார்கள்?  உண்மையில் இது வெறுப்பல்ல. தமிழ் நாட்டில் இப்போதைக்குப் பிரச்சனைகள் அதிகம். அதனை சமாளிக்கும் திறன் இந்த அரசாங்கத்திற்கு இல்லை. நெடுவாசல்,  குடிநீர் தட்டுப்பாடு,  விவசாயிகளின் தற்கொலை, மருத்துவ மாணவர்கள், நீட்  என்று இப்படிப் பிரச்சனைகள் நீண்டு கொண்டே போகிறது! அமைச்சர்கள் பிரச்சனைகளைக் கிடப்பில் போட்டுவிட்டு ஜெயிலில் இருக்கும் சின்னம்மாவிற்கு சேவகம் செய்யும் கட்டாயத்தில் இருக்கிறார்கள்! இன்னொரு பக்கம் பா.ஜ.க. செய்கின்ற ஒவ்வொரு அநியாயத்திற்கும் தலையை ஆட்ட வேண்டும் ஆட்டாவிட்டால் ஊழல் வழக்கில் சிக்க வேண்டி வரும்! இப்போது தமிழக அரசாங்கம் வெறும் சுழியம்! அதனால் தமிழக மக்களுக்கு ஆக வேண்டியது எதுவும் இல்லை! அதனால் கமல்ஹாசனின் அரசியல் பேச்சு அவர்களைத் தேடி வந்த வரப்பிரசாதம்! பிரச்சனைகளிலிருந்து தப்புவதற்கு அவரைச் சாடிக் கொண்டிருக்கிறார்கள்!

என்னைக் கேட்டால் கமல்ஹாசன் அரசியலுக்கு வரமாட்டார் என்பதே எனது எண்ணம். வந்தாலும் ஆட்சேபணை இல்லை. கடந்த ஆட்சிகளை விட நல்லாட்சியையே கொடுப்பார்!

No comments:

Post a Comment